அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்த வசனம், "நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான்" (சங்கீதம் 92:12) என்று கூறுகிறது. தம் பிள்ளைகள் வர்த்திக்கவேண்டும்; செழிக்கவேண்டும்; பிறருக்கு ஆசீர்வாதமாக விளங்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பனை மரம் உயரமாக வளர்ந்து சத்துள்ள உணவையும், பழத்தையும், வீடு கட்டுவதற்கான பொருட்களையும் அளிப்பதுபோல, தேவன், நம் வாழ்வானது நம் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், வேலை செய்யுமிடம், தொழில், நம்மை சுற்றியுள்ளவர்கள் என்று அனைவருக்கும் ஆதரவாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அவர் நம்மை வனாந்தரத்திலிருந்து, புத்துணர்ச்சியும் பரிபூரணமும் செழிப்பும் நிறைந்த ஏலிமுக்குள் நடத்த விரும்புகிறார். ஏலிமில் பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது என்று வேதம் கூறுகிறது (யாத்திராகமம் 15:27). வனாந்தரத்தை தேவனால் அப்படி ஆசீர்வாதமாக இடமாக மாற்றுவதற்கு முடியும். நாம் அவரது நாமத்தை துதிக்கும்படி கர்த்தர் செழிப்பை தருகிறார். நாம் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, நம்மை அதிசயமாய் நடத்திவந்த தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்போம் (யோவேல் 2:26). ஜனங்கள், கர்த்தருக்கு முன்பாக தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தனர் என்றும், "கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், ஓசன்னா" என்று கூறி இயேசுவை எருசலேமுக்குள் வரவேற்றனர் என்றும் வேதத்தில் எழுதப்பட்டுள்ளது (வெளி. 7:9; யோவான் 12:13). தேவன், நம்மை தம் ஆசீர்வாதத்தினாலும், அற்புதங்களினாலும் திருப்தியாக்கும்போது நாம் களிகூர்ந்து அவரை துதித்து, மகிமைப்படுத்தவேண்டும்.

நாம் தம் ராஜ்யத்தை கட்டும்படியும் மக்களின் இருதயங்களை அவரது ஆலயமாக மாற்றும்படியும் ஆண்டவர் நம்மை செழிக்கப்பண்ணுகிறார். சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவதற்காக லீபனோனின் கேதுரு மரங்களை வெட்டும்படி கேட்டுக்கொண்டான் (1 இராஜாக்கள் 5:6). இன்று தேவனுடைய ஆலயம் வெறுமனே கட்டடமாக அல்ல; மக்களின் இருதயங்களாக உள்ளது. தம் ராஜ்யம் நம் வாயிலாக கட்டப்படும்படி தேவன் நமக்கு பணத்தை, செல்வத்தை, தாலந்துகளை, அபிஷேகத்தை, ஞானத்தை, திறமைகளை, வாய்ப்புகளை அளிக்கிறார். ஆகவே நாம் நம் இருதயத்தை அவருக்குக் கொடுக்கவேண்டும்; மற்றவர்களும் ஆண்டவரை அறிந்துகொண்டு, அவரது வல்லமையை அனுபவித்து, அவரது ஊழியராக மாறும்படி ஊழியத்தை தாங்க வேண்டும்.

தேவன் நம் இல்லங்களை, குடும்பங்களை, வியாபாரத்தை, வருமானத்தை, வேலையை ஆசீர்வதிக்க விரும்புகிறார். தேவ ஜனங்கள் வீடுகளைக் கட்டி, அவற்றை சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றும், தங்கள் கரங்களின் கிரியைகளை அனுபவிப்பார்கள் என்று வேதம் கூறுகிறது (ஏசாயா 65:22,23). ஆண்டவரால் நம் குடும்பங்களை கட்டியெழுப்பவும், நம் வியாபாரங்களை ஆசீர்வதிக்கவும், கடனிலிருந்தும், வட்டி பாரங்களிலிருந்து விடுவிக்கவும், மருத்துவ செலவுகள் வந்திடாமல் காக்கவும், தேவையற்ற செலவுகளை அகற்றவும், நமக்கு ஆரோக்கியம், சமாதானம், சந்தோஷம், செல்வம், பரிபூரணத்தை அருளவும் முடியும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை பனையைப்போல செழிக்கப்பண்ணுவீராக; வனாந்தரத்திலிருந்து என்னை புத்துணர்ச்சியும் பரிபூரணமும் நிறைந்த ஏலிமுக்குள் நடத்துவீராக. என் குடும்பத்தை, பிள்ளைகளை, வியாபாரத்தை, வேலையை, வருமானத்தை, வாழ்வை எப்பக்கமும் ஆசீர்வதிப்பீராக. எனக்கு செழிப்பை, சமாதானத்தை, ஆரோக்கியத்தை, ஞானத்தை, தாலந்துகளை, திறமைகளை அருளுவதோடு பிறருக்கு ஆசீர்வாதமாக விளங்கும்படி அபிஷேகிக்கவும் செய்வீராக. உம்மை சந்தோஷத்தோடு துதிக்கவும், உம் ராஜ்யத்தையும், மக்களின் உள்ளங்களில் உம் ஆலயத்தையும் கட்டவும் உதாரத்துவமாக கொடுக்கவும் உதவி செய்யும். வணிக ஆசீர்வாத திட்டத்தில் இணைந்திருக்கும் அனைவருக்கும் ஞானம், முதலீடு, வாடிக்கையாளர், வாய்ப்புகள், ஆர்டர்கள், சான்றுகள், பெருக்கம் அனைத்தையும் அளித்து ஆசீர்வதித்தருளும். திருட்டு, பொல்லாப்பு, பில்லிசூனியம், மந்திரவாதத்திலிருந்து எல்லாவற்றையும் பாதுகாத்தருளும். உம் மகிமைக்கென எங்களை வர்த்திக்கப்பண்ணி, கனிகொடுக்கச் செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.