எனக்கு அன்பானவர்களே, மக்கள் எப்போது உங்களை நேசிப்பார்கள்? எல்லாரும் நம்மை நேசிக்கவேண்டும்; தேவனும் நம்மை நேசிக்கவேண்டும்  என்று விரும்புகிறோம். ஆம், எல்லாராலும் நீங்கள் நேசிக்கப்படலாம். "கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார்" (1 சாமுவேல் 16:7) என்று வேதம் கூறுகிறது. மக்கள் வெளிப்படையான தோற்றத்தைப் பார்க்கிறார்கள்; சரீரபிரகாரமான தோற்றம், புகழ், பணம் இவற்றைப் பார்த்து அவர்களை நேசிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், மற்றவர், இவர்களை நேசிக்காமல் இருக்கலாம்; அதனால், அவர்கள் வாழ்வே அவலமாய் முடிந்துபோகலாம். தன் முதல் படத்தை வெளியிட்ட ஒரு நடிகரைப் பற்றி, அவர் புகழ்பெற்றார்; இன்னொரு தேசத்திலிருந்த பெண் அந்தப் படத்தைப் பார்த்தாள். அவரது நாட்டுக்கு ஓடிவந்தாள். அவரைப் பின்தொடர்ந்தாள். தன் அன்பை காட்டினாள்; பகிர்ந்துகொண்டாள். அவர்கள் திருமணமும் செய்துகொண்டனர். ஆனால், பல ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த அன்பு எல்லாம் போய்விட்டது; அவள் நேசிக்கப்படாமல்போனாள் என்று எழுதப்பட்டுள்ளது.

அன்பானவர்களே, தேவனோடு உங்கள் இருதயம் இணைக்கப்பட்டிருப்பதாக. அப்போது அவர் உங்கள் இருதயத்தைப் பார்த்து, உங்களை நேசிப்பார். உங்கள் இருதயம் அவர் பக்கமாய் திரும்பி, அவர்பேரில் பற்றுதலாய் இருக்கட்டும். அவர் உங்களை நேசிப்பார். வேதம், "உன்மேல் அன்பு வைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி...ஆசீர்வதிப்பார்" (உபாகமம் 7:13) என்று கூறுகிறது. நீங்கள் அவர் தெரிந்துகொண்ட பிள்ளை. நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? எல்லாவற்றிலும் அவரை நம்புகிறீர்களா? அவர் உங்களுக்கு நன்மை செய்வார் என்று விசுவாசிக்கிறீர்களா? என்று பார்க்கிறார். பிறகு உங்களையும் நேசிப்பார். அவரது அன்பில் நீங்கள் மகிழ்வீர்கள். தேவனுடைய அன்பை உங்கள் வாழ்வில் அனுபவிக்கும்போது, உங்களாலும் அனைவரையும் நேசிக்க முடியும்; எல்லோரும் உங்களை நேசிப்பார்கள். இந்த உலகில் அன்புகூரப்படுவதற்கான இரகசியம் அதுவே. தேவன்தாமே இந்தக் கிருபையை உங்களுக்குத் தருவாராக. வேதம், மனுஷருக்கு தன் வழிகள் ஏற்றவையாக தெரியும்; ஆனால், கர்த்தரோ இருதயத்தை நிறுத்துப்பார்க்கிறார் என்று கூறுகிறது (நீதிமொழிகள் 21:2).

தாவீது, தன் குமாரனாகிய சாலொமோனுக்கு, "என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி" என்று கூறுகிறான் (1 நாளாகமம் 28:9). நீங்கள் தேவன் உங்கள் தகப்பனோடு இருந்தார் என்பதில் திருப்தியடைந்துவிடக்கூடாது. அவரை உங்களுக்கும் தகப்பனாக்கிக்கொள்ளவேண்டும். இரண்டாவதாக, முழு இருதயத்தோடும், முழு பக்தியோடும், விருப்பத்தோடும் அவரை சேவிக்கவேண்டும். உங்கள் பெற்றோரின் கட்டாயத்தால் ஆண்டவரை பின்பற்றக்கூடாது. ஆண்டவர், தம்மை தேடுகிறதா என்று எல்லா இருதயத்தையும் ஆராய்ந்துபார்ப்பதால், அவர் உங்களைக் கண்டுகொள்வார்; ஆகவே, அவரைத் தேடுங்கள். யோபு அப்படிப்பட்டவனாய் இருந்தான். தேவன், அவனைப் பற்றி, "அவனைப்போல பூமியில் ஒருவனும் இல்லை," என்று சாட்சி கூறுகிறார் (யோபு 1:8). தேவன், "உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுகிறவனுமாயிருக்கிறான்," என்று கூறுகிறார். யோபுக்கு பலனும் கிடைத்தது. தேவன், யோபுவைச் சுற்றிலும், அவன் வீட்டாரைச் சுற்றிலும், அவனுக்கிருந்த எல்லாவற்றைச் சுற்றிலும் வேலி போட்டார். அவன் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதித்தார்; அவனது ஆஸ்தி பெருகி, எங்கும் பரவியது. ஆம், இதேபோன்ற சான்றை நீங்கள் தேவனுக்கு முன்பாக பெற்றிருக்கவேண்டும். அவருக்கு முன்பாக உங்கள் இருதயம் பூரணமானதாய் இருக்கவேண்டும்; அவரை நம்பவேண்டும்; அவரையே சார்ந்திருக்கவேண்டும். அவர் உங்களை நேசிப்பார். அப்படிப்பட்ட இருதயத்தை இன்று உங்களுக்குத் தருவதற்கு தேவன் விரும்புகிறார்.

ஜெபம்:
தகப்பனாகிய தேவனே, என் இருதயம் உமக்கு ஏற்றதாக இருக்கிறதா என்று ஆராய்ந்து பாரும். உமக்குப் பிரியமில்லாத யாவற்றையும் அகற்றி, உம் அன்பினால் என்னை நிறைத்தருளும். உம்மை நம்பவும், உம்மை சார்ந்திருக்கவும், முழு இருதயத்துடன் உம்மை தேடவும் எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். மக்களின் விருப்பத்தை தேடாமல், உமக்குப் பிரியமாக வாழ்வதற்கு எனக்கு உதவி செய்யும். உம் அன்பு என் வாழ்வை நிறைக்கட்டும்; என் வாயிலாக மற்றவர்களுக்கும் நிரம்பி வழியட்டும். உமக்குப் பிரியமாய் எப்போது வாழ வேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.