பிரியமானவர்களே, இன்றைய வாக்குத்தத்தமாக, "அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்" (ஏசாயா 25:8) என்ற வசனத்தை மொபைல் செயலியிலும் இணையதளத்திலும் பதிவு செய்திருக்கிறோம். தேவன் இன்று எவ்வளவு வல்லமையான வாக்கைக் கொடுத்திருக்கிறார்! இன்று நீங்கள் மரண பாதையினூடாக கடந்து சென்று கொண்டிருக்கலாம். உங்கள் இல்லறத்தில் காரியங்கள் செத்துக்கொண்டிருக்கலாம்; பிரியும் தறுவாயில் இருக்கலாம்; உங்கள் வேலையில் காரியங்கள் செத்துக்கொண்டிருக்கலாம். வேலை தேடுவதிலோ, கல்லூரி வாழ்க்கையிலோ தோல்விகளை காணலாம். ஆம், அன்பானவர்களே, அவமானத்தையும் வெட்கத்தையும் இவை கொண்டு வரலாம். நீங்கள் தேவனுடைய குமாரனாகவோ, குமாரத்தியாவோ இருக்கலாம்; இருந்தாலும் தோற்றுப்போவதாக நினைக்கலாம். கவலைப்படாதிருங்கள். உங்கள் வாழ்க்கையில் தாம் மரணத்தை விழுங்கிப்போடுவதாக ஆண்டவர் கூறுகிறார்.
சிலுவையில் அவர் செய்தது இன்று உங்கள் வாழ்வுக்குள் கடந்துவரும். உங்கள் உள்ளத்துக்குள் இயேசு வரும்போது, மரணத்தின்மீது அவர் கொண்ட ஜெயமும் உங்கள் வாழ்வுக்குள் வரும். உங்கள் வாழ்க்கையில் அந்தப் பாதையை, உங்கள் இல்லறத்தை அவர் உயிர்ப்பிக்கிறார்; தோல்வியிலிருந்து வெற்றியையும், உங்கள் வாழ்வில் இழந்துபோனவற்றையும் அவர் உயிர்ப்பிக்கிறார்; உங்கள் வியாபாரத்தை மீட்டெடுக்கிறார். உங்கள் வாழ்வில் அன்பை உயிர்ப்பிக்கிறார். உங்கள் குடும்பத்தில் உறவு மீண்டும் கட்டியெழுப்பப்படுகிறது. உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் யாவற்றையும் அவர் துடைக்கிறார். பிரியமானவர்களே, கவலைப்படாதிருங்கள். இன்று, வேத வசனத்தை பிடித்துக்கொள்ளுங்கள்; மரணத்தின் பாதையில் தேவன் அருளும் ஜெயத்தைக் காணுங்கள்.
என் கூட்டம் ஒன்றுக்கு ஒரு பெண்மணி வந்தார்கள். தனி ஜெபத்திற்காக என்னிடம் வந்தபோது, "ஐயோ, எனக்கு லட்சக்கணக்கான ரூபாய் கடன் இருக்கிறது. நான் செத்துக்கொண்டிருக்கிறேன். பணம் ஒன்றுமில்லாத சூழ்நிலை. என்ன செய்வதென்று தெரியவில்லை. தயவுசெய்து ஜெபம் பண்ணுங்கள்," என்று கூறினார்கள். பரிசுத்த ஆவியானவர் எனக்குத் தந்த விசுவாசத்துடன் நான் ஜெபித்தேன். விரைவிலேயே அவர்கள் திரும்ப வந்து, "தேவன் அற்புதவிதமாக என் கடன்களையெல்லாம் அடைத்துவிட்டார். இந்தப் பாதையிலிருந்து என்னை அவர் மீட்டுக்கொண்டார். வாழ்க்கையில் நம்பிக்கையை தந்திருக்கிறார்," என்று சாட்சி பகர்ந்தார்கள். ஆமென். தேவன் உங்களுக்கும் அப்படி செய்வார்.
ஆகவே, அன்பானவர்களே, இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசத்தோடு பெற்றுக்கொண்டு, உங்கள் வாழ்வில் எல்லா பகுதியையும் தேவன் சீர்ப்படுத்துகிறார் என்று நம்புங்கள். உங்கள் முகத்திலிருந்து கண்ணீரை அவர் துடைப்பார்; அவமானத்தை அகற்றுவார்; எல்லாமே செத்துப்போனதாகக் காணப்படும் இடங்களில் அவர் புதுநம்பிக்கையை அருளுவார். இழந்துபோனவற்றை அவரால் உயிர்ப்பிக்க முடியும்; உங்களுக்கு பூரண ஜெயத்தை தர முடியும் என்று நம்புங்கள். இன்று தேவன் உங்கள் வாழ்க்கையில் ஓர் அற்புதத்தை நடப்பித்துக்கொண்டிருப்பதால் களிகூருங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, மரணத்தை ஜெயமாய் நீர் விழுங்குவதாகவும், எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரை துடைப்பதாகவும் வாக்குப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்வில் செத்துக்கொண்டிருக்கிற எல்லா பகுதியையும் உயிர்ப்பித்தருளும். என் இல்லறத்தை, வேலையை, பொருளாதாரத்தை, உறவுகளை, நம்பிக்கையை மீட்டளும். என் வாழ்விலிருந்து எல்லா அவமானத்தையும் வெட்கத்தையும் அகற்றும்; சந்தோஷத்தாலும் சமாதானத்தாலும் ஜெயத்தாலும் நிரப்பியருளும். வியாதி எல்லாவற்றையும் சுகமாக்கும்; இக்கட்டான எல்லா சூழ்நிலையையும் மேற்கொள்ள பெலனை தந்தருளும். என் வாழ்வில் நீர் ஓர் அற்புதத்தைச் செய்துகொண்டிருக்கிறீர் என்று உம் வல்லமையை விசுவாசிக்க உதவும். என் வாழ்வில் எப்பகுதியிலும் உம் ஜெயம் காணப்படவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


