அன்பான சகோதரரே / சகோதரியே, இன்றைக்கு, "உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன்" (ஏசாயா 43:4) என்ற அருமையான வாக்குத்தத்தத்தை தியானிப்போம். கர்த்தர், நித்திய அன்பினால் உங்களை நேசித்தார். தம் அன்பினால் அவர், வர்த்திக்கப்பண்ணுவார்; உங்கள் வாழ்வில் தயவை, பாதுகாப்பை, பரிபூரண ஆசீர்வாதத்தை அருளுவார்.
2025ம் ஆண்டில் என் பிறந்தநாளின்போது, ஓர் அன்பு சகோதரர், "உங்கள்மேல் மனுஷரையும் மிருகஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்" (எசேக்கியேல் 36:11) என்ற வாக்குத்தத்த வசனத்தை எனக்குக் கொடுத்தார். அந்த வாக்குத்தத்தத்தை நான் தனிப்பட்டவிதத்தில், குறிப்பாக, "உங்கள்மேல் மனுஷரையும்... பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்" என்ற வார்த்தைகளை ஏற்றுக்கொண்டேன்.
2025ம் ஆண்டை நான் கவனித்தபோது, கர்த்தர், எழுத்தின்படி, என் குடும்பத்தை வர்த்திக்கப்பண்ணியதை காண முடிந்தது. இயேசு அழைக்கிறார் ஊழியத்திலும், காருண்யா பல்கலைக்கழகத்திலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டேன். எண்ணிக்கை அதிகரிக்கும்போது மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஒருநாள் அன்பான ஒரு தாயார், என்னிடம், "இவாஞ்சலின், உன் குடும்பம் இப்போது வர்த்திக்கிறது. அநேக பிரச்னைகளும் வரக்கூடும். ஆகவே, கவனமாயிரு," என்று கூறினார்கள். ஆனால், நான், "கர்த்தர், எந்த அளவு அதிகமாக என் குடும்பத்தினரை ஆசீர்வதிக்கிறாரோ அந்த அளவு எனக்கு சந்தோஷம்," என்று பதில் கூறினேன். அதையே தான் ஆண்டவர் என் வாழ்வில் செய்தார். இன்று எனக்கு மூன்று பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். நான் என் பிள்ளைகளிடம் எனக்கு பன்னிரண்டு பேரப்பிள்ளைகள் வேண்டும் என்று விரும்புகிறேன். எத்தனை அதிகமோ அவ்வளவு மகிழ்ச்சி," என்று கூறுவேன். ஆம், கர்த்தர் உங்களுக்கு மக்களை வர்த்திக்கப்பண்ணுவார்.
ஊழியத்திலும் அப்படியே தம் ராஜ்யத்திற்கென்று ஆண்டவர் எங்களுக்கு ஒரு சேனையைக் கொடுத்திருக்கிறார். காருண்யா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வாயிலாக அநேக குடும்பங்களைக் கொடுத்து அவர் எங்களை ஆசீர்வதித்துள்ளார். அன்பானவர்களே, நாம் எவ்வளவு பெருகுகிறோமோ, அந்த அளவு அதிகமாக தேவன் நம் வாழ்வில் ஆசீர்வாதங்களை பொழிந்தருள்வார்.
இந்தச் சத்தியத்தை இஸ்ரவேலரின் வாழ்வில் பார்க்கிறோம். அவர்கள் எண்ணிக்கையில் பெருகியபோது, எகிப்தில் வந்த புதிய ராஜா, "இஸ்ரவேலர் நம்மைக் காட்டிலும் பெருகியுள்ளார்கள்," என்று கூறினான். அவர்களை ஒடுக்குவதற்கு விசாரணைக்காரரை வைத்தான் (யாத்திராகமம் 1:11). ஆனாலும், அடுத்த வசனம், எந்த அளவு எகிப்தியர், இஸ்ரவேலரை ஒடுக்கினார்களோ, அந்த அளவு இஸ்ரவேலர் பலுகிப்பெருகினார்கள் என்று கூறுகிறது. அதினால் எகிப்தியர் அவர்களைக் குறித்து பயந்தார்கள்.
அன்பானவர்களே, இதே ஆசீர்வாதம் இன்று உங்கள் குடும்பத்திற்கும் வரும். தேவன் உங்களை நேசிக்கிறார். அவர் உங்கள் குடும்பத்தை, ஆசீர்வாதத்தை, வேண்டியவற்றை, எல்லா நன்மைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார். தேவன்தாமே உங்களை, உங்கள் பிள்ளைகளை, உங்கள் பேரப்பிள்ளைகளை வர்த்திக்கப்பண்ணுவாராக. உங்கள் குடும்பத்தின் ஒவ்வொரு தலைமுறைமேலும் அவரது தயவு தங்கியிருப்பதாக.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நித்திய அன்பினால் என்னை நேசிப்பதற்கும், உம் பார்வைக்கு அருமையானவன்(ள்) என்று என்னை கூறியதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வாழ்வின் எப்பக்கமும் பெருகும்படியாக உம் வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்கிறேன். என் குடும்பத்தை, என் பிள்ளைகளை, என் பேரப்பிள்ளைகளை, என் வேலையை, என் ஊழியத்தை, நீர் எனக்கு அளித்திருக்கும் எல்லாவற்றையும் ஆசீர்வதித்தருளும். மற்றவர்கள் என்னை எதிர்த்தாலும், தவறாய் புரிந்துகொண்டாலும், உம் கிருபை, என்னை வளர்ந்து வர்த்திக்கப்பண்ணுவதாக. என் வீட்டை சந்தோஷத்தால், சமாதானத்தால், பரிபூரண ஆசீர்வாதங்களால் நிரப்பிடும். என் வாழ்க்கை உம் உண்மைக்கும் நன்மைக்கும் சாட்சியாக விளங்குவதாக. நான் செய்கிற எல்லாமும் உம் நாமத்திற்கு மகிமையையும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தையும் கொண்டு வரவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


