அன்பானவர்களே, இன்றைய வாக்குத்தத்தம், "சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்" (மத்தேயு 5:12) என்று கூறுகிறது. நாம் ஆண்டவருக்குள் களிகூரும்போது, அவர் நமக்கென பரலோகத்தில் மிகுந்த பலனை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் என்பதை மறக்கக்கூடாது. நாம் அவருக்குள் களிகூரும்போது, அவர் தம் ஆசீர்வாதங்களை நம்மேல் வருஷிக்கப்பண்ணுவதோடு, நம்மை பரிபூரணமாக ஆசீர்வதிக்கும்படி வானத்தின் பலகணிகளையும் திறக்கிறார். நாம் பூமியில் விதைக்கும் அத்தனையும் தேவ நோக்கத்தின்படியே அறுவடையைக் கொடுக்கும். இம்மையிலும் பரலோகத்திலும் ஆண்டவர் நமக்கு மிகுந்த ஆசீர்வாதங்களை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். ஆனாலும், நாம் விசுவாசத்தோடும் கீழ்ப்படிதலோடும் அவருக்கு பதில் செய்யவேண்டும். பாடுகளின் மத்தியிலும் நாம் ஆண்டவரின் இரட்சிப்பின் வல்லமையை அனுபவித்து அவருக்குள் களிகூருகிறோம். ராஜா நமக்குள் வாசம்பண்ணுவதை நாம் ஏற்றுக்கொண்டு, பரலோகத்தில் நம் பெயர் எழுதப்பட்டிருக்கிறது என்று அறிந்து பரிசுத்தமாக வாழும்போது, அவர் நமக்கென ஆயத்தம்பண்ணியுள்ள மிகுந்த பலனை நோக்கி முன்னேறுவோம். அவர் வானத்தின் பலகணிகளைத் திறந்து, அவரது ஆசீர்வாதங்களை நம்மேல் வருஷிக்கப்பண்ணுகிறார்.

இந்த சந்தோஷத்துடன் வாழ்வதற்கு நாம் தவறினால், வானத்தின் பலகணிகள் திறந்திருந்தாலும் ஆவிக்குரியவிதத்தில் வறட்சியை உணருவோம். ஆண்டவரிடம் பயபக்தியாய் வாழ்ந்தால், எல்லா சூழ்நிலைகளிலும் இயேசுவை மகிழ்ச்சியோடு பின்தொடர்ந்தால், நமக்கு கொஞ்சம் இருந்தாலும், அதிகம் இருந்தாலும், மக்கள் நம்மை ஆசீர்வதித்தாலும், சபித்தாலும், உடனடியாக நமக்குப் பலன் கிடைத்தாலும், காத்திருக்கவேண்டியதிருந்தாலும் உறுதியாயிருப்போம். துயர நேரத்திலும், மகிழ்ச்சியான நேரத்திலும் நம்மால் இயேசுவை நம் இரட்சகர் என்றும், அவர் நமக்கு பரலோகத்தில் மிகப்பெரிய பலனை வைத்திருக்கிறார் என்றும் திடநம்பிக்கையுடன் அறிக்கையிட முடியும். நம் பெயர்கள் பரலோகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்ற நிச்சயத்துடன் களிகூர்ந்து, ஆண்டவர் நமக்கு மிகுதியாய் தருவார் என்று நம்ப இயலும். கர்த்தர், வானத்தின் பலகணிகளைத் திறந்து ஆசீர்வாதத்தை இடங்கொள்ளாமற்போகுமட்டும் வருஷிப்பார் என்று வேதம் கூறுகிறது (மல்கியா 3:10). அவரது தயவில் நாம் எப்போதும் நம்பிக்கை வைத்து அவருக்கு உண்மையாயிருப்போமாக.

அன்பானவர்களே, ஆண்டவர் இயேசு, மக்கள் நம்மை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் நம்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் நாம் பாக்கியவான்களாயிருப்போம் என்று கூறியுள்ளார் (மத்தேயு 5:11). ஆகவே, மக்கள் நம்மை பொய்யாய்க் குற்றஞ்சாட்டினாலும், ஆண்டவருக்குள் நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம் என்ற திட நம்பிக்கையுடன் இருப்போம். இந்த உலகில் எவ்விதமான மக்களை நாம் காண்கிறோம்? துர்க்குணராகிய பொல்லாதவர்களும் உள்ளனர். பவுல், அப்படிப்பட்டவர்களிடமிருந்து தாங்கள் விடுவிக்கப்படவேண்டும் என்று கூறுகிறார் (2 தெசலோனிக்கேயர் 3:2).  சிலருக்கு உத்தமமான விசுவாசம் இருக்காது; ஆனாலும், இயேசுவின் ஊழியர்களாகக் காணப்படும்படி, வெளியரங்கமாக அவர் நாமத்தை பயன்படுத்துவார்கள். யூதாஸைப்போல, எல்லாவற்றையும் பணத்துக்காகவே செய்வார்கள். அவர்கள் இயேசுவையும் அவர் ஊழியரையும் மறுதலித்து, காட்டிக் கொடுத்து, பண லாபத்துக்காக நேர்மையின்றி செயல்படுவார்கள். ஆனாலும் ஆண்டவர் தம் பிள்ளைகளுக்காக நிற்பார். அவர் நம் ராஜாவாக, அன்பும் கனமுமுள்ள தந்தையாக தம்மை நமக்கு வெளிப்படுத்துகிறார்.

