எனக்கு அருமையானவர்களே, இன்றைய நாளின் வாக்குத்தத்தம் உபாகமம் 33:12, “கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான்.” ஆம், நீங்கள் ஆண்டவருக்கு பிரியமானவர்கள். அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டவர்கள். அவருடைய தியாகத்தால் கிரயத்திற்கு வாங்கப்பட்டீர்கள். உங்களுடைய பாவங்களுக்காக அவர் தம்மையே பலியாய் ஒப்புக்கொடுத்தார். நீங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், மறுரூபமாக்கபட்டவர்கள்.

இயேசு பரத்திலிருந்து பூமிக்கு வந்தபோது, "இவர் என் நேச குமாரன், இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன்" என்று பிதாவானவர் சொன்னார். மேலும், இயேசு மறுரூப மலையில் இருக்கும்போதும், "இவர் என் நேச குமாரன், இவருக்கு செவிகொடுங்கள்" என்கிற பிதாவின் சத்தம் ஒலித்தது. ஆண்டவர் இன்று உங்களைப்  பார்த்து, "நீ எனக்கு பிரியமானவன்/பிரியமானவள்; நான் உன்னை தெரிந்துகொண்டேன்" என்று சொல்லுகிறார். நீங்கள், இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்தின இரத்தத்தின் தியாகத்தால் கிரயமாய் வாங்கப்பட்டவர்கள். அவருடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டவர்கள். பிரியமானவர்களே, நீங்கள் ஆண்டவருடைய சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாக தங்கும் இடங்களிலும் குடியிருப்பீர்கள். அவருடைய சமாதானத்தை பெற்றுகொள்வீர்கள். அவருடைய தெய்வீக பாதுகாப்பு உங்களை சூழ்ந்துகொள்ளும், ஆண்டவர் உங்களுக்கு கோட்டையும் அரணுமாய் இருப்பார். 1 கொரிந்தியர் 10:4 –ல், இயேசுவே உங்கள் கன்மலை, அவரே உங்கள் மூலக்கல்லாய் இருப்பார். நீங்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை என்று வேதம் சொல்லுகிறது. நீங்கள் கன்மலையின்மேல் கட்டப்பட்டவர்கள், கிறிஸ்துவே உங்களை சுற்றி கோட்டையும் அரணுமாய் இருப்பார். நீங்கள் எப்பொழுதும் ஆண்டவரின் அரவணைப்பிலும், பராமரிப்பிலும் இருப்பீர்கள். ஆகவே, தைரியமாயிருங்கள்.

பிசாசு என்னை தாக்க முடியுமா? என்று சிலர் கேட்கிறார்கள். ஆம், பிசாசுக்கும் வல்லமை உண்டு. ஆனால், ஆண்டவர் அனுமதித்தால் மட்டுமே. எனினும், கர்த்தர் உங்களுக்கு விசுவாசம் என்னும் கேடகத்தை தந்து, அவருடைய கிருபையினால் பிசாசை எதிர்த்து நிற்கும்படி செய்வார். வேதம் நமக்கு வாக்களித்ததுபோல, பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அவன் உங்களை விட்டுஓடிபோவான். உலகத்தின் கவலைகளுக்கும், பிசாசு கொண்டு வருகிற காரியங்களுக்கும் உங்களை ஒப்புக்கொடுக்காதீர்கள். நீங்கள் முற்றிலும் கிறிஸ்து இயேசுவினால் ஜெயம் பெற்றவர்கள். அவர் உங்களை நேசிக்கிறார். “என் நாமத்தினாலே நீங்கள் பிசாசுகளை துரத்துவீர்கள்” என்று இயேசு சொன்னார். ஆகவே, நீங்கள் பயப்படாமல் இயேசு உங்களுக்கு அளித்திருக்கிற வல்லமையோடு அவனை மேற்கொள்ளுங்கள். நான் உம்முடையவன், உமக்கு பிரியமானவன், என்னை பத்திரமாக பாதுகாத்து, உம்முடைய கேடகத்தால் என்னை மூடி, உம்முடைய அன்பால் என்னை பாதுகாப்பதற்காக நன்றி என்று விசுவாசத்தோடு சொல்லுங்கள். ஒருபோதும்  எந்த பாவமான காரியமும், பிசாசின் சோதனையும் உங்களை மேற்கொள்ள அனுமதிக்காதீர்கள். பொல்லாத மனிதர்கள் என்னை மேற்கொள்ள பார்க்கும்போது, "உம்முடைய கேடகம் என்னை மூடி பாதுகாப்பதாக" என்று ஜெபியுங்கள். அப்பொழுது பிசாசை முற்றிலும் எதிர்த்து நிற்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் என்னை பிரியமானவனாக அழைப்பதற்காக உமக்கு நன்றி. நீர் உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் என்னை கழுவி உமக்கு சொந்தமாய், சுதந்தரவாளியாய் மாற்றிவிட்டீர்.  நாள்தோறும் என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பி, நீர் அருளும் சமாதானத்தைத் தந்து காத்து கொள்ளும். நான் உம்முடைய பாதுகாப்பிற்குள்ளாக சுகமாய் வாழ உதவ செய்யும். என்னை உம்முடைய கரத்திற்குள் பத்திரமாய் வைத்துக்கொள்ளும். என் கன்மலையும், கோட்டையுமாய் இரும். எதிராளி என்னை மேற்கொள்ளும்போது, நீர் விசுவாசத்தின் கேடகத்தை எனக்கு அளித்து என்னை காத்தருளும். உமக்கு முற்றிலுமாய் என்னை அர்ப்பணிக்க உதவி செய்யும். பிசாசை எதிர்த்து நின்று போராடி ஜெயிக்க உம்முடைய பெலனையும், சத்துவத்தையும் எனக்கு தாரும். இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்.