அன்பானவர்களே, இன்றைக்கு தேவனுடைய வார்த்தையை உங்களோடு பகிர்வதில் அதிக மகிழ்ச்சியடைகிறேன். ஒவ்வொரு புதிய நாளும் ஆண்டவரிடமிருந்து வருகிற வெகுமதி; அது புதிய இரக்கங்களும் புதிய சாதகங்களும் நிறைந்தது. தம் பிள்ளைகளை ஆசீர்வதிப்பதில் பிரியமான மகா தேவன், தம்மிடமிருந்து பெரிய காரியங்களை நாம் எதிர்பார்க்கவேண்டும் என்று விரும்புகிறார். இயேசு, "நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்" (யோவான் 11:40) என்று கூறியிருக்கிறார். எவ்வளவு வல்லமையுள்ள வாக்குத்தத்தம்! லாசரு மரித்து அடக்கம் பண்ணப்பட்ட நிலையில், மிகுந்த வேதனையும் நம்பிக்கையின்மையும் சூழ்ந்த தருணத்தில் அவர் இந்த வார்த்தைகளை அவனது சகோதரியான மார்த்தாளிடம் கூறுகிறார். இயேசு, கல்லறையின் முன்பு நின்று, விசுவாசம், தேவ மகிமைக்கான வாசலை திறக்க முடியும் என்று கூறினார். அன்பானவர்களே, அதேபோன்று, நம் வாழ்வில் நம் கனவுகள், உறவுகள், ஆரோக்கியம், பொருளாதாரம் எல்லாமும் செத்துப்போனதுபோல் காணப்பட்டாலும், இயேசு நம் முன்னே நின்று, "நீ விசுவாசிக்கமாட்டாயா?" என்று மென்மையாக கேட்கிறார்.

சிலவேளைகளில், "அவ்வளவுதான். இனிமேல் செல்ல முடியாது," என்று கூறக்கூடிய நிலைக்கு வந்துவிடுகிறோம். ஒருவேளை, கடனை திரும்ப செலுத்துவதற்கான கடைசி நாள் வந்திருக்கலாம்; எப்படி செலுத்துவது என்று உங்களுக்குத் தெரியாதிருக்கலாம். உங்கள் ஆரோக்கியம் கெட்டுப்போயிருக்கலாம்; உங்கள் குடும்பம் உடைந்திருக்கலாம். அந்தத் தருணத்தில் இயேசு வந்து, "நீ ஏன் பயப்படுகிறாய்? உன் விசுவாசம் எங்கே? கடுகு விதையளவு சிறிய விசுவாசம் உனக்கு இருந்தால், உன்னால் மலையை பெயர்க்கமுடியும்," என்று சொல்கிறார். திமிர்வாதத்தினால் முடக்கப்பட்ட தன் வேலைக்காரனுக்காக ஒரு நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம் வருகிறான். "ஆண்டவரே, ஒரு வார்த்தை மட்டும் சொல்லும். என் வேலைக்காரன் குணமடைவான்," என்று சொல்கிறான். இயேசு ஆச்சரியப்பட்டு, "இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை," என்று கூறுகிறார். எல்லாமும் செத்துப்போய்விட்டதுபோல் காணப்படும் வேளையில் அதே அளவு விசுவாசத்தைக் கொண்டிருக்கவேண்டுமென்று ஆண்டவர் கூறுகிறார். பயம் நம்மை பிடித்து வைத்திருப்பதை அவர் விரும்பவில்லை. அவரது வல்லமை அற்புதங்களைச் செய்ய முடியும் என்று நாம் நம்பவேண்டுமென்று அவர் விரும்புகிறார். காரியங்கள் சரி செய்யப்படும் கட்டத்தை தாண்டி விட்டபோதிலும் தம்மால் அற்புதங்களைச் செய்ய முடியும் என்று நாம் விசுவாசிக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

பட்டப்படிப்பில் தன்னுடைய இறுதி ஆண்டில் 21 பாடங்களில் தோல்வியுற்ற ஒரு மாணவனை ஒருமுறை சந்தித்தேன். தன் எதிர்காலம் முடிந்துவிட்டதென்று எண்ணினவனாக, நம்பிக்கையையே இழந்துபோன நிலையில் எங்கள் தேர்வு பிரார்த்தனைக்கு அவன் வந்திருந்தான். நான் ஜெபித்தவேளையில் தேவ சமாதானம் அவன் உள்ளத்தை நிரப்பியது; எல்லா பயத்தையும் விரட்டியது. விசுவாசம் அவனுக்குள் எழும்ப தொடங்கியது. வீடு திரும்பிய அவன், புதுப்பெலனோடு படித்தான்; ஒரே முயற்சியில் 21 பாடங்களிலும் தேர்ச்சி பெற்றான். கனமுள்ள முறையில் பட்டம் பெற்றான். எவ்வளவு வல்லமையான மாற்றம்! அதுதான் இயேசுவை விசுவாசிப்பதின் வல்லமை. உங்கள் படிப்பு செத்துப்போனதுபோல் காணப்படும்போது, தேவனால் அவற்றை உயிர்த்தெழச் செய்ய முடியும். உங்கள் தந்தையை நீங்கள் இழக்கக் கொடுத்திருந்தால், தேவனே உங்கள் தந்தையாகி, உங்களை உயர்த்துவார். உங்கள் வாழ்க்கை முடிந்துபோனதுபோல் காணப்படும்போது, இயேசுவால் உங்களை மறுபடியும் எழுப்ப முடியும். அவரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. நம் படிப்பில், ஆரோக்கியத்தில், குடும்பத்தில், எதிர்காலத்தில் - நம் வாழ்வின் எப்பகுதியிலும் தேவ மகிமையைக் காண்போம் என்று விசுவாசிப்போம். அவர் ஓர் அற்புதத்தைக் கட்டளையிடுவார்; அவருடைய பலத்த கரம் தேவ மகிமையை வெளிப்படுத்துவதை நீங்கள் காண்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, விசுவாசமுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். என் பெலன் தோற்கும்போதும், நான் உம்மை விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, என்னில் செத்துப்போனவற்றுக்கு உம் வார்த்தையை உரைத்து ஜீவன் கொடும். என் குடும்பத்தில், என் படிப்பில், என் வேலையில் அற்புதங்களைக் கட்டளையிடுவீராக. எனக்குள் உடைந்துபோனவற்றுக்குள் உம் உயிர்த்தெழுதலின் வல்லமை பாய்வதாக. ஆண்டவரே, கலைந்துபோன கனவுகளை உயிர்ப்பியும். என் உடலை குணப்படுத்தி, சந்தோஷத்தை திரும்ப தாரும். என் வீட்டில் உம் மகிமையை நான் காணட்டும். எனக்குள் இருக்கும் எல்லா பயத்தையும் ஸ்திரமான விசுவாசமாக மாற்றவேண்டுமென்று இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.