அன்பானவர்களே, தேவன் நம்மேல் மிகுந்த அக்கறையாயிருக்கிறார்; உண்மையாக கரிசனையாயிருக்கிறார். உபத்திரவங்கள் உங்களைச் சூழ்ந்திருக்கும்போது, இருள் நெருங்கிவரும்போது உங்கள் ஜெபங்கள் பரலோகத்தை அடையவில்லை என்று உணர தோன்றும். அதுபோன்ற தருணங்களில் தேவனுடைய சமுகம் இல்லாததுபோல் உணரலாம்; குற்றவுணர்வும் தனிமையுணர்வும் உதவியற்ற நிலையும் பாரப்படுத்தலாம். ஆனாலும் இயேசு, "நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைத் திக்கற்றவனாக விடேன், உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று வாக்குப்பண்ணியிருக்கிறார். அவர் உங்களோடிருப்பதை நீங்கள் உணர இயலாவிட்டாலும், உங்களோடுதான் இருக்கிறார். இதை விசுவாசித்து, "ஆண்டவரே ஸ்தோத்திரம். என்னால் உணர முடியாவிட்டாலும் நீர் என்னோடுதான் இருக்கிறீர்," என்று கூறுங்கள். "அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார்" (உபாகமம் 32:10) என்றும், உங்களைச் சுற்றி அக்கினி மதிலாயிருந்து, தீங்குக்கு விலக்கிக் காப்பார் என்றும் வேதம் கூறுகிறது (சகரியா 2:5).
தேவன் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவர். இயேசு திரளான மக்களைக் கண்டபோது மனதுருகினார்; பட்டினியாய் அவர்களை அனுப்பிவிட மறுத்தார் (மத்தேயு 14:14; 15:32). ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும் இருந்தபோது அவற்றை ஆசீர்வதித்து, பெருகப்பண்ணி, ஆயிரக்கணக்கானோரை போஷித்தார்; எல்லா தேவைகளையும் சந்தித்தார். அவ்வண்ணமாகவே, அவர் உங்களுக்கும் அருளிச்செய்வார்; உங்கள் வாழ்வில் ஒன்றும் குறைவுபடாது. அவர் உங்கள் ஆத்துமாவை, பெயரை, குடும்பத்தை, உங்களுக்குச் சொந்தமான எல்லாவற்றையும் காத்துக்கொள்வார். அவர் தந்தவற்றை இழந்துபோவோமோ என்ற அச்சம் உங்களுக்கு வேண்டாம்; அதைக் காத்துக்கொள்ள அவர் வல்லவராயிருக்கிறார்.
ஜார்க்கண்ட், பொக்காரோவை சேர்ந்த திருமதி வினிதா குரியாவின் ஆச்சரியமான சாட்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவர்கள் மகன் சாலொமோனை இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்திருந்தார்கள். 2019ம் ஆண்டு அவன் அறையில் படித்துக்கொண்டிருந்தபோது, தன் தந்தையை அழைத்து, பசிக்கிறது என்று கூறியிருக்கிறான். தந்தை தின்பண்டங்களை தேடி சமையலறைக்குச் சென்றிருக்கிறார். சாலொமோனும் பின்னால் சென்றிருக்கிறான். அறையை விட்டு வெளியே வந்த கொஞ்சநேரத்தில் மேலே சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறி விழுந்திருக்கிறது. சில நொடிகள் முன்னால் அது விழுந்திருந்தால் சாலொமோனுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். தேவன், பையனை பாதுகாத்தார். ஆனால், அத்துடன் அற்புதம் நின்றுவிடவில்லை. மறுநாள், குடும்பமாக காலையில் இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தபோது, நான் ஜெபத்தில், "உங்கள் பெயர் சாலொமோன். பெரிய ஆபத்திலிருந்து நீங்கள் காக்கப்பட்டிருக்கிறீர்கள்," என்று கூறியுள்ளேன். அதைப் பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். நிகழ்ச்சிகள் பல மாதங்களுக்கு முன்பே பதிவு செய்யப்படுவதை அவர்கள் அறிந்திருந்தாலும், தேவனது பாதுகாப்பை உறுதி செய்யும்வண்ணம் ஏற்ற சமயத்தில் அந்தச் செய்தி வந்ததை எண்ணி ஆச்சரியப்பட்டார்கள்.
தேவன் பரலோகத்தில் இருந்தாலும், உங்களோடும் இருக்கிறார்; உங்களை சூழ்ந்துகொண்டு, உங்கள்பேரில் கரிசனையாயிருக்கிறார்; உங்களைக் காத்துக் கொண்டிருக்கிறார். இதனால்தான் உங்கள் பிள்ளைகளை, பேரப் பிள்ளைகளை இயேசு அழைக்கிறார் இளம் பங்காளர்களாக இணைத்திடுங்கள் என்று உற்சாகப்படுத்துகிறோம். ஜெப கோபுரத்தில் அவர்களுக்காக பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்படும். இந்தப் பிள்ளைகள் மூலமாக தேவனுடைய ஊழியம் தாங்கப்படுகிறது; உள்ளமுடைந்த லட்சக்கணக்கானோருக்கு ஊழியம் செய்யப்படுகிறது; அவர்கள் தொடப்படுகிறார்கள். எல்லா நன்கொடைகளும் மற்றவர்களுக்கு நேரடியாக ஆசீர்வாதத்தை கொண்டுவருகிறது; பதிலாக உங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் பாதுகாக்கப்படுவார்கள்; அவர்கள் ஆத்துமாவும் வாழ்க்கையும் தேவ கிருபையினால் நிறைந்திருக்கும்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய கிருபைக்காகவும் என் வாழ்வில் உம்முடைய சமுகம் இடையறாது விளங்குவதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இருள் என்னை சூழ்ந்துகொள்ளும்போது, நான் தனிமையாய் உணரும்போது, நீர் என்னைச் சூழ்ந்துகொண்டு உம்முடைய கண்மணிபோல என்னை காத்தருள்வீர் என்பதை நினைப்பூட்டும். நீர் என்னை விட்டு விலகுவதில்லை; கைவிடுவதில்லை என்ற மாறாத வாக்குத்தத்தத்தை நம்புகிறேன். ஆண்டவரே, என்னுடைய எல்லா தேவைகளையும் அருளிச்செய்து, என் குடும்பத்தை காத்துக்கொண்டு, நீர் என்னிடம் ஒப்புக்கொடுத்தவை எல்லாவற்றையும் தக்கவைத்துக்கொள்ளும். நீர் என்னைச் சுற்றி அக்கினிமதிலாயிருக்கும் நிச்சயத்தோடு, என் வாழ்வில் உண்மையுள்ள மேய்ப்பராக இருக்கும் நிச்சயத்தோடு என் இருதயம் இளைப்பாற உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.