எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இன்றைய வாக்குத்தத்தம், "உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்" (நீதிமொழிகள் 10:9) என்று கூறுகிறது. தேவன் தம் பிள்ளைகள் தினமும் உத்தமத்தில் நடக்கவேண்டும் என்று விரும்புகிறார். உத்தமம் என்பதற்கு, மக்கள் பார்க்கிறார்களோ அல்லவோ நேர்மையாக, நீதியாக, தேவனை பிரியப்படுத்தும்வண்ணம் வாழ்வது என்று அர்த்தம். பழைய ஏற்பாடு முழுவதும் அநேக பக்திமான்கள் உத்தமமாய் நடந்ததைக் காண்கிறோம். நோவா, ஆபிரகாம், யாக்கோபு, யோசேப்பு போன்றவர்கள் தேவனுக்குப் பயந்து அவர் வழிகளில் உண்மையாய் நடந்தார்கள். அவர்கள் சமரசம் செய்துகொள்வதைக் காட்டிலும் நீதியை தெரிந்துகொண்டதால் அவர்கள் வாழ்க்கையானது தேவனின் உண்மைக்குச் சாட்சியாக விளங்குகின்றன.

வேதம், "உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை," (சங்கீதம் 15:2,5) என்று கூறுகிறது. உத்தமம், வாழ்க்கையை திடமாக நிற்கப்பண்ணுகிறது. நாம் தேவனுடைய வார்த்தையின்படி நடக்கும்போது, அவர் நம் நடைகளை உறுதிப்படுத்துகிறார்; நம்மை சுகமாகக் காக்கிறார். அனுதினமும் நம் வாழ்க்கையை ஆராய்ந்து பார்ப்பதற்கு கர்த்தர் நம்மை அழைக்கிறார். நாம் நீதியாய் வாழ்கிறோமா? நம் உள்ளத்தில் ஏதாவது மறைவான பாவம், நேர்மையின்மை அல்லது அநியாயம் இருக்கிறதா? தேவனுக்கு பிரியமல்லாத ஏதாவது ஒன்றை நாம் கண்டால், உடனடியாக தேவனுக்கு முன்பாக நம்மை தாழ்த்தி, "தகப்பனே, நீர் விரும்புகிறபடி நடக்க எனக்குக் கிருபை தாரும். உமக்குப் பிரியமானபடி நீதியாய் வாழ எனக்கு உதவி செய்யும்," என்று ஜெபிக்கவேண்டும்.

வேதம், "உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்," (நீதிமொழிகள் 28:18) என்று கூறுகிறது. அப்படிப்பட்ட மனுஷன் தேவ கிருபையை, பாதுகாப்பை, அங்கிகரிப்பை அனுபவித்து மகிழ்வான். "உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்," (சங்கீதம் 84:11) என்று வேதம் வாக்குக்கொடுக்கிறது. உத்தமத்தை தெரிந்துகொள்கிறவர்களை ஆசீர்வதிப்பதில் தேவன் பிரியமாயிருக்கிறார். எனக்கு அருமையானவர்களே, கர்த்தருக்கு முன்பாக உங்கள் உள்ளத்தை சோதித்து பார்க்க இன்று ஒரு தருணம் வாய்த்துள்ளது. உங்கள் வாழ்க்கை அவரைவிட்டு விலகிப்போயிருந்தால், உங்களையே தாழ்த்தி, உங்களை அவரது விலையேறப்பெற்ற இரத்தத்தால் சுத்திகரிக்கும்படி கேளுங்கள். அவர் மன்னிப்பதற்கு, சீர்ப்படுத்துவதற்கு, உங்களை புதிய மனுஷனாக / மனுஷியாக மறுரூபமாக்க உண்மையுள்ளவராயிருக்கிறார். நேர்மையாக நடந்து, தமது பரிபூரண ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வதற்கான கிருபையை அவர் தருவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்று என்னை உம் முன்னே தாழ்த்தி, என் வாழ்வை முழுவதுமாக உம் அன்பின் கரங்களில் அர்ப்பணிக்கிறேன். என் இருதயத்தை ஆராய்ந்து பாரும்; உமக்குப் பிரியமல்லாதது எதுவாயினும் அதை வெளிப்படுத்தும். என் பாவங்கள் எல்லாவற்றையும் மன்னித்து, இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை சுத்திகரியும். அனுதினமும் உத்தமமாய், நீதியாய், சத்தியத்தில் நடக்கும்படி என்னை உம் கிருபையினால் நிறைத்தருளும். என் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் யாவும் உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வருவதாக. எல்லா சூழ்நிலையிலும் உண்மையாய், கறையற்று, கீழ்ப்படிதலுடன் இருப்பதற்கு எனக்கு உதவும். உம் தெய்வீக பாதுகாப்பில் நான் சுகமாக நடந்து, உம் கிருபையையும், பரிபூரண ஆசீர்வாதங்களையும் அனுபவிக்கும்படி செய்யும். என் வாழ்க்கை உம்மண்டை மற்றவர்களை கிட்டிச்சேர்க்கும் சாட்சியாக விளங்க வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.