அன்பானவர்களே, தேவனிடமிருந்து பெரிய வெற்றியைப் பெற்றுக்கொள்ளும் நாள் இன்றைய தினமாகும். "தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" (யாக்கோபு 4:7) என்ற வெற்றியைத் தரும் வசனத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ளுவோம். நாம் பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்போது, அவனால் நம்மை ஒன்றும் செய்ய முடியாது. நாம், "இல்லை. நான் உனக்குச் செவிகொடுக்கமாட்டேன். நீ சொல்லுகிறதை செய்வதற்கு எனக்கு மனமில்லை," என்று கூறினால், அவனால் நுழைய முடியாமல் போகும். அவனால் அழிவை ஏற்படுத்த முடியாது. அவன் ஓடிப்போவான்.

ஆனால், அவனுக்கு எதிர்த்து நிற்பது எளிதான விஷயமல்ல. அவன் நம் பெலவீனமான பகுதியை தாக்குவான்; அந்த பெலவீனத்தில் நம்மை சோதிப்பான். ஒரு சிறுகுழந்தையை ஐஸ் கிரீம் சாப்பிடும்படி கூறிவிட்டு, நாம் அதை நக்கினால் அந்தக் குழந்தையால் அதைத் தடுக்க இயலுமா? குழந்தைக்கு ஐஸ் கிரீம் ஒரு பெலவீனம் என்பது நமக்குத் தெரியும். அந்தக் குழந்தை, "எப்படியாவது அந்த ஐஸ் கிரீம் எனக்கு வேண்டும்," என்று அழும். நம் மாம்ச சரீரத்தினால் சோதனைக்கு எளிதாக எதிர்த்து நிற்க முடியாது. அவ்வண்ணமே, இயேசு உபவாசத்தை முடித்து, உணவின்றி ஜெபித்துக்கொண்டிருந்தபோது, பிசாசு, "நீர் ஆண்டவரானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்; அவற்றைச் சாப்பிடும்," என்று கூறினான். மாம்ச சரீரத்தின் பெலவீனத்தை பிசாசு தாக்குவதைப் பாருங்கள். அவ்வாறே அவன் நம் பெலவீனங்களையும் தாக்குவதற்கு முயற்சிக்கிறான்.

"பிசாசை என்னால் எப்படி எதிர்த்து நிற்க முடியும்?" என்று நீங்கள் கேட்கலாம். அன்பானவர்களே, "தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்," என்று வேதம் கூறுகிறது. உங்களுக்குள்ளாக நீங்கள் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளும்போது, அவருக்குக் கீழ்ப்படிந்திருக்கும்போது, தேவ ஆவியை உங்களுக்கான பெலனாக பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் இருதயம் நிறையும்போது, உங்களோடு சண்டையிடுவது சாத்தானுக்கு கூடாத காரியமாக காணப்படும். உங்களுக்குள் பெரிதான பெலன் இருப்பதால், "பிசாசே, நீ எனக்குத் தேவையில்லை. அப்பாலே போ," என்று கூறுவீர்கள். தேவன் என் உள்ளத்துக்குள் எரிந்து பிரகாசிக்கிறார். எல்லாமும் எனக்கு இருக்கிறது. பிசாசு எந்த வாய்ப்புமில்லாமல் தோற்றுப்போவான். அன்பானவர்களே, இன்று அந்தக் கிருபையை தேவன் உங்களுக்குத் தருவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, பிசாசை எதிர்த்து நிற்க எனக்கு வல்லமையை தாரும். என் பெலவீனத்தில் அவன் என்னை சோதித்தது போதும். அவன், என்னை பாவஞ்செய்ய வைத்து தோற்கடித்தது போதும். வாழ்வில் அவனால் அறிவில்லாதவற்றை நான் தெரிவு செய்ததுபோதும். பிசாசுக்கு இடங்கொடுத்ததற்காக என்னை மன்னித்தருளும். உம் கிருபை எனக்கு வேண்டும். உம் வல்லமை எனக்குள் வேண்டும். உம் ஆவியின் நிறைவு எனக்குத் தேவை. இப்போதும், தினமும் என்னை நிறைத்தருளும். நான் இயேசுவால் நிறைந்திருக்கட்டும்; பிசாசு கொண்டு வரும் எல்லா சோதனையையும் எதிர்த்து நிற்க உதவி செய்யும். இனிமேல் நான் பெலவீனனாக இராதபடி செய்யும். என் பெலவீனத்தில் உம் பெலன் நிறைவாய் விளங்கட்டும். உம் பரிசுத்த ஆவி எனக்கு பூரணராய் விளங்கட்டும். இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.