அன்பானவர்களே, இன்றும் தேவனுடைய வாக்குத்தத்தமாக, "இந்த தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்" (சங்கீதம் 48:14) என்ற அருமையான வசனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது, எவ்வளவு சிறந்த வாக்குத்தத்தம்! இந்த மகா தேவன் இன்றும் என்றும் நம்முடைய கர்த்தராயிருக்கிறார்.

என் தாத்தா, என் தந்தைக்கு ஏற்ற வழியைக் காண்பித்து, ஆலோசனை கூறி, உதவுவார். அதுவே என் தந்தைக்கு பெருத்த ஆறுதலாக இருந்தது. ஆனால், 2008ம் ஆண்டு, என் தந்தை, தன் தந்தையை இழந்தார். ஆகவே, ஆண்டவரிடம் அழுதார். இழப்பினால் மனமுடைந்தார். ஆனாலும், மார்ச் 14 அன்று ஆண்டவர் என் தந்தையை தம் ஆவியினால் பெலமாய் அபிஷேகித்தார். அவரிடம், "கவலைப்படாதே, நான் உனக்குத் தகப்பனாயிருப்பேன்," என்று கூறினார். ஆண்டவர், "உன் தகப்பன் இப்போது இல்லை. ஆனால், நானே உனக்குத் தகப்பனாயிருப்பேன். நீ பராமரிக்கவேண்டிய அனைவருக்கும் உன் வாயிலாக தகப்பனாயிருப்பேன். என் நுகம், உனக்கு இலகுவானதாகவும், மெதுவானதாகவும் இருக்கும்," என்று கூறினார். அன்றிலிருந்து தினமும் காலையில் என் தந்தை, தம் பரம தகப்பனோடு பேசுவதில் நேரம் செலவிடுகிறார். தினமும் அதிகாலையில் தேவன், அவர் செய்யவேண்டியவற்றில் வழிகாட்டுவார். ஆண்டவர், அவர் ஆத்துமாவுக்கு சமாதானத்தை தந்து, பூமியில் யாரும் அளிக்க முடியாத ஆறுதலை கொடுப்பார். ஆண்டவர், வாழ்வில் தம்மை எவ்வளவு உண்மையாய் சுமந்து வருகிறார் என்பதை என் தந்தை அனுபவித்திருக்கிறார். தேவனுடைய உண்மையைக் குறித்து என் தாயாரும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார்கள். அதில் அவர்கள் ஆண்டவர் தம் அபிஷேகத்தை, கிருபையை, பெலத்தைக் கொண்டு எப்படி தன்னை சுமக்கிறார் என்பதை பகிர்ந்துகொண்டுள்ளார்கள்.

அன்பானவர்களே, நீங்கள் உங்களுக்கு மிகவும் நெருங்கியவரை இழக்கக்கொடுத்திருக்கலாம்; இவ்வுலகில் தனிமையாய் இருப்பதாக உணரலாம். மக்கள் உங்களை கைவிட்டிருக்கலாம் அல்லது உங்களுக்கு ஆலோசனை கூறவோ, வழிகாட்டவோ யாரும் இல்லாதிருக்கலாம். என் வேதனையை புரிந்துகொள்ள ஒருவருமே இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நீங்கள் தனியே இல்லை என்பதை மறவாதிருங்கள். இந்த தேவன் இப்போதும் எப்போதும் உங்கள் தேவனாயிருக்கிறார். அவர் இறுதி வரை உங்களை வழிநடத்துவார் என்பதை அறிவது எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது! நீங்கள் தனிமையாய் உணர்ந்தாலும், தேவனை கிட்டிச்சேர்ந்து, அவரது பிரசன்னத்தில் நேரம் செலவழிக்கலாம். நீங்கள் அவரோடு நடக்கும்போது, அவர் ஏற்றவர்களை உங்கள் வாழ்க்கைக்குள் கொண்டு வந்து, உங்களுக்குத் தேவையான ஆலோசனையையும் வழிநடத்துதலையும் தம் வார்த்தையின் வாயிலாகவும், ஆவியின் வாயிலாகவும் அருளிச்செய்வார். ஆகவே, யாரிடம் செல்வது என்று அதைரியப்படாதிருங்கள். ஆண்டவர்தாமே உங்கள் தேற்றரவாளனாக, ஆலோசனை கொடுப்பவராக, வழிகாட்டுகிறவராக இருப்பார். உங்கள் உள்ளத்துக்குள் அவர் பேசி, நடைகளை வழிநடத்தி, அவரது சித்தத்தை நிறைவேற்றும் கிருபையை தருவார்.

ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, எப்போதும் என் தேவனாக இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் தனிமையாக உணரும்போது, என்னை தேற்றி, என் இருதயத்தை உம் பிரசன்னத்தாலும் சமாதானத்தாலும் நிரப்பும். முடிவுகளை எடுக்கும்போது என்னை வழிநடத்தி, உம் வார்த்தையினாலும் ஆவியாலும் உம் சத்தத்தைக் கேட்பதற்கு கற்றுக்கொடுத்தருளும். தங்களுக்கு அன்பானோரை இழக்கக்கொடுத்திருக்கிறவர்களைப் பெலப்படுத்தும்; கைவிடப்பட்டதாகவோ, நம்பிக்கையற்றதாகவோ உணர்கிறவர்களை ஊக்கப்படுத்தும். உம் பிள்ளைகளுக்கு பக்தியுள்ள ஆலோசனையை, ஞானத்தை, உம் சித்தத்தின்படி நடப்பதற்கான கிருபையை அளித்திடும். எல்லா சூழ்நிலையிலும் உம்மை நம்புவதற்கும், அனுதினமும் உம்மை நெருங்கியும் இருப்பதற்கு உதவும். என் ஆறுதலாக, பெலனாக இருந்து இறுதி வரை என்னை வழிநடத்தும் என்று இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன், ஆமென்.