பிரியமானவர்களே, தேவனாகிய கர்த்தர் எங்கே வாசம்பண்ணுகிறார்? வேதம், "உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்" (சங்கீதம் 91:1) என்று கூறுகிறது. சர்வவல்லவராகிய அவர் உன்னதங்களில் வாசம்பண்ணுகிறார். அவர், உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார் என்று வேதம் கூறுகிறது (யோபு 25:2). ஆம், ஆண்டவராகிய இயேசு, தேவனாகிய கர்த்தர், ஒருமுறை என் தந்தையை இந்த இடத்துக்கு எடுத்துச் சென்றார். வேதம், இயேசு மாத்திரமே வாசல் என்றும், அவர் மாத்திரமே வழி என்றும் கூறுகிறது. அவர் தம்மைத்தாமே பலியாக ஒப்புக்கொடுத்தார்; தம் இரத்தத்தைச் சிந்தினார்; தேவனாகிய கர்த்தரை நாம் கண்டடையவும், அவரது சமுகத்திற்குள் நுழையவும் வழியை உண்டாக்கினார். இயேசுவின் இரத்தம் நமக்காகச் சிந்தப்பட்டு, நம் பாவங்கள் அகற்றப்படவும், நாம் பரிசுத்தமாகவும் வழியை உண்டுபண்ணினது. இயேசுவின் இரத்தத்தால் நாம் கழுவப்படும்போது, அவரது பிள்ளைகளாகிறோம். அப்படி, தேவனாகிய கர்த்தரின் சமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கான வழி திறக்கப்பட்டது.
இயேசு யார்? தேவனாகிய கர்த்தர் தம் வித்தை ஒரு கன்னியின் கருவில் வைத்தார்; அதன் வாயிலாக, மனுஷ ரூபத்தில் இந்த உலகத்திற்குள் வந்தார். இன்னும் மானுட வடிவு அவருக்கு இருக்கிறது. அவரும் தேவனாகிய கர்த்தரும் ஒன்றாய் இருக்கிறார்கள். அவர் கன்னிகையின் கருவில் மனுவுருக்கொண்டு இந்த உலகிற்குள் வந்ததால், மானிட வடிவம் அவருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் தேவனாகிய கர்த்தரைப்போல அவர் ஆவியாகவும் இருக்கிறார். இயேசு, மனித சாயலை தரித்துக்கொண்டதால், அவர் வாயிலாக நமக்கு ஆவியாக இருக்கும் தேவனாகிய கர்த்தரின் சமுகத்தில் பிரவேசிக்கும் வழி திறக்கப்பட்டது.
தேவனாகிய கர்த்தர் எந்த இடத்தில் வாசம்பண்ணுகிறார்? தனிமையானதோர் இடத்தில் வாசம்பண்ணுகிறார். வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 68:33). என் தந்தை, மகிமையான அந்த இடத்தைக் கண்டிருக்கிறார். அது சமாதானம் நிறைந்திருக்கும் இடமாகும். அங்கு சமாதானம் உருவாக்கப்பட்டு, உலகிற்கு வருகிறது. அவர் முழு பிரபஞ்சத்தை சமாதானத்தால் ஆளுகை செய்கிறார். உன்னதமான இடங்களில் சமாதானத்தை உண்டாக்கும் தேவன், அங்கிருந்து தம் பரிசுத்தவான்களுக்கு சமாதானத்தை உரைக்கிறார் (யோபு 25:2; சங்கீதம் 85:8).
அடுத்து, அங்கே அவரது சிங்காசனம் நிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார் (எசேக்கியேல் 1:26-28). சிங்காசனத்தின் தோற்றம் வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது; அதன்மேல் மனுஷ சாயலானவர் வீற்றிருந்தார். வேதம், தேவன், மனுஷனை தம் சாயலாகவே உருவாக்கினார் என்று கூறுகிறது. ஆகவே, அவர் ஆவியாயிருந்தாலும், மனுஷ சாயலை தரித்திருக்கிறார். அவரது இடுப்பு அக்கினிமயமான சொகுசாவைப்போலவும், மழைக்காலத்தில் மேகங்களின்மேல் தோன்றும் வானவில்லைப்போன்று பிரகாசமான வானவில் அவரையும் சிங்காசனத்தையும் சுற்றிலும் இருந்ததாகவும் வேதம் கூறுகிறது (27, 28ம் வசனங்கள்). அதேகாரியத்தை வேறோர் இடத்திலும் வாசிக்கிறோம் (வெளிப்படுத்தல் 4:2-11). அடுத்ததாக, அவர் மகிமையினால் நிறைந்திருக்கிறார். அவர் மகத்துவத்தை அணிந்து, ஒளியை வஸ்திரமாக தரித்திருக்கிறார் (சங்கீதம் 104:1,2). அவரது சத்தம் இடிமுழக்கத்தைப் போலிருக்கிறது (எசேக்கியேல் 1:28).
"கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது" (சங்கீதம் 29:3,4).
"அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று" (சங்கீதம் 46:6). இவ்வளவு மகத்துவமான, பயங்கரமான சத்தம் அவரது சிங்காசனத்திலிருந்து தொனிக்கிறது. என் தந்தை அவரைப் பார்த்தபோது, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். அந்தச் சத்தம் ஆயிரம் முறை எதிரொலித்தது. என் தந்தையின் உடலிலுள்ள எலும்புகள் எல்லாம் நொறுங்குவதுபோல் தோன்றுமளவுக்கு அது வல்லமையானதாகவும், பயங்கரமானதாகவும் இருந்தது. அவரது சத்தம், எக்காள சத்தம் போலிருந்தது என்று வேதம் கூறுகிறது (வெளி. 4:1; எண்ணாகமம் 7:89).
ஆம், அன்பானவர்களே, இந்தச் சத்தம் என்ன கூறுகிறது? "வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது" (மத்தேயு 3:17). உங்களைக் குறித்தும் அந்தச் சத்தம் இப்படியே கூறும். வானத்திலிருந்து இடியைப்போல, எக்காளத்தைப்போல, பேரோசையைப்போல, பூமியை அதிரப்பண்ணும் ஒரு சத்தம், "இவள் என்னுடைய நேச குமாரத்தி, இவன் என்னுடைய நேச குமாரன்," என்று அறிவிக்கிறது. உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? அதற்காகவே அவர் சிங்காசத்தின்மேல் வீற்றிருக்கிறார்.
ஆம், அன்பானவர்களே, தம் சிங்காசனத்திலிருந்து, என் தந்தையைப் பார்த்து, "உனக்கு என்ன வேண்டும்? நீ எனக்கு அருமையானவன். கேள், நான் உனக்குத் தருவேன்," என்று கேட்டார். என் தந்தை, தேவனுடைய வரங்களைக் கேட்டார். ஆனால் ஆண்டவர், "என்னுடைய வரங்களை மாத்திரம் அல்ல; என்னையே உனக்கு தருவேன்," என்று கூறினார். ஆகவேதான், என் தந்தை தன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவரை தூக்கிச் சுமந்தார். அவர் எங்கு சென்றாலும், எங்கு பேசினாலும் தேவ சமுகம் மக்களை நிரப்பியது. அவரது வாழ்க்கையின் வாயிலாக மக்கள் இயேசுவை கண்டனர். ஆண்டவர், அதே கிருபையை உங்களுக்கும் தருவார். இந்த தேவனாகிய கர்த்தர், உங்கள் ஆண்டவராயிருக்கிறார்; அவர் உங்களுக்கு உதவி செய்வார்.
ஜெபம்:
அன்பான சர்வவல்ல கர்த்தரே, இயேசுவின் வாயிலாகவும், அவரது இரத்தத்தின் வாயிலாகவும் உம் சமுகத்தில் பிரவேசிக்க எங்களுக்கு ஒரு வழியை உண்டாக்குகிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எங்களைக் கழுவும்; பரிசுத்தமாக்கும்; உம் நிழலில் இருப்பதற்கு உதவி செய்யும். எங்கள் இருதயங்களை உம் சமாதானத்தாலும் மகிமையாலும் நிரப்பியருளும். நீரே எங்கள் சர்வவல்ல கர்த்தர் என்றும், உம் சிங்காசனத்தில் அமர்ந்து எல்லா காரியங்களையும் ஆளுகை செய்கிறீர் என்பதை எப்போதும் நாங்கள் நினைவில் கொண்டிருக்கச் செய்யும். உம் வல்லமையுள்ள சத்தம், எங்கள் வாழ்வின்மேல் அன்பையும் நிச்சயத்தையும் உரைப்பதாக; எங்களை உம் அன்பான பிள்ளைகள் என்று அறிவிப்பதாக. எங்கள் வாழ்க்கை வாயிலாக பிறரும் இயேசுவைக் காணும்படி நாங்கள் செல்லுமிடமெங்கும் உம் சமுகத்தை சுமந்து செல்லும் கிருபையை எங்களுக்குத் தந்தருளும். உம்மை முழுவதும் நம்பவும், உம் தெய்வீக ஒத்தாசையை பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


