எனக்கு அருமையான தேவ பிள்ளையே, உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்" (ஏசாயா 60:22) என்ற வாக்குத்தத்த வசனத்தை தியானிப்போம். இந்த வசனத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு தாவீது ஆவான். அவன் மேய்ப்பனாக இருந்தான். எப்படி ராஜாவானான் என்பதை, "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்," என்று விவரித்துள்ளான் (சங்கீதம் 23:1). ஆம், அன்பானவர்களே, வெற்றி பெறுவதற்கு, இயேசுவை உங்களை மேய்ப்பராக, உங்கள் ராஜாவாக, உங்கள் தேவனாக கொள்வதே வழியாகும். அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களுக்காக யாவற்றையும் செய்வார்.
நானும் ஆண்டவரை விட்டு தூரமாக இருந்தேன். எப்போதும் விளையாடிக் கொண்டே இருப்பேன்; ஆண்டவருக்கேற்ற காரியங்களை அறியாதிருந்தேன். ஆனால், ஆண்டவர் அவரை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்படி செய்தார். என் வாழ்க்கை முற்றிலும் மாறினது. தேவன் என்னை ஆசீர்வதிக்க ஆரம்பித்தார். அருமையான ஆவிக்குரிய கணவரை தந்ததுடன், பல்வேறு ஆசீர்வாதங்களையும் அளித்தார். நான் அவரை உண்மையாய்த் தேடினபடியால் அப்படி ஆசீர்வதித்தார். அதைத்தான் வேதம், "நீ ஆயிரமாவாய், பலத்தவனாவாய்" என்று கூறுகிறது. அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்; அவ்வளவுதான். மிகவும் எளியது! தாவீது கூறுகிறபடி அவரை உங்கள் தலைவராகவும் எல்லாமுமாகவும் வைத்துக்கொள்ளுங்கள். உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள். அல்லேலூயா! நம் தேவன் எவ்வளவு பெரியவர்.
23ம் சங்கீதத்தின் வசனங்களை வாசித்தால் பரவசமடைவீர்கள். ஒவ்வொரு வசனமும் ஆசீர்வாதமானதாயிருக்கும். நீங்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்கள் இந்த உலகத்தில் சிறிய நபராக இருக்கலாம்; சிறிய வேலையை செய்யலாம். எல்லோரும், "உன்னை எனக்குப் பிடிக்கவில்லை," என்று கூறலாம். அலட்சியம் பண்ணப்பட்டவராக இருக்கலாம். ஆனால், நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொள்ளும்போது, அவரது வழியில் நடக்கும்போது, அவர் தாவீதைப்போல உங்களை ஆசீர்வதிப்பார். தாவீது மேய்ப்பனாக இருந்தான். ஆனால், பெரிய தேசத்தின் ராஜாவாக மாறினான். அதேவண்ணமாக, நீங்களும் பெரிய ஸ்தலங்களுக்கு உயர்த்தப்படலாம். பணிபுரியும் இடத்திலேயே நீங்கள் குற்றஞ்சுமத்தப்படலாம்; மக்கள் உங்களுக்கு விரோதமாக பல காரியங்களைச் சொல்லலாம். தேவனை பற்றிக் கொள்ளுங்கள்; அவரையே இறுகப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லாமும் முற்றிலுமாக மாறும். தேவன் எல்லாவற்றையும் மாற்றிப்போடுவார். அவர் உங்களை மகா உயரங்களுக்கு கொண்டு செல்வார். நீங்கள், தாவீதைப்போல ஆசீர்வதிக்கப்படுவீர்கள். வாருங்கள், நாம் தேவனை நோக்கிப் பார்க்கலாம். அவர் உங்களுக்கு வேண்டியவற்றைச் செய்வார்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, நீரே என் மேய்ப்பராயிருக்கிறீர். நான் உம்மை பின்தொடருவேன். என் வாழ்வில் ஒவ்வோர் அடியாக உம் பாதையில் என்னை வழிநடத்துவீராக. நான் சிறியவனாக அல்லது மறக்கப்பட்டுவிட்டதாக நினைக்கும்போது, உம் வாக்குத்தத்தத்தை நினைவுப்படுத்துவீராக. என் வாழ்க்கையை மறுரூபமாக்கி, உம் சித்தத்தின்படி என்னை உயர்த்துவீராக. உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளவும், எப்போதும் உம் குரலை நம்பவும் எனக்கு உதவி செய்வீராக. உம் நோக்கத்தின், ஆசீர்வாதத்தின் பாத்திரமாக என்னை உருவாக்குவீராக. என் வாழ்க்கை உம் மகத்துவத்தையும் மகிமையையும் காட்டட்டும் என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


