எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நாம், "கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்" (சங்கீதம் 125:1) என்ற வசனத்தைத் தியானிப்போம். அன்பானவர்களே, கர்த்தர்மேல் நீங்கள் இப்படி நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா? அவர்மேல் பூரண நம்பிக்கை வைக்கும்போது, அவர் உங்களை பரிபூரணமாய் ஆசீர்வதிப்பார்; எல்லா சூழ்நிலையிலும் ஸ்திரமாக நிற்கும்படி பெலப்படுத்துவார்.
வேதத்தில் மோசேயைக் குறித்து வாசிக்கிறோம் (யாத்திராகமம் 3:1). தேவனாகிய கர்த்தரைக் குறித்து அவன் அறியாதவனாயிருந்தான். ஆனால், தேவ பர்வதமாகிய ஓரேப் அண்டையில் அவன் வந்தபோது, கர்த்தரின் தூதன், முட்செடி நடுவில் எரிந்த நெருப்பில் அவனுக்கு தரிசனமானார். அங்கிருந்து மோசே தேவனின் சத்தத்தைக் கேட்டான். அப்போது இஸ்ரவேலர் எகிப்தில் அடிமைகளாயிருந்தார்கள். எகிப்தியர் அவர்களுக்கு எல்லாவித கொடுமையையும் செய்தனர். ஆனால், கர்த்தம் தம் ஜனங்களை விடுவிக்க விரும்பினார். அவர் மோசேயையும் ஆரோனையும் அழைத்தார்; அவர்கள் தேவன்மேல் நம்பிக்கை வைத்தார்கள். அவர்களுடைய நம்பிக்கை, கீழ்ப்படிதலின் வாயிலாக கர்த்தர் அவர்களை வழிநடத்தினார்; இஸ்ரவேலர் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறும்படி செய்தார்.
ஆம், அன்பானவர்களே, இந்த உலகின் அடிமைத்தனம், கட்டுகளிலிருந்து வெளியே வரும்படி நாமும் தேவனை நம்பி அவரையே பற்றிக்கொள்ளவேண்டும். வேதம், "உங்கள் தேவனாகிய கர்த்தர்" என்று கூறுகிறது (யோவேல் 3:17). நீங்கள் அவரை உங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ளவேண்டும். கர்த்தரின் ஆலயத்திலிருந்து ஊற்று புறப்படும் என்றும் வேதம் கூறுகிறது (18ம் வசனம்). ஆம், இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது இந்த ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். மோசேயும் ஆரோனும் கர்த்தரை ஏற்றுக்கொண்டனர்; அவரை நம்பினர்; அவரது சித்தத்திற்குக் கீழ்ப்படிந்தனர். இதனால் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து, அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
வேதம், "நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்," (யோவான் 4:14) என்று கூறுகிறது. நீங்கள் ஒருக்காலும் தாகமடையமாட்டீர்கள். மோசேயைப்போல தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; இன்று தேவனைப் பற்றிக்கொள்ளுங்கள். அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை ஜீவத்தண்ணீர் ஊற்றைப்போல பிரவாகிக்கும். தேவனை முழுவதுமாய் நம்புங்கள்; அப்போது நீங்கள் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லை.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மை பூரணமாய் நம்புகிறேன். உம்மைப் பற்றிக்கொள்ளவும் உம் வார்த்தைக்குக் கீழ்ப்படியவும் எனக்கு உதவும். இந்த உலகின் எல்லா அடிமைத்தனத்திலிருந்தும் கட்டுகளிலிருந்தும் என்னை விடுவித்தருளும். உம்மை தேடுகிறவர்களின் இருதயங்களைத் தொட்டு, அவர்களை உம்மண்டைக் கிட்டிச்சேர்ப்பீராக. உம்மை தங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவுவீராக. உம் ஜீவத்தண்ணீர் அவர்களுக்குள் பாய்ந்து, உம் சமுகத்தால், சமாதானத்தால், பெலனால் அவர்களை நிரப்புவதாக. அவர்கள் வாழ்க்கை சீயோன் பர்வதம்போல் ஸ்திரமாக அசையாமல் இருக்கும்படி செய்வீராக. உம் சித்தத்தின்படியே அவர்களை வழிநடத்தி, உம் மகிமைக்கென்று அவர்களைப் பயன்படுத்துவீராக. உம் ஆசீர்வாதங்கள் அவர்கள் வாயிலாக பாய்ந்து சென்று, உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வரட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


