அன்பானவர்களே, வேதம், "உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி" (பிலிப்பியர் 1:5) என்று கூறுகிறது. என் வாழ்விலும் பல வேகதடைகள் வந்தன.
நான் ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் படித்துக்கொண்டிருந்தபோது, அறுவைசிகிச்சை நிபுணராக வேண்டும் என்ற பெரிய ஆசை இருந்தது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்தபிறகு, அறுவைசிகிச்சை நிபுணராவதற்கு, எம்.பி.பி.எஸ். ஐந்து ஆண்டுகள், பட்டமேற்படிப்பு மூன்று ஆண்டுகள் என்று ஏறக்குறைய எட்டு ஆண்டுகள் தேவைப்படும். நான் எண்ணியபடி, என் அறுவைசிகிச்சை படிப்பினை 2010ம் ஆண்டில் முடித்திருக்கவேண்டும். ஆனால், எட்டு ஆண்டுகளில் முடிந்துவிடும் என நான் எதிர்பார்த்ததை முடிப்பதற்கு, எதிர்பாராத தாமதங்களால் பதினான்கு ஆண்டுகளானது. பலவேளைகளில் நான் ஆண்டவரிடம், "ஏன் என்னை இந்த இடத்துக்குக் கொண்டு வந்தீர்? தடைபட்டுவிட்டது என்று நினைக்கிறேன். இப்போது எனக்கு என்ன நடக்கும்?" என்று கேட்டேன். அதுபோன்ற இக்கட்டான நேரங்களில் இந்த வாக்குத்தத்த வசனமே எனக்கு ஆறுதல் அளித்தது.
என்னுடைய பட்டமேற்படிப்பின் இறுதியாண்டில், கிட்டத்தட்ட எல்லாம் முடிந்துவிட்ட தருணத்தில், ஆய்வு கட்டுரை நிறைவடையும்வேளையில், நான் எல்லாவற்றையும் ஆயத்தம் செய்துகொண்டிருந்தேன். அந்தவேளையில், தேவன் எங்களுக்கு மகனை கொடுத்து ஆசீர்வதித்தார். மீண்டும் வேகம் தடைபட்டது. படிப்புக்கு அதிக கால இடைவெளி எடுத்து, மறுபடியும் கல்லூரியில் சேரவேண்டியதாயிற்று. என்னுடைய பேராசிரியர்கள் பலர், "ஷில்பா, ஏன் திரும்ப வந்துவிட்டீர்கள்? நீங்கள் படிப்பதை நிறுத்திவிட்டீர்கள் என்று நினைத்தோம்," என்றார்கள். இம்மட்டும் என்னை கொண்டு வந்த தேவன், நிச்சயமாகவே முடிவு வரைக்கும் நடத்துவார் என்று விசுவாசித்தேன். அந்த வேளையில் அநேகருக்கு சாட்சியாக விளங்கும் வாய்ப்பை தேவன் எனக்கு அளித்தார். நான் என்னுடைய பேராசிரியர்களிடம், "கடவுள் என்னை நடத்தியதால்தான் இதுவரைக்கும் வந்திருக்கிறேன். நிச்சயமாகவே, அவர் முடிவு வரைக்கும் என்னை நடத்துவார்," என்று கூறினேன்.
ஆம், அன்பானவர்களே, நீங்களும் இன்றைக்கு இதேபோன்ற சூழ்நிலையை கடந்து செல்லலாம். நீங்கள் எண்ணியபடி காரியங்கள் நடக்காமல் இருக்கலாம். குழப்பம், எதிர்பாராத தாமதம், வேகத்தைத் தடுக்கும் பல காரியங்களை நீங்கள் எதிர்கொள்ளலாம். உங்களில் நற்கிரியையை தொடங்கிய தேவன், முடிவு வரைக்கும் நடத்துவார் என்பதை மறவாதிருங்கள்.
கூடாதென்று தோன்றும் ஒரு கனவு அல்லது விருப்பம் உங்கள் இருதயத்தில் இருக்கிறதா? அதை ஆண்டவரிடம் ஒப்படைத்து, அவர் பாதத்தில் வைத்திடுங்கள். அது, தேவ சித்தத்திற்கேற்றதாக இருந்தால், அவர் நிச்சயமாகவே உங்களை வழிநடத்தி, தம் நோக்கத்தை உங்கள் வாழ்வில் நிறைவேற்றுவார். நம் வாழ்வை மீண்டும் இயேசுவின் கரங்களில் சமர்ப்பிப்போம்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம் பிள்ளைகளைக் குறித்து நீர் கொண்டிருக்கும் நேர்த்தியான எண்ணங்களுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தங்கள் அடுத்தக் கட்டத்தை, தடைபட்டதாக, குழப்பமடைந்ததாக, நிச்சயமற்றதாக எண்ணும் ஒவ்வொருவரையும் நோக்கிப் பார்ப்பீராக. இன்று எங்கள் திட்டங்கள், விருப்பங்கள், கனவுகள், எதிர்காலத்தை உம் கரங்களில் ஒப்படைக்கிறோம். நாங்கள் எதிர்பார்த்த நேரத்தில் காரியங்கள் நடக்காவிட்டாலும், உம் பூரண நேரத்தின்மேல் நம்பிக்கை வைக்க எங்களுக்கு உதவி செய்யும். உம் நோக்கத்தின்படியே எங்களை நடத்தும். குழப்பங்களை அகற்றி, உம் பிள்ளைகளோடு தெளிவாகப் பேசி, அடுத்து அவர்கள் செய்யவேண்டியவற்றை காண்பிப்பீராக. அவர்கள் வாழ்வில் நீர் தொடங்கியுள்ள நற்கிரியையை செய்து முடிப்பீராக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


