அன்பானவர்களே, தேவன் தம் கரத்தினால் நம்மை வழிநடத்துவது, அற்புதமான ஓர் அனுபவமாகும். அவரது சமுகத்தில் நாம் பாதுகாப்பையும், நேசத்தையும், சுகமாகக் காக்கப்படுதையும் உணரலாம். இன்றைக்கு, தேவன், "சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான்" (நீதிமொழிகள் 22:11) என்ற வசனத்தின் வாயிலாக இரண்டு நேர்த்தியான தகுதிகள், நம் வாழ்வை மாற்றும் என்று நினைவுப்படுத்துகிறார். தன் இருதயத்தைச் சுத்தமாக காத்துக்கொள்ளுகிறவன், இனிமையாக பேசுகிறவன் ராஜாக்களின் தயவை பெறுவான் என்று இந்த வசனம் கூறுகிறது.
முதலாவது, தேவன் நாம் சுத்தமான இருதயமுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். நாம் அவர் முன்பாக கபடற்றவர்களாகவும் உண்மையானவர்களாகவும் இருக்கவேண்டும். ஆனாலும், பல வேளைகளில் இந்த உலகத்தின் தவறான ஆசைகளும் சுயநல நோக்கங்களும் நம் எண்ணத்தினை கறைப்படுத்திவிடக்கூடும். தேவனால் நம் உள்ளங்களைச் சுத்தப்படுத்தி, மறுரூபப்படுத்த முடியும் என்பதே நற்செய்தியாகும். நாம் கேட்டுக்கொண்டால், அவர் அசுத்தத்தை அகற்றி, நம்மை தம் சுபாவத்தால் நிரப்புவார்.
இரண்டாவதாக, இந்த சுத்தமான இருதயம் கிருபையுள்ள வார்த்தைகளை உண்டாக்கும். காயப்படுத்துகிற, அதைரியப்படுத்துகிற, பயத்தைப் பரப்புகிற வார்த்தைகளுக்குப் பதிலாக, நாம் கருணையும் ஞானமும் அன்பும் கிருபையும் நிறைந்த வார்த்தைகளைப் பேசவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நம் உள்ளங்கள் தேவனால் நிறைந்திருக்கும்போது, நம் வார்த்தைகள் அவரது குணாதிசயத்தை வெளிப்படுத்தும்.
சமீபத்தில், நான் சென்றிருந்த கூட்டம் முடிந்ததும் அநேகர் திரண்டு வந்தனர். நான் வெகுகாலத்திற்குப் பிறகு அங்கு சென்றிருந்ததால், பலர் என்னை சந்திக்கவும், புகைப்படம் எடுத்துக்கொள்ளவும், ஜெபிக்கவும் விரும்பினர். அந்தக் கூட்டத்தின் நடுவில் இரண்டு சிறுபிள்ளைகள் என் கவனத்தைக் கவர்ந்தனர். அவர்கள் புன்னகையோடு வந்து, "அண்ணா, எப்படி இருக்கிறீர்கள்?" என்று அன்போடு கேட்டனர். பிறகு, தேவன் படிப்பதற்கான ஞானத்தினால் தங்களை நிரப்பவேண்டுமென்று ஜெபிக்கக் கேட்டுக்கொண்டனர். அவர்களுடைய வெகுளித்தன்மையும், இயேசுவின்மேல் கொண்டிருந்த உண்மையான அன்பும் விசேஷமானவை. அங்கிருந்த அனைவரைக் காட்டிலும் தங்கள் சுத்தமான இருதயங்களால் அவர்கள் தனித்துத் தெரிந்தனர். உடன்தானே நான் அவர்கள் பக்கமாக ஈர்க்கப்பட்டேன்; தேவனுடைய கரங்களில் வல்லமையான கருவிகளாக மாறுவார்கள் என்று விசுவாசிக்கிறேன்.
சுத்த இருதயமும் இனிமையாக பேசுவதும் இதைச் செய்ய முடியும். அவை தேவனுடைய குணாதிசயத்தைக் காட்டுவதால் நாம் மற்றவர்களை ஈர்க்கும்படி செய்யும். தானியேல் ராஜாக்களின் கண்களில் தயவு பெற்றதுபோல, தேவனுடைய உள்ளமும் அவரது வார்த்தைகளும் நம் வாயிலாக பாயும்போது மக்கள் முன்பாக நமக்கு தயவு கிடைக்கும்படி அவரால் செய்யக் கூடும். இன்று, நம் உள்ளங்களை சுத்திகரித்து, நம் பேச்சை மறுரூபமாக்கும்படி தேவனிடம் கேட்போம். நம் வார்த்தைகள் கிருபையும் கருணையும் ஞானமும் அன்பும் நிறைந்தவையாய் இருக்கட்டும். நம் உள்ளங்களிலும் உரையாடல்களிலும் கிறிஸ்துவை வெளிப்படுத்தினால், தேவன் தம் மகிமைக்காக, தயவின் வாசல்களைத் திறப்பார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எல்லா தவறான ஆசைகளையும், நோக்கத்தை அகற்றி எங்கள் இருதயத்தை சுத்தப்படுத்தும். எங்களை உம் பரிசுத்த ஆவியால் நிரப்பும். கிருபையும் ஞானமும் நிறைந்த வார்த்தைகளைப் பேசுவதற்கு எங்களுக்கு உதவும். எங்கள் வாழ்க்கை உம் அன்பை வெளிப்படுத்தி, மக்களுக்கு முன்பாக தயவை பெறட்டும். நாங்கள் உம் குணங்களில் நடந்து, உம் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


