அன்பானவர்களே, வேதம், "உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்" (உபாகமம் 4:29) என்று கூறுகிறது. ஆம், அன்பானவர்களே, கர்த்தர் நம் எல்லோரையும் விரும்புகிறார். நாம் இரண்டு எஜமான்களுக்கு வேலை செய்ய முடியாது. நாம் குளிராக இருக்கமுடியாது; ஆனால், கர்த்தருக்காய் அக்கினியைப்போல சூடாக இருக்கவேண்டும். அதற்காகவே தான் கர்த்தர், "நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன்," (வெளிப்படுத்தல் 3:16) என்று கூறுகிறார். நாம் கர்த்தரை நம் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் நேசிக்கவேண்டும். ஆகவேதான் ஆண்டவர் இயேசு, " உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக," (மத்தேயு 22:37) என்று கூறுகிறார். நாம் தம்மை அடையவும், கண்டுகொள்வதற்காகவுமே ஆண்டவர் இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். நாம் எவ்வளவு அதிகமாக தேவனுடைய வார்த்தையின் வழியாக கடந்து செல்கிறோமோ அந்த அளவு அவரைக் கண்டடைவோம்.

ஆம், அன்பானவர்களே, நாம் தம்மை கண்டுகொள்ளவேண்டுமென்று ஆண்டவர் விரும்புகிறார். நாம் அவருடைய வார்த்தையை வாசிக்கவேண்டும்; தேட வேண்டும்; அதன்படி வாழவேண்டும். ஆண்டவர் நம்மை முழுதாக எதிர்பார்க்கிறார். நான் முழு மனதோடு விசுவாசித்தால், அவரை கண்டுபிடிக்க முடியும். வேதம், "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்," (எபிரெயர் 11:6) என்று கூறுகிறது. தேவன் உண்மையாயிருக்கிறார். நாம் அவரை உண்மையாய் தேடும்போது, கண்டு பிடிக்கலாம்.

2008ம் ஆண்டில் நான் என் முழு இருதயத்தோடும் ஆண்டவரை தேடினேன். "ஆண்டவரே, என்னை இன்னும் அதிகமாய் உம் வல்லமையினால் நிரப்பும். நான் வெறுமையாய் உணர்கிறேன்," என்று மன்றாடினேன். அப்போது என் தகப்பன் சகோ.தினகரன், மரணத்துக்கேதுவாய் வியாதிப்பட்டிருந்தார். நாங்கள் விசாகப்பட்டினத்திற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தோம். ஒழுங்காக உபவாசிக்கவோ, ஜெபிக்கவோ இயலவில்லை. கவலை எங்களை நிறைத்திருந்தது. என் உள்ளத்தில் ஆழமான வெறுமையை உணர்ந்தேன். ஆகவே நான், "ஆண்டவரே, என்னை உம் வல்லமையினால் நிரப்பும்," என்று மன்றாடினேன். விசாகப்பட்டினத்தை அடைந்ததும், நான் உறங்கச் சென்றபோது, ஆண்டவர், "என் பிள்ளையே, தூங்கச் செல். நாளை காலை எழும்பி உன் கணவனோடு சேர்ந்து ஜெபி. நான் உங்கள் இருவரையும் என் ஆவியால் நிரப்பட்டும்," என்று கூறினார். நான் அந்தத் தருணத்திற்காக ஆவலோடு காத்திருந்தேன். அதிகாலையிலேயே என்னோடு ஜெபிக்கும்படி என் கணவரை கேட்டுக்கொண்டேன். நாங்கள் இருவரும் தேவனின் பரிபூரணத்தை உணர்ந்தோம்; பலவிதமான பரலோக பாஷையில் பேச தொடங்கினோம். பூமியில் பரலோகத்தை அனுபவிப்பதுபோல் இருந்தது. எங்கள் ஜெபத்தின் நடுவில் நான் இயேசுவை முகமுகமாய் தரிசித்தேன். எப்படிப்பட்ட அனுபவம் அது! அன்பால் நிறைந்த இயேசுவை கண்டேன். அவர் என் இருதயத்தை தம் அன்பினால் நிறைத்தார். நான் அவரை உண்மையாய் தேடியபோது, ஆண்டவர் என் முன்னர் தோன்றினார். இன்றும், "நீ உன் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் என்னை தேடினால் என்னை கண்டுபிடிப்பாய்," என்று கூறுகிறார்.

ஜெபம்:
பரம தகப்பனே, என் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் மனதோடும் உம்மை தேடுவதற்கு எனக்குக் கற்றுக்கொடுத்தருளும். வெதுவெதுப்பான தன்மையை அகற்றி, உம்மேல் தீவிர வாஞ்சையால் என்னை நிரப்பும். உம் வார்த்தையை நேசிக்கவும், படிக்கவும், உம் சத்தியத்தின்படி வாழவும் எனக்கு உதவும். ஆண்டவரே, வெறுமையாகவும் பெலவீனமாகவும் நான் உணரும்போது, பரிசுத்த ஆவியால் புதிதாய் என்னை நிரப்பும். உம் சமுகத்தை நான் அனுதினமும் அனுபவிக்கும்படி ஆழமான ஐக்கியத்திற்குள் என்னை நடத்திடும். இந்த உலகில் உம்மையன்றி வேறு எதன்மீதும் நான் தாகங்கொள்ளாதிருக்கும்படி காக்கவேண்டுமென்று இயேசுவின் இணையற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.