அன்பானவர்களே, "பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி" (சங்கீதம் 40:2) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். எவ்வளவு அருமையான நிச்சயம் இது! நம் தேவன் நம்மை இரட்சிக்கிறவர் மட்டுமல்ல, நம்மை நிலைநிறுத்துகிறவருமாயிருக்கிறார். வாழ்வின் புயல்கள் நம் அஸ்திபாரத்தை அசைத்தாலும், கர்த்தர், இயேசு கிறிஸ்துவாகிய உறுதியான கன்மலையை கொடுக்கிறார். தாவீது, "தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்" (சங்கீதம் 27:5) என்று கூறுகிறான். நாம் பெலவீனமாக இருக்கும்போது ஆண்டவர் தம் செட்டைகளுக்குள் நம்மை மறைத்துக்கொள்கிறார். நாம் பயப்படும்போது, நம்முடைய சூழ்நிலைகளுக்கும் மேலாக நம்மை உயர்த்துகிறார். யோனா, கடலின் ஆழத்தில் மூழ்கியபோது, "பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர்" (யோனா 2:6) என்று முறையிட்டான். தேவனுடைய இரக்கம் அடையமுடியாத அளவுக்கு எந்தக் குழியும் ஆழமானதல்ல. அன்பு தேவ பிள்ளையே, யோனாவை மீட்ட அதே தேவன் நிச்சயமாகவே உங்களையும் தூக்கியெடுப்பார்.

உங்கள் விசுவாசத்தை ஸ்திரப்படுத்தும்வண்ணம் அற்புதமான ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். ஆந்திர பிரதேசத்தின் காக்கிநாடாவை சேர்ந்தவர் சகோதரர் கணேஷ். அவரும் அவர் மனைவியும் கடுமையான பணக்கஷ்டத்தில் சிக்கிக்கொண்டார்கள். நம்பிக்கையை முற்றிலும் இழந்துபோனார்கள். பெருங்கடனிலும் துரோகத்திலும் ஆழ்ந்துகொண்டிருந்தார்கள். வேதனையில் மத்தியில் வாழ்க்கையை முடித்துக்கொள்ளக்கூடிய எண்ணம் அவருக்கு வந்தது. 2024ம் ஆண்டு ராஜமுந்திரியில் இயேசு அழைக்கிறார் பங்காளர் கூட்டம் நடைபெறுவதை கேள்விப்பட்டார். கொஞ்ச விசுவாசத்துடன் அவர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள தீர்மானித்தார். அந்த ஜெபமே தனக்கு இறுதியான நம்பிக்கையாக இருக்கும் என்று விசுவாசித்தார். அந்தக் கூட்டத்தில் நாங்கள் கடன்களின் மத்தியில், இழப்புகளின் மத்தியில் தத்தளித்துக்கொண்டிருந்த மக்களுக்காக ஜெபித்தோம். சகோதரர் கணேஷும் ஆண்டவரின் இரக்கத்தை விசுவாசித்து, இணைந்து கண்ணீரோடு ஜெபித்தார். ஆண்டவர் நல்ல ஊதியத்துடன் அவருக்குப் புதிய வேலை கிடைக்கச் செய்தார். மெதுவாக அவரது கடன்கள் தீர்ந்தன; அவரது வியாபாரம் சீரடைந்தது; வீட்டை சமாதானம் நிறைத்தது. இன்றைக்கு, "ஆண்டவர் என்னை குழியிலிருந்து தூக்கி, கன்மலையின்மேல் நிறுத்தினார்," என்று சாட்சி கூறியபடி சந்தோஷமாக வாழ்கிறார்கள். அன்பானவர்களே, சகோதரர் கணேஷுக்கு தேவனால் இப்படிச் செய்ய முடியுமானால், நிச்சயமாகவே உங்களுக்கும் அப்படியே செய்வார்.

இன்றும் உங்களை பயத்திலிருந்து தூக்கியெடுப்பதற்காக ஆண்டவர் தம் பலத்த கரத்தை நீட்டுகிறார். கடனில், இழப்பில், நம்பிக்கையின்மைக்குள் சிக்கியிருப்பதாக நீங்கள் நினைக்கலாம்; ஆனால், ஆண்டவர் இன்னும் உங்களுக்கானவற்றை செய்து முடிக்கவில்லை. நித்திய கன்மலையாகிய அவர் உங்களுக்காக ஸ்திரமாக நிற்கிறார். அவர் உங்கள் கைகளின் பிரயாசத்தை வாய்க்கப்பண்ணுவார்; உங்கள் வேலையை ஆசீர்வதிப்பார்; புதிய உயரங்களுக்கு உங்களை உயர்த்துவார். ஆண்டவர் ஆசீர்வதிக்கும்போது எந்த மனுஷனாலும் சபிக்க இயலாது. அவர் உயர்த்தும்போது யாராலும் உங்களைக் கீழாகப் பிடித்து வைத்துக்கொள்ள முடியாது. "என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்துவார்," என்ற வாக்குத்தத்தத்தை இன்று பற்றிக்கொள்ளுங்கள். அற்புதங்களை எதிர்பாருங்கள். ஆண்டவர் உங்கள் குடும்பத்தை, வியாபாரத்தை, பொருளாதாரத்தை ஆசீர்வதிப்பார். நீங்கள் வேலைக்காக, பதவி உயர்வுக்காக, பணியிட மாறுதலுக்காக, விசாவுக்காக ஜெபித்துக்கொண்டிருந்தீர்களானால் ஆண்டவர் ஏற்ற வாசலை திறப்பார். அவரை நம்புங்கள்; அவரது பலத்த கரம் எப்போதும் இல்லாதவண்ணம் உங்களை உயர்த்துவதை காண்பீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு கன்மலையாகவும் உறுதியான அஸ்திபாரமாகவும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். கடனிலும் பயத்திலும் நான் சிக்கித் தவிக்கும்போது என்னை தூக்கியெடுத்தருளும். நம்பிக்கையிழக்கும்போது என்னை தேற்றி, எனக்குப் புதுப்பெலனை தாரும். பயம், தோல்வி, வெட்கத்தின் குழியிலிருந்து என்னை விடுவித்தருளும். என் கையின் பிரயாசங்களை ஆசீர்வதித்து, என்னை செழிக்கப்பண்ணும். புதிய வாய்ப்புகளுக்கான, பதவி உயர்வுக்கான வாசல்களை திறந்தருளும்; பொருளாதார ஸ்திரத்தன்மையை தாரும். நான் இழந்தவற்றை திரும்ப தந்தருளும்; என் குடும்பத்துக்கும் சந்தோஷத்தை கொண்டு வாரும். என் வியாபாரம் செழிப்பதாக; என் வேலை பாதுகாக்கப்படுவதாக. உம்மை நேசிக்கிறவர்களுக்கும் நேசியாதவர்களுக்கும் வித்தியாசத்தை உண்டுபண்ண வேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.