அன்பானவர்களே, 2026ம் ஆண்டு 'எழுந்து கட்டும் ஆண்டு' என்று தெய்வீகமாக நியமிக்கப்பட்டுள்ளது. ஆண்டவர், உடைந்தவை, தாமதமானவை, பாழானவை, இடிபாடுகளுக்குள் கிடப்பவை எல்லாவற்றையும் சீர்ப்படுத்தி, நேர்த்தியாக மறுபடியும் கட்டக்கூடிய காலமாக இந்தப் புத்தாண்டை ஆசீர்வதிக்கிறார். "எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்," (எபிரெயர் 3:4)என்று வேதம் கூறுகிறது. சகலவற்றையும் ஆறு நாட்களாக சிருஷ்டித்த தேவனாகிய கர்த்தரே 2026ம் ஆண்டில் எல்லாவற்றையும் மறுபடியும் கட்டுகிறவராயிருக்கிறார். அவர் நம் குடும்ப, தனிப்பட்ட, ஊழிய வாழ்க்கைகளை, ஆவிக்குரிய அஸ்திபாரங்களை மறுபடியும் கட்டுவார். ஆண்டவர், "மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்," (எரேமியா 31:4)என்று வாக்குக்கொடுத்துள்ளார். ஆகவே நாம் இந்த ஆண்டுக்குள் தைரியமாக, விசுவாசத்தோடும், எதிர்பார்ப்போடும், தேவன், முன்பு துக்கம் மேலிட்ட இடத்தில், நம்மை கட்டுகிறவராக, சந்தோஷத்தை திரும்ப தருகிறவராக, பணிந்துகொள்கிறவராக, கொண்டாடக்கூடியவராக முன்செல்கிறார் என்பதை அறிந்தவர்களாக பிரவேசிப்போம்.

தெய்வீக கனத்துடனும் சமாதானத்துடனும் மறுபடியும் கட்டப்படுவீர்கள். வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று என்று வேதம் கூறுகிறது (மத்தேயு 21:42).  நிராகரிக்கப்பட்டவர்கள், கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்கள், தகுதியற்றவர்கள் என்று கூறப்பட்டவர்களை தேவன் மூலைக்கல்லாக நாட்டுகிறார். பகைவர், பிரயோனமற்றவர் என்று நிராகரிக்கும்போது தேவன், தமது கிரியையின் அஸ்திபாரமாக உங்களைப் பயன்படுத்துவார். ஆண்டவர்தாமே இதைச் செய்கிறார்; இது நம் கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. தேவன், நம்மை பகைவரின் கைகளுக்கு விடுவிக்கிறார்;  எதிர்ப்பின் மத்தியிலும் நாம் கட்டப்படும்படி சமாதானத்தை அருளுகிறார். வேதம் கூறுகிறபடி, தேவ ஜனங்கள் அவரை தேடும்போது, அவர், அவர்களுக்கு எப்பக்கத்திலும் இளைப்பாறுதலைக் கொடுத்து, கட்டப்படவும் செழிக்கவும்பண்ணுகிறார் (2 நாளாகமம் 14:7). நாம் கட்டப்பட்டு, செழிப்போம் என்பதே 2026ம் ஆண்டுக்கான வாக்குத்தத்தமாகும். தேவன் நம் இல்லங்களை, குடும்பங்களை, ஊழியங்களை, உள்ளான வாழ்க்கையை கட்டுவதோடு, சமாதானத்தை கட்டுவிக்கிறவர்களாக, சமாதானத்தோடு சேவை செய்கிறவர்களாக, சமாதானத்தில் செழிக்கிறவர்களாக உருவாக்குகிறார்.

2026ம் ஆண்டு மறுபடியும் கட்டுதல், தனி மனிதர்களைத் தாண்டி, தலைமுறைகள், தேசம் என்று விரிவடையும். வேதம், "உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்" (ஏசாயா 58:12)என்று கூறுகிறது. கர்த்தர், அஸ்திபாரங்களைப் போடுவதோடு, மதில்களை மறுபடியும் கட்டுகிறவராக, தம் திருச்சபையை இணைக்கிறவராக, தம் வார்த்தையின் மூலம் தீர்க்கதரிசன பார்வையை அளிக்கிறவராக இருக்கிறார். தேவன், ஓர் அற்புதத்தைச் செய்ய இருக்கிறார். ஆண்டவர் தம் ஆவியை ஊற்றி, யோசேப்புகளையும், தானியேல்களையும் ஞானமும் நேர்மையும் தெய்வீக அதிகாரம் நிறைந்த தலைவர்களாக எழுப்பும்போது, அது சென்னையில் தொடங்கி, தேசமெங்கும், உலகமெங்கும் பரம்பும்.

