அன்பானவர்களே, உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைக்கு ஆண்டவர் பலத்த ஓர் அற்புதத்தை உங்களுக்காக ஆயத்தப்படுத்தியிருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன். "ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்" (ஏசாயா 44:5) என்பதே இன்றைய வாக்குத்தத்தம். எவ்வளவு ஆச்சரியமாயிருக்கிறது பாருங்கள்! ஆண்டவர் நம்மை தமக்குச் சொந்தமானவன்(ள்) என்று அழைப்பதோடு, தம் பிள்ளைகளை கனப்படுத்தவும் செய்கிறார். அவரது மகிமை நம் வாழ்வின் வாயிலாக வெளிப்படும்போது, நம்மில் காணும் சாட்சி வாயிலாக மற்றவர்களும் அவரைப் பின்பற்றும் ஊக்கத்தைப் பெறுவார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தம்பதியர் மிகுந்த சந்தோஷத்தோடு எங்களைக் காண வந்தார்கள். என் தந்தையின் ஊழியத்தினால் தாங்கள் பெற்றுக்கொண்ட ஓர் அற்புதத்தை எங்களோடு பகிர்ந்துகொண்டார்கள். ஆண், பெண் என்று இரண்டு பிள்ளைகளை அவர்கள் அழைத்து வந்திருந்தனர். "உங்கள் குடும்பத்தினரின் வீடியோக்களை எங்கள் பிள்ளைகள் உண்மையான ஆர்வத்துடன் பார்க்கிறார்கள். நாங்கள் மிகுந்த ஆசீர்வாதம் பெற்றிருப்பதால் இவர்களுக்கும் சாம், ஷேரன் என்று பெயர் வைத்திருக்கிறோம்," என்று கூறினார்கள். மிகுந்த விளையாட்டுப்போக்குக் கொண்ட அந்தக் குட்டிப்பையனை நான் பார்த்து, "நல்ல பையனாக இரு. தயவுசெய்து என் பெயரை காப்பாற்று," என்று கூறி சிரித்தேன். அவன் உடனே தலையாட்டி, "சரி," என்று கூறினான். அது வேடிக்கையான தருணமானாலும், ஒருவரது வாழ்க்கை தேவனால் ஆசீர்வதிக்கப்படும்போது, தேவனுடைய நன்மைக்கும் உண்மைக்கும் தொடர்புடையதாக அவர் பெயர் மாறிவிடுகிறது என்ற அருமையான சத்தியத்தை நான் உணர்ந்தேன்.
ஒருவேளை இன்று சூழ்நிலை வித்தியாசமாக இருக்கலாம். மக்கள் உங்களுக்கு விரோதமாக பேசலாம். உங்கள் முயற்சிகளை, வேலையை குறை கூறலாம்; உங்கள் பெயருக்கு வெட்கத்தை ஏற்படுத்தலாம். உங்கள் உண்மை தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக, கடினமான உழைப்பு கவனிக்கப்படாமற்போனதாக எண்ணி அதைரியப்படலாம். மனந்தளர்ந்து போகாதிருங்கள். உங்கள் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. வெட்கத்தை கனமாக மாற்றுவதற்கு ஆண்டவரால் முடியும். அவர் ஏற்றநேரத்தில் உங்களை உயர்த்துவார்; உங்கள் வாயிலாக தம் மகிமையை வெளிப்படுத்துவார். நீங்கள் அவரையே நம்பும்போது, உண்மையாயிருக்கும்போது, அவர் உங்களுக்கு அருளியுள்ள வரங்களை பயன்படுத்தும்போது, உங்களைக் கொண்டு அவர் பெரிய காரியங்களை செய்து முடிப்பார்.
உங்கள் தாலந்துகள், திறமைகள், உண்மை எல்லாமே தேவனுடைய கரங்களில் கருவிகளாக உள்ளன. அவர் அவற்றை அநேகரை ஆசீர்வதிக்கவும், தம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வரவும் பயன்படுத்தலாம். ஒருநாள், மக்கள் சொந்த பெருமைக்காக உங்களைப் புகழாமல், உங்கள் வாயிலாக தேவன் செய்தவற்றுக்காக அவரை மகிமைப்படுத்துவார்கள். உங்கள் வாழ்க்கை மற்றவர்களுக்கு கிறிஸ்துவை காட்டும் சாட்சியாக மாறும். ஆகவே, ஆண்டவரை பின்பற்றுங்கள். முழு மனதுடன் அவரை சேவியுங்கள். உங்களால் சிறந்தவற்றை தொடர்ந்து செய்திடுங்கள்; உங்கள் வாழ்க்கையின் வாயிலாக அவர் வல்லமையாக செயல்படுவதை எதிர்பாருங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை உமக்குச் சொந்தமானவனெ(ளெ)ன்று அழைப்பதற்காகவும், உம் கிருபைக்குச் சாட்சியாக வைப்பதற்காகவும் ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்க்கையின் வாயிலாக உம் மகிமை வெளிப்படுத்தப்படுவதாக; அதன் வாயிலாக அநேகர் உம்மை அறிந்துகொள்வார்களாக. வெட்கம், நிராகரிப்பு, அதைரியம் யாவற்றையும் அகற்றி, அவ்விடத்தை உம் கனத்தாலும் தயவாலும் நிரப்புவீராக. என் கைகளின் பிரயாசத்தை ஆசீர்வதியும்; என் தாலந்துகளையும் தகுதியையும் பெலப்படுத்தும்; உம் ராஜ்யத்திற்கென்று என் ஆவிக்குரிய வரங்களைப் பயன்படுத்தும். உம் நாமத்திற்கு மகிமை கொண்டு வரும் கனிகளையும், உம்மண்டை அநேகரை வழிநடத்தும் கனிகளையும் நான் கொடுக்கும்படி செய்யும். உம் பரிபூரண சித்தத்தின்படி என்னை நிலைப்படுத்தி, நான் செல்லுமிடமெங்கும் ஆசீர்வாதமாக விளங்கப்பண்ணவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


