அன்பானவர்களே, இன்றைக்கு, "நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்" (யாத்திராகமம் 33:17) என்ற அருமையான வாக்குத்தத்தத்தை தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். நம் தகப்பன் எவ்வளவு அன்புள்ளவர்! அவர் செவிகொடுக்கிற, பதிலளிக்கிற, தம் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுகிற தேவனாயிருக்கிறார். உங்கள் தேவைகளைக் குறித்து பயப்படவோ, கவலைப்படவோ அவசியமில்லை. நீங்கள் விசுவாசத்தோடு அவரிடம் கேட்கும்போது, அவரது திட்டங்கள் எப்போதுமே நன்மைக்குரியவையாக இருக்கிறபடியினால் சந்தோஷமாக பதிலளிப்பார். நம்பிக்கையும் சந்தோஷமும் நிறைந்த எதிர்காலத்தை அவர் உங்களுக்கு ஆயத்தம்பண்ணியிருக்கிறார். ஆகவேதான் இயேசுதாமே, "நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்" (யோவான் 14:13,14) என்று கூறியிருக்கிறார். நம் தேவன் உண்மையுள்ளவர்; அவரது வார்த்தை மெய்யானதாயிருக்கிறது.
தேவன் பதிலளிக்கும்போது, சாதாரண ஆசீர்வாதங்களை மட்டுமல்ல; கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களையும் பொழிந்தருளுவார் (எபேசியர் 1:3). உங்கள் குடும்பப் பின்னணி, பாரம்பரியம் அல்லது சூழ்நிலைகளின் அடிப்படையில் இந்த ஆசீர்வாதங்கள் அமைந்திராது. மாறாக, இயேசு கிறிஸ்துவுக்குள்ளாகவே வேரூன்றியிருக்கும். அவர் தமக்குச் சொந்தமானவற்றை எடுத்து உங்கள்மேல் வைப்பார். தெய்வீக தயவை, பரலோக அருட்கொடையை, நித்திய நம்பிக்கையை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். நீங்கள் பெலவீனமாக உணரும்போது அல்லது எதற்காக ஜெபிக்கவேண்டும் என்ற நிச்சயமில்லாதிருக்கும்போது, "ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்" (ரோமர் 8:26) என்ற வசனத்தை நினைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவியானவர் உங்கள் தேவைகளை அறிந்து, தேவ சித்தத்திற்கு இசைவாய் ஜெபிக்கிறார்; எல்லா ஆசீர்வாதமும் அவரது ஏற்றவேளையில் உங்களை வந்தடையும்.
தேவன் உங்களுக்கென்று ஆயத்தம் பண்ணியிருக்கிறவற்றை இருளின் எந்த அதிகாரமும் தடுக்க முடியாது. வேதம், "சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார்" என்று அறிவிக்கிறது (ரோமர் 16:20). எல்லா தடையும், எல்லா எதிர்ப்பும், சத்துருவின் சகல திட்டங்களும், "இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்" (பிலிப்பியர் 2:10) என்ற வசனத்தின்படி பணிந்துகொள்ளும். பரலோக தூதர்கள் உங்களுக்கு ஆசீர்வாதங்களை கொண்டு வருவார்கள். பூமியிலுள்ள மனுஷர்களால் அவற்றை தடுக்க இயலாது. பூமிக்கு கீழாக இருக்கிற பிசாசின் சக்திகள் அனைத்தும் அமைதிப்படுத்தப்படும். இன்றைக்கு தைரியத்தோடு இந்த வாக்குத்தத்தத்தை சுதந்தரியுங்கள். ஆண்டவர்தாமே நீங்கள் கேட்கிறவற்றை அப்படியே செய்து, உங்களை பூரணமாய் ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
பரம தகப்பனே, என் ஜெபங்களுக்கு பதிலளிப்பதாக நீர் வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். கிறிஸ்துவுக்குள்ளான எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் இன்று என்மேல் பொழிந்தருளும். எல்லா தடைகளும் எதிர்ப்புகளும் இயேசுவின் நாமத்தில் அகற்றப்படட்டும். பரிசுத்த ஆவியானவரே, எனக்காக பரிந்துபேசி, பரலோகத்தின் ஆசீர்வாதங்களை என் வாழ்வில் கொண்டு வருவீராக. இன்றைய தினத்தை தேவனுடைய ஆசீர்வாதத்தின் நாளாக ஏற்றுக்கொண்டு, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.