உலகளாவிய இந்த மறுகட்டுமானம் ஜெபத்துடன், தீர்க்கதரிசனத்துடன், தேவனுடைய இறுதி கால நோக்கத்துடன் இணைக்கப்பட்டதாய் இருக்கிறது. ஜெயம், போர், பஞ்சம், மரணம், இரத்தச்சாட்சி, இயற்கை சீற்றம் ஆகிய முதல் ஆறு முத்திரைகள் உடைக்கப்படுவதைக் குறித்து வெளிப்படுத்தல் 6ம் அதிகாரம் கூறுகிறது. நாம் அவற்றை ஏற்கனவே கண்டுவிட்டோம். இப்போது ஏழாம் முத்திரை திறக்கப்பட வேண்டும். பரிசுத்தவான்களின் ஜெபம், தூபவர்க்கமாக பரலோகத்திற்கு எழும்பி நெருப்பாக திரும்பி வரும். 2026ம் ஆண்டிலிருந்து இஸ்ரேல், இந்தியா மற்றும் தேசங்களிலிருந்து ஜெபங்கள், ஒன்றாய் இணைந்து விண்ணப்பங்களாக மாத்திரமன்றி, தீர்க்கதரிசன தூபமாக எழுந்து பூமிக்கு தேவனுடைய தீர்மானங்களை கொண்டு வந்து, இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு உலகை ஆயத்தப்படுத்தும். ஜெபமும் தீர்க்கதரிசனமும் இணைந்து, நெருப்பாகவும், இடிமுழக்கமாகவும் மின்னலாகவும், தடைகளை உடைக்கிறதாகவும், சாத்தானை விழத்தள்ளுகிறதாகவும், சமாதானத்தை அருளுகிறதாகவும் திரும்புகிறது. இந்த ஆண்டு, தேவன் தம் ஆவியை மாம்சமான யாவர்மேலும் ஊற்றுவார்; குமாரரும் குமாரத்திகளும் தீர்க்கதரிசனம் உரைப்பார்கள். அற்புதங்கள் மிகுதியாய் பெருகும்; வருகிறவற்றை தீர்க்கதரிசன வார்த்தைகள் உரைக்கும். இப்போதும் கர்த்தர் நம்மை உள்ளாகக் கட்டி, வெளிப்புறமாக கட்டுவிக்கிறவர்களாக பெலப்படுத்துகிறார்; ஜெபிக்கிறதற்கும், தீர்க்கதரிசனம் உரைக்கிறதற்கும், 2026ல் பூமியில் அவர் தம் சித்தத்தை நிலைநிறுத்தும்போது அவரோடு பங்காளராகும்படியும் அழைக்கிறார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, 2026ம் ஆண்டை என் வாழ்க்கையை மறுபடியும் கட்டும் ஆண்டாக நியமித்திருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பிரதான சிற்பாசாரியாகிய உம் கரங்களில் என் வாழ்க்கையின் உடைந்த, தாமதமான, பாழான பகுதிகளை ஒப்படைக்கிறேன். உம்முடைய வார்த்தையின்படியே, எல்லாவற்றையும் கட்டுவீராக; நீர் என் குடும்பத்தை, என் ஆவிக்குரிய வாழ்க்கையை, என் அழைப்பை, என் எதிர்காலத்தை நேர்த்தியாக ஏற்ற நேரத்தில் மறுபடியும் கட்டுவீர் என்று நம்புகிறேன். ஆண்டவர் இயேசுவே, நீர் முன்பு நிராகரிக்கப்பட்ட மூலைக்கல்லாயிருக்கிறீர். நான் எங்கு நிராகரிக்கப்பட்டேனோ, கண்டுகொள்ளாமல் விடப்பட்டேனோ அங்கெல்லாம் நீர் கனத்துக்குரிய இடமாக மாற்றுவீர் என்று அறிக்கை செய்கிறேன். உம் கிருபையினால் நான் கட்டப்பட்டு செழிக்கும்போது, உம் சமாதானம் எப்பக்கமும் சூழ்ந்துகொள்வதாக. தயவுசெய்து என்னை உம் பரிசுத்த ஆவியினால் நிரப்பும்; என் வாழ்க்கையில் தீர்க்கதரிசன தெளிவை அருளிச் செய்யும்; என் ஜெபங்கள் பூமியில் உம் நோக்கங்களுடன் இசைந்திருக்கட்டும். என் வாழ்க்கையிலிருந்து தூப வர்க்கம் எழும்பும்போது, உம் சித்தம் பரிசுத்த அக்கினியாய் இறங்கி வரட்டும்; தடைகளை அகற்றட்டும்; பகைவரை மௌனமாக்கட்டும்; என் வாழ்வின் மூலம் உம் ராஜ்யத்தை ஸ்தாபிக்கட்டும் என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.