அன்பானவர்களே, இன்றைக்கு, "எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள்" (சங்கீதம் 144:12) என்ற வசனத்தை தியானிக்கப்போகிறோம். தேவன் சிறுபிள்ளைகளை நேசிக்கிறார். பெற்றோர் தங்கள் பிள்ளைகளை இயேசுவிடம் கொண்டுவந்தபோது, அவர் அவர்களை ஆசீர்வதித்தார். இன்று, தேவன், குறிப்பாக உங்கள் மகன்களையும் மகள்களையும் ஆசீர்வதிக்க விரும்புகிறார். "உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்" (சங்கீதம் 128:3) என்று வேதம் கூறுகிறது. நாம் நம் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட எவ்வளவாய் விரும்புகிறோமோ, அதை விட அதிகமாக நம் பிள்ளைகளை ஆசீர்வதிக்க தேவன் விரும்புகிறார். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் செழிக்கவேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். உங்களோடு உங்கள் பிள்ளைகளையும் ஆசீர்வதிக்க ஆண்டவர் பிரியப்படுகிறார்.

ஓர் அருமையான சாட்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பாணி குமாரி என்ற சகோதரியும் அவர்கள் கணவர் சிவவீர வெங்கடராமராவும் இந்தச் சாட்சியை கூறியுள்ளனர். அவர்களுக்கு ஜோதி பிரியா, சாந்தி பிரியா என்று இரண்டு மகள்கள். மூத்த மகள் படிப்பை முடித்துவிட்டு வாழ்க்கை அமைய காத்திருந்தாள். பெற்றோர் அவளுக்கு ஏற்ற வரனை தேடிக்கொண்டிருந்தனர். நெடுங்காலம் காத்திருந்தனர். காலங்கடந்துகொண்டே சென்றதால் அவர்கள் விரக்தியடைந்தார்கள். அவர்கள் மகளுடைய தோழிகள் அநேகருக்கு வாழ்க்கை அமைந்துவிட்டது. அதேபோன்று தங்கள் மகளுக்கும் அமையவேண்டும் என்று பெற்றோர் விரும்பினார்கள். அதிக ஜெபத்துடன் அவர்கள் தொடர்ந்து இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ETV2விலும் ஆராதனா தொலைக்காட்சியிலும் பார்த்துக்கொண்டிருந்தனர்.

2020ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி என் கணவர் Dr. பால் தினகரன் தேவ செய்தியை வழங்கிக் கொண்டிருந்தார். ஜெப வேளையில் அவர் தீர்க்கரிசனமாக, "பிரியா, தேவன் உனக்கு அருமையான கணவரை அளிக்கப்போகிறார். நீ அதற்காக ஜெபித்துக்கொண்டிருக்கிறாய். பயப்படாதே. நீ பல ஏமாற்றங்களை சந்தித்திருக்கிறாய். ஆனால் தேவன், உன்னை நேசிக்கக்கூடிய கணவரை நிச்சயமாக தருவார். இன்று உன்மேல் கிருபை இறங்குகிறது. நீ செய்கிற எல்லா முயற்சிகளிலும் வெற்றியை காண்பாய்," என்று கூறினார். பெற்றோருக்கு அதை நம்ப இயலவில்லை. அவர்கள், "நாம் நம் மனதில் உள்ளவற்றை Dr. பால் தினகரனிடம் பகிர்ந்துகொள்ளவில்லையே. இது எப்படி சாத்தியமாயிற்று?" என்று வியந்தனர். பிப்ரவரி 13ம் தேதி அவர்கள் மகள் பிரியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி அவளுக்குத் திருமணம் நடந்தது. தேவனுடைய கிருபையால் அவர்கள் UKவில் வாழ்கிறார்கள். அங்கு பிரியா மேற்படிப்பையும் முடித்திருக்கிறாள். குடும்பத்தில் அனைவருமே இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் வெவ்வேறு திட்டங்களில் இணைந்திருக்கிறார்கள். தேவனுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள், "இந்த ஊழியத்தால்தான் எங்கள் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்," என்று கூறி எங்களுக்கு நன்றி தெரிவித்தார்கள்.

ஆம், உங்கள் குமாரரும் குமாரத்திகளும்கூட இவ்வாறு ஆசீர்வதிக்கப்படுவார்கள். அவர்கள் அரமனையை அலங்கரிக்கும் சித்திரவேலைப்பாடுடைய தூண்களைப் போல, நீர்ப்பாய்ச்சலான விருட்சங்களைப்போலவும், உங்கள் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப் போலவும் இருப்பார்கள். ஆண்டவர்தாமே உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் என் பிள்ளைகளை நேசிப்பதாகவும் ஆசீர்வதிப்பதாகவும் வாக்குக்கொடுத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் சிறுபிள்ளைகள் மேல் கைகளை வைத்ததுபோல, உம் கரங்களை இன்று எங்கள்மேலும் வைத்தருளும். எங்கள் மகன்கள் விருட்சக்கன்றுகளைப்போல உறுதியாகவும் கனிதருகிறவர்களாகவும் வளரட்டும்; எங்கள் மகள்கள் உம் அரமனையில் உறுதியும் பிரகாசமுமான தூண்களாக விளங்கட்டும். உம்முடைய ஞானத்தையும் சந்தோஷத்தையும், உம்மை பின்பற்றும் இருதயத்தையும் தந்து அவர்களை ஆசீர்வதிப்பீராக. உம் அன்பிலும் தயவிலும் எங்கள் குடும்பம் தழைக்கட்டும். உம் கிருபையானது எங்களுக்குப் பிறகு தலைமுறை தலைமுறையாய் பாய்வதாக. எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.