அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். "அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்." (உபாகமம் 33:27) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். இந்த வசனம் நமக்கு எவ்வளவு ஆறுதலைத் தருகிறது! அவர் தம் பெரிய கரங்களால் நம்மை பிடிப்பார்; தம் பலத்த புயத்தால் அரவணைத்துக்கொள்வார். தேவன் அளிக்கும் இந்த அடைக்கலத்தில் நீங்கள் தேவ சமாதானத்தை உணருவீர்கள். பெரிய ஆபத்தின் நடுவிலும், நாம் விழுங்கப்படமாட்டோம்; அழிக்கப்படமாட்டோம்; நிர்மூலமாகமாட்டோம் என்ற தேவ சமாதானத்தை உணர முடியும். நீங்கள் அவரை நம்பி, அவரை நோக்கி ஜெபித்து, "ஆண்டவரே, நீரே என் அடைக்கலம்," என்று கூறும்போது உங்கள் இருதயத்தில் தேவ சமாதானத்தை உணர முடியும். அன்பானவர்களே, நம் அடைக்கலமான அவரையே நோக்கிப் பார்ப்போம்.
இந்த வசனம், நித்திய புயங்களே ஆதாரம் என்று கூறுகிறது. அவர் ஒருபோதும் நம்மை விட்டு விலகமாட்டார்; கைவிடவுமாட்டார். இந்தப் புயங்களை நீங்கள் நம்பலாம். இந்த உலகின் மக்கள், மிகவும் நெருங்கியவராயிருந்தாலும்கூட, உங்களுக்கு துரோகம் செய்வார்கள்; ஆகவே எந்த மனுஷனையும் நம்ப இயலாது; ஆனால், தேவனுடைய புயங்கள் நித்தியமானவை. ஒருமுறை நாங்கள் கூட்டம் ஒன்றை நடத்துவதற்காகச் சென்றிருந்தோம். கூட்டம் நல்லபடியாக முடிந்தது. காரில் ஏறி நாங்கள் போகவேண்டிய இடத்துக்குச் சென்றபோது, சாலை முழுவதும் தண்ணீர் நிறைந்திருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தோம். அந்த இடத்தில் மழை பெய்திருந்தது. ஆனால், கூட்டம் நடந்த இடத்தில் மழையே இல்லை. அது திறந்தவெளி மைதானம். அங்கு மக்களுக்கு கூரை எதுவுமில்லை. மழையில்லாமல் நாங்கள் கூட்டத்தை நடத்தியிருக்கிறோம்.
ஆனால், கூட்டம் நடந்த மைதானத்திற்கு வெளியே, காலையிலிருந்தே மழை பெய்துகொண்டிருந்ததை அறிந்தோம். நாங்கள் வியப்படைந்து, அந்தப் பட்டணத்தில் வசிக்கும் மக்களிடம் விசாரித்தோம். அவர்கள், "மைதானத்தில் மழை பெய்யவில்லையா?" என்று கேட்டார்கள். மைதானத்தை தவிர எல்லா இடத்திலும் மழை பொழிந்துள்ளது என்றார்கள். வியப்புக்குரிய விஷயம். தம்முடைய வார்த்தையைக் கேட்பதற்கு வந்த தம் மக்களை அவருடைய கரம் பாதுகாத்ததைக் கண்டோம். நித்திய தேவனே நம் அடைக்கலமாயிருக்கிறார். தேவன் நம்மை நேசிப்பதும், தம் ஜனங்கள்பேரில் கரிசனையாயிருப்பதும் ஆச்சரியமான அடையாளமாகும். அன்பானவர்களே, உங்களுக்காகவும் அவர் மகத்தானவற்றைச் செய்வார். ஆபத்தை எண்ணி அஞ்சாதீர்கள். இப்போதே அவரிடம் வேண்டிக்கொள்வோம்.
ஜெபம்:
அன்பு தகப்பனே, நீரே என் அடைக்கலமும் பெலனுமாயிருப்பதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் பயப்படும்போதும், நிச்சயமற்று இருக்கும்போதும் உம் நித்திய கரங்களில் இளைப்பாறப்பண்ணும். நீர் ஒருபோதும் என்னை விட்டு விலகமாட்டீர் என்பதையும், என்னை கைவிடமாட்டீர் என்பதையும் நான் மறந்துபோகாதிருக்கப்பண்ணும். எல்லா ஆபத்தின் நடுவிலும் என் இருதயத்தை உம் பரிபூரண சமாதானத்தால் நிரப்பும். உம்மோடு என்னைச் சேர்த்து அணைத்துப் பிடித்து எல்லா புயல்களின் வழியாகவும் என்னைச் சுமந்து செல்லும். உம் சமுகம் என்னை சூழ்ந்துகொண்டு காப்பதாக. இன்றைக்கு உம் கரங்களில் நான் பாதுகாப்புடன் இளைப்பாறுவேன் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


