அன்பானவர்களே, இன்றைக்கான வாக்குத்தத்த வசனம், "நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன்" (யாத்திராகமம் 23:30) என்று கூறுகிறது. ஆம், கர்த்தர் உங்கள் விரோதிகளைக் குறித்து இந்த வாக்குத்தத்தத்தை கூறியுள்ளார். அவர், அவர்களை சிறிது சிறிதாக துரத்திவிடுவார். இது உடனே நடக்காமல் இருக்கலாம்; ஒரே இரவில் நடக்காமல் இருக்கலாம். ஆனால், அது சிறிது சிறிதாக நடக்கும் என்றும், அவர்கள் முழுதாய் மறைந்துபோவார்கள் என்றும் கர்த்தர் வாக்குக்கொடுக்கிறார்.

ஆண்டவர் காருண்யாவைக் குறித்தும் இதையே வாக்குப்பண்ணினார். காருண்யா தொடங்கப்பட்டபோது, சிறிய இடத்தில் சில கட்டடங்கள் இருந்தன. அங்கு காருண்யா நிலைப்படக்கூடாது என்று இருந்த மக்கள் நினைத்தனர். அதற்குமேல் நாங்கள் விரிவடைந்துவிடக்கூடாது என்று அவர்கள் விரும்பினர். ஆனால், தேவன் காருண்யா பெரிய உயரங்களை அடையவேண்டும் என்று தரிசனத்தை கொடுத்திருந்தார்; அவர்தாமே விரோதிகளை சிறிது சிறிதாக விரட்டுவதாக வாக்குக்கொடுத்தார். ஆம், ஒரே இரவில் அப்படி நடக்காவிட்டாலும், மெதுவாக, ஒருவர் பின் ஒருவராக அவர்கள் அந்த இடத்தை விட்டுச் செல்ல ஆரம்பித்தனர். காருண்யா, இடத்தை சுதந்தரித்து, கட்டடங்களைக் கட்ட ஆரம்பித்தது. இப்போது பல நூறு பிள்ளைகளுக்கு அது ஆசீர்வாதமாக இருக்கிறது. வேதம், "நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்" (ஏசாயா 54:3) என்று கூறுகிறது.

அவ்வண்ணமே, நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மட்டுமல்ல, உங்கள் உடைமைகளும் வலப்பக்கமும் இடப்பக்கமும் விரிவடையும் என்று ஆண்டவர் கூறுகிறார். பலர் என் பக்கத்து வீட்டுக்காரர் கூட எனக்கு விரோதியாயிருக்கிறார். நான் சமாதானமாகவே வாழ இயலவில்லை என்று கூறலாம். ஆனால், ஆண்டவர் தாம் உங்களை இரு பக்கமும் விரிவடையச் செய்வதாகக் கூறுகிறார். உங்கள் வாழ்விலிருந்து விரோதிகள் அனைவரையும் அவர் அகற்றுவதாகக் கூறுகிறார். உங்கள் விரோதிகள் அனைவரும் நட்பாக மாறிவிடுவார்கள். எவ்வளவு ஆச்சரியமான வாக்குத்தத்தம்!

ஜெபம்:
பரம தகப்பனே, என் விரோதிகளை சிறிது சிறிதாக விரட்டிவிடுவதாக வாக்குக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உடனடியாக நான் மாற்றத்தை பார்க்காவிட்டாலும், உம் வாக்குத்தத்தத்தை நம்புவதற்கு உதவும். பெரிய ஆசீர்வாதங்களுக்கு நான் ஆயத்தப்படும்போதே என்னை பெருகப்பண்ணும். என் வாழ்விலிருந்து எல்லா எதிர்ப்புகளையும் அகற்றும். என் விரோதிகளை நண்பர்களாக மாற்றுவீராக. நான் வலப்புறமும் இடப்புறமும் விரிவடையும்படி செய்யும். என் குடும்பத்தை சமாதானத்திலும் பாதுகாப்பிலும் நிலைப்படுத்தவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.