அடுத்ததாக, பொறாமையால் நிறைந்தவர்களும் இருக்கிறார்கள். வேதம், "உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?" என்று கூறுகிறது (நீதிமொழிகள் 27:4). உலகத்தில் பொறாமையுள்ளவர்களும் காணப்படுகிறார்கள். இயேசுவின் மாதிரியைப் பாருங்கள். மக்களிடையே அவரது செல்வாக்கு வளர்ந்து வருவது பிரதான ஆசாரியருக்கும், சமய தலைவர்களுக்கும் உபத்திரவமாக தோன்றியது. பொறாமையால் அவர்கள் அவருக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுகளை கூறினர்; அவரை பிலாத்துவினிடத்தில் கொண்டு வந்தனர். அத்தகைய பொறாமையும் விரோதமும் உலகில் இன்றும் காணப்படுகிறது. அடுத்ததாக, இவர்கள் பிசாசினால் தூண்டப்படுகிறவர்கள். யூதாஸுக்குள் சாத்தான் புகுந்தான் என்று வேதம் கூறுகிறது (யோவான் 13:27). தீமையால் ஏவப்பட்டு மக்கள் இப்படி செயல்படுகிறார்கள். அவர்கள் கொல்லவும், மற்றவர்களுடைய நற்பெயரை அழிக்கவும், பொய்களை பரப்பவும் முயற்சிக்கிறார்கள். யூதாஸைப் பாருங்கள்! இயேசுவை காட்டிக்கொடுத்த அவன், பின்னர் தூக்கிட்டுக்கொண்டான். தீமையினால் வரும் உபத்திரவங்கள், பொல்லாப்பு, பாடுகள் அநேகரை பாதிக்கும். அடுத்ததாக, திருடர்கள். யூதாஸ், தரித்திரரைக் குறித்து அக்கறையற்றவனாக இருந்தான் என்று வேதம் கூறுகிறது (யோவான் 12:6). அதிகாரமுள்ள பொறுப்புகளில் இருக்கும் சிலர், சமுதாய சேவை தேவையற்றது; தேவையில் உள்ளோருக்கு உதவக்கூடாது என்று கூறுகிறார்கள். ஏழ்மையானவர்களுக்கு ஒன்றும் கொடுக்கக்கூடாது என்றும், ஆறுதலான வார்த்தைகள்கூட அவசியமற்றவை என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் ஏன் அப்படி நினைக்கிறார்கள்? யூதாஸைப் பாருங்கள். அவன் கள்ளனாயிருந்தபடியினால், ஏழைகளைக் குறித்து அக்கறையற்றவனாக இருந்தான். பணப்பையை வைத்துக்கொண்டு, அதில் போடப்படுகிறவைகளை திருடிக்கொண்டிருந்தான். அவன் பொறுப்பில் இருந்த பணத்தை அவன் தவறாக பயன்படுத்தினான். அப்படிப்பட்டவர்கள் இன்னும் இந்த உலகில் காணப்படுவது வருத்தமானது.

நிறைவாக, தங்களையும் பணத்தையும் நேசிக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்று வேதம் கூறுகிறது. அவர்கள், தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும் இருப்பார்கள் (2 தீமோத்தேயு 3:2). இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு என்ன? உங்கள் வாயிலாகவும் என் வாயிலாகவும் மக்கள்மேல் தம் ஆவியை ஊற்றுவதற்கு ஆண்டவர் ஆயத்தமாயிருக்கிறார். வேதம், "நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்" என்று கூறுகிறது (அப்போஸ்தலர் 2:17). மக்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளும்போது, புதிய தரிசனத்தை அடைவார்கள்; அவர்கள் வாழ்க்கை மறுரூபமாக்கப்படும். அவர்களின் பழைய வழிகள் மறைந்து அவர்கள் கிறிஸ்துவுக்குள் புதுச்சிருஷ்டிகளாவார்கள். களவு மறையும். சுயநலமாயிருக்கிறவர்கள், தங்களிடம் உள்ளவற்றால் மற்றவர்களுக்கு எப்படி ஆசீர்வாதமாக விளங்குவது என்று கற்றுக்கொள்வார்கள். தீமையினால் தூண்டப்படுகிறவர்கள், தேவ ஆவியினால் நிரப்பப்படுவார்கள். பொறாமையால் பட்சிக்கப்படுகிறவர்கள், மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், அன்புடன் அனைவரையும் வாழ்த்தவும் தொடங்குவார்கள். துன்மார்க்கர், அநியாயக்காரர், தீமையான குணமுள்ளோர் யாவரும் பரிசுத்த ஆவியால் மறுரூபமாக்கப்பட்டு, தங்கள் வாழ்வில் இயேசுவை வெளிப்படுத்தத் தொடங்குவார்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எல்லா சூழ்நிலையிலும், பாடுகள், துன்புறுத்தல்கள் நடுவிலும் களிகூர எங்களுக்கு உதவும். எங்களை உம் பரிசுத்த ஆவியால் நிரப்பி, உள்ளங்களை மறுரூபமாக்கிடும். எங்களிலிருந்து பொறாமை, சுயநலம், நேர்மையின்மை மற்றும் எல்லா அசுத்தமான விருப்பங்களையும் அகற்றிடும். பரிசுத்தமாக வாழவும், மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், உமக்கு உண்மையாயிருக்கவும் எங்களுக்கு உதவிடும். வானத்தின் பலகணிகளைத் திறந்து உம் பரிபூரண ஆசீர்வாதங்களை எங்கள்மேல் வருஷிக்கப்பண்ணும். எங்கள் வாழ்வு உம் அன்பை வெளிப்படுத்துவதோடு, உமது நாமத்திற்கு மகிமையை கொண்டு வரவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.