எனக்கு அருமையான தேவ பிள்ளையே, இன்றைக்கான வாக்குத்தத்தம், "என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும்" (2 நாளாகமம் 7:16) என்று கூறுகிறது. அது எவ்வளவு சிறந்த வாழ்க்கை! தேவனுடைய கண்களும் அவர் இருதயமும் நம்மேல் இருக்கும். அவர் எப்போதும் நம் அனைவரையும் பார்த்துக்கொண்டிருக்கிறார். நாம் எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள். வேதம், "கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்," (ஆபகூக் 2:20) என்று கூறுகிறது. அன்பானவர்களே, நீங்கள் எப்போதும் தேவ பிரசன்னத்தை உணர்கிறீர்களா? பரிசோதித்துப் பாருங்கள்! நீங்கள் சண்டையிட்டு சகல தவறான காரியங்களையும் செய்கிறீர்களா? ஆண்டவர் அங்கே இருக்கமாட்டார். தேவனுக்கு முன்பாக அவருக்கு விருப்பமானபடி வாழ பிரயாசப்படுங்கள்.
அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு, சிலுவையில் அவர் சிந்தின விலையேறப்பெற்ற இரத்தத்தால் உங்களைச் சுத்திகரிக்கும்படி கேளுங்கள். எப்படிப்பட்ட வாழ்வை ஆண்டவர் உங்களுக்குத் தருவார்? வேதம், "நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள்," (2 கொரிந்தியர் 6:16) என்று கூறுகிறது. "நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?" என்றே வேதம் கூறுகிறது (1 கொரிந்தியர் 3:16). ஆண்டவரை உங்களோடு எப்போதும் வைத்திருந்தால், இந்த உலகில் உங்கள் வாழ்க்கை மகிமையானதாயிருக்கும்.
வேதம், "உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம்," (சங்கீதம் 65:4) என்றும், "கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்," (சங்கீதம் 92:13) என்றும் கூறுகிறது. அன்பானவர்களே, இயேசு உங்களோடு இருக்கும்போது, உங்களோடு ஜீவிக்கும்போது, உங்களோடு இணைந்திருக்கும்போது, நீங்கள் அவருடன் வாழும்போது அது எவ்வளவு சிறந்ததாயிருக்கும்! எல்லா மகிழ்ச்சியும், சந்தோஷமும் தேவ சமாதானமும் உங்களுக்குக் கிடைக்கும்; நீங்கள் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். இப்போது நாம் ஆண்டவரிடம் ஜெபித்து, கிறிஸ்துவுக்குள்ளானதும், விலையேறப்பெற்றதும் ஆசீர்வாதமுமான வாழ்க்கையை நமக்கு அருளும்படி கேட்போம்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, எனக்குள் வாசம்பண்ண நீர் தெரிந்துகொண்டதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் உள்ளத்தை இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் சுத்திகரியும். உமக்குப் பிரியமில்லாத எல்லா காரியங்களையும் அகற்றும். கர்த்தாவே, என்னை உம் பரிசுத்த ஆலயமாக மாற்றுவீராக. உம் ஆவியானவர், எப்போதும் எனக்குள் ஜீவிப்பாராக; உலாவுவாராக. அனுதினமும் உம்மை கனப்படுத்தும்வண்ணம் நான் வாழ எனக்கு உதவி செய்யும். நான் எப்போதும் உம்மோடு இணைந்திருக்கட்டும். என் வாழ்வில் உம் சமுகம் விளங்குவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


