எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சருமான இயேசு கிறிஸ்துவின் வல்ல நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு ஆண்டவர் நமக்கு, "கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களை விட்டுப் பிரித்தெடுத்தேன்" (லேவியராகமம் 20:26) என்ற அழகான வாக்குத்தத்தத்தைக் கொடுத்துள்ளார். எவ்வளவு நேர்த்தியான வாக்குத்தத்தம் இது! இந்த உலகத்தில் பாவமான எல்லா கிரியைகளையும் செய்து நீங்கள் பாவத்தில் வாழ்ந்துகொண்டிருக்கலாம். சாத்தானே எப்போதும், "இதைச் செய், அதைச் செய்," என்று உங்களை வழிநடத்திக்கொண்டிருக்கலாம். எல்லா தவறான காரியங்களையும் நீங்கள் செய்துகொண்டிருக்கலாம். ஆனால் ஆண்டவர், "என் மகனே, என் மகளே, நீ என்னைப்போல பரிசுத்தமாகவேண்டும்," என்று கூறுகிறார்.

பரிசுத்தமாக வாழ்வது எப்படி? வேதத்தை வாசித்தீர்களானால், தேவன் நம்மை மறுரூபமாக்கினால், நாம் அவரது ஜனங்களாவோம் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு முன்னே அவரைப் பற்றி எதுவும் நமக்குத் தெரியாது. ஆனால், இப்போது நாம் அந்நியரும் பரதேசிகளுமல்ல! தேவனுடைய வீட்டில் உடன் வசிப்பவர்களாயிருக்கிறோம்; கர்த்தரின் பரிசுத்த ஆலயமாக மாறுகிறோம் (எபேசியர் 2:13-22). எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நீங்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள். சமாதானத்துடன், தேவ வல்லமையினால் நிறைந்தவர்களாக, தேவ பிரசன்னமுள்ளவர்களாக வாழ்கிறீர்களா? அல்லது எப்போதும் இருதயத்தில் உபத்திரவத்துடன், தவறான காரியங்களையே செய்துகொண்டிருக்கிறீர்களா? உங்களுக்குப் புதிய வாழ்வைத் தருவதற்கே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். அவர் தம் ஜீவனை சிலுவையில் கொடுத்தார்; அதன் வாயிலாக இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எல்லா பாவங்களும் நீங்க நம்மை சுத்திகரிக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 9ம் அதிகாரத்தை வாசித்தீர்களானால், பெரிய தேவ மனுஷனான பவுலாக மாறிய சவுலைக் குறித்து அறியலாம். வேதம், கோபாக்கினையின் பாத்திரமாக இருந்த அவனை, ஆண்டவர் தம் மிகுந்த இரக்கத்தினாலே கிருபாபாத்திரமாக மாற்றினார் என்று கூறுகிறது (ரோமர் 9:23). வேதத்தில் அவன் எழுதியுள்ள எல்லாவற்றையும் பாருங்கள்; தினமும் அதை வாசியுங்கள். அதன் பிறகு அவன் ஆண்டவருக்குள் எவ்வளவு மகத்தான வாழ்க்கை வாழ்ந்துள்ளான்! அன்பானவர்களே, அதுபோன்ற பாக்கியமான வாழ்வை நீங்கள் இப்போதே பெற்றுக்கொள்ள முடியும். இயேசுவை சொந்த இரட்சகராக இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லையானால், இன்றே ஏற்றுக்கொள்ளுங்கள். இப்போதே நம்மை அவர் முன்னே அர்ப்பணிப்போம். சவுல், பவுலாக மாறியதுபோல, நீங்களும் உங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும். சாத்தானின் வழிகளில் செல்லாதீர்கள்; இயேசு கிறிஸ்துவின் வழிகளில் நடந்திடுங்கள். இப்போது ஜெபித்து, உங்கள் வாழ்வை முற்றிலுமாக இயேசுவுக்கு அர்ப்பணிப்பீர்களா? அவரை நோக்கிக் கூப்பிடுங்கள்; சிலுவையை நோக்கிப் பாருங்கள். ஆண்டவர் உங்களை மன்னிப்பார். அவர் உங்களுக்குப் புதுவாழ்வைத் தருவார். நீங்கள் புதிய மனுஷனாக / மனுஷியாக மாறுவீர்கள்.

ஜெபம்:
அருமையான ஆண்டவரே, இன்று நான் இருக்கிறவிதமாகவே உம் முன்னே வருகிறேன். இயேசுவின் இரத்தத்தின் மூலமாக எல்லா பாவங்களும் நீங்கும்படி என்னைக் கழுவும். என் இருதயத்திலிருந்து தவறான ஆசைகள் எல்லாவற்றையும் எடுத்துப்போடும்; உம்மைப்போல என்னை பரிசுத்தமாக்கும். உமக்குச் சொந்தமானவனா(ளா)க என் வாழ்க்கையை மறுரூபமாக்கும். இனிமேலும் நான் அந்தகார வழிகளில் நடக்காதிருக்கட்டும். தயவாய் என்னை உம் சமுகத்தால், சமாதானத்தால், வல்லமையால் நிரப்பிடும். உம் மகிமையின் கிருபாபாத்திரமாக என்னை மாற்றும். என் வாழ்க்கை முழுவதையும் உம் அன்பின் கரங்களில் ஒப்படைத்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.