அன்பானவர்களே, இன்றைக்கு, "நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்" (சங்கீதம் 75:10) என்ற வசனத்தை தியானிக்கலாம். இந்தக் கொம்புகள் எதைக் குறிக்கின்றன? அவை, கனத்தையும் பெலனையும் அதிகாரத்தையும் வல்லமையையும் குறிக்கின்றன. இந்த வசனம் மொர்தெகாய் என்ற மனிதனின் வாழ்வில் நிறைவேறியதை பார்க்கிறோம். தான் செய்த எல்லாவற்றையும் அவன் நீதியாய்ச் செய்தான். ஆனால், ஆமான் எல்லா அங்கீகாரத்தையும் கனத்தையும் தனக்கே எடுத்துக்கொள்ள விரும்பினான். ஆமான், தன்னையே சிறந்தவன் என்றும் எல்லா புகழ்ச்சிக்கும் உரியவனாகவும் காண்பித்தான்; ஒருபோதும் மொர்தெகாயை எழும்ப அனுமதிக்காதிருந்தான். ராஜா, ஆமானை தனக்கு அடுத்த இரண்டாவது ஸ்தானத்திற்கு உயர்த்தினான்.
ஆனால், ராஜா, எஸ்தர் மூலமாக உண்மையை அறிந்துகொள்ளும் நேரம் வந்தது. ஆமான், மொர்தெகாய்க்காக ஆயத்தம் பண்ணியிருந்த அதே அழிவு அவனுக்கே வந்தது. மொர்தெகாயின்மேல் ராஜா மகிழ்ந்ததினால் அவனை கனப்படுத்தி உயர்த்தினான். ராஜாவை பாதுகாப்பதற்காக மொர்தெகாய் காட்டிய வீரம் அவனுக்கு கனத்தைக் கொடுத்தது. எஸ்தர் இரண்டாம் அதிகாரத்தில் நாம் வாசிப்பதுபோல, நீதிமானாகிய அவன் ராஜாவை பாதுகாத்தான்; தன் ஜனங்களுக்காக ஜெபித்தான்; துன்மார்க்கனுக்கு அடிபணிய மறுத்தான். தேவன் அவன் கொம்பை உயர்த்தி அவனை கனப்படுத்தினார்.
ஆம், அன்பானவர்களே, இன்றைக்கு நீங்களும் இதுவரை செய்த நீதியான காரியங்கள் எவையும் அங்கீகாரம் பெறவில்லை என்று நினைக்கலாம். நீங்கள் நேர்மையாக, வீரமாக இருந்திருக்கலாம்; உயிரை பணயம் வைத்திருக்கலாம்; ஆனாலும் எனக்கு என்ன நடக்கும் என்று அங்கலாய்த்துக்கொண்டிருக்கலாம். பயப்படாதிருங்கள். நீதிமானின் கொம்புகள் உயர்த்தப்படும். இன்று தேவன் உங்களைக் கனப்படுத்துவார்; உயர்த்துவார்; நீங்கள் சரியானவற்றை செய்வதால் உங்கள்மேல் பிரியங்கொண்டு உங்களை உயரமான ஸ்தானங்களில் அமர்த்துவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீதிமானின் கொம்புகள் உயர்த்தப்படும் என்று உற்சாகப்படுத்தும் வாக்குத்தத்தத்தை தந்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் மொர்தெகாயை கனப்படுத்தியதுபோன்று என்னையும் ஏற்றநேரத்தில் கனப்படுத்தும். மற்றவர்களால் அங்கீகரிக்கப்படாவிட்டாலும் எப்போதும் உண்மையாயிருக்கவும், நேர்மையாயிருக்கவும், வீரமாக இருக்கவும் எனக்கு உதவி செய்யும். என் உள்ளத்திலிருந்து எல்லா பயத்தையும் அகற்றும்; என் வாழ்க்கை உமக்குப் பிரியமானதாக இருக்கட்டும். நீர் என்னை உயர்த்தி, எனக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கிற ஸ்தானத்தில் அமர்த்துவீர் என்று நம்பி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.