அன்பானவர்களே, இன்றைக்கு, "தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்" (சங்கீதம் 46:1)  என்ற அருமையான வாக்குத்தத்தத்தை தியானிப்போம். வாழ்வில் வெவ்வேறு காலகட்டங்களில் நம் அனைவருக்குமே உதவி தேவைப்படும். அடிக்கடி நாம் பதில்களுக்காய் மக்களை, மருந்துகளை, பணத்தை, நம் தகுதிகளை நோக்குகிறோம். எல்லா வாய்ப்புகளையும் முயற்சித்து சோர்வடைந்த பிறகே தேவனிடம் திரும்புகிறோம். ஆனால், வேதம், தேவனே எப்போதும் அநுகூலமான துணையாக, பதிலளிப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறபடியால் அவரையே முதலாவது தேட வேண்டும் என்று நினைவுப்படுத்துகிறது.  

வேதம், லூக்கா 8ம் அதிகாரத்தில், இரத்தப்போக்கினால் அவதிப்பட்ட பெண்ணின் வாழ்க்கையைக் கொண்டு இதை அருமையாக விளக்குகிறது. பன்னிரண்டு ஆண்டுகளாய் அவள் பெரும் பாடு பட்டாள். தன் பணம் எல்லாவற்றையும் வைத்தியர்களுக்கு செலவிட்டாள்; ஆனால், ஒரு சிகிச்சையும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. மனுஷ முயற்சிகள் தோல்வியுற்றபோது, எல்லா நம்பிக்கையும் அற்றுப்போனது. ஆனால், அவள் விட்டுவிட மறுத்தாள். இயேசு, அவ்வழியே செல்கிறார் என்பதைக் கேள்விப்பட்டபோது, அவள் கூட்டத்தை நெருக்கி, விசுவாசத்தோடு நெருங்கி, அவரது வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். உடன்தானே தேவ வல்லமை அவள் உடலில் பாய்ந்தது; அவள் பூரணமாய் சுகமானாள். அவளுக்கு அற்புதம் மருந்தினால் கிடைக்கவில்லை; இயேசு கிறிஸ்துவின் வைத்த விசுவாசத்தால் கிடைத்தது.

அன்பானவர்களே, நாம் விசுவாசத்தோடு தேவனிடம் திரும்பினால் உடனடியாக அவர் இடைப்படுவார். பெரிய இக்கட்டுகளின் நடுவிலும் தேவனே உங்களுக்கு அநுகூலமான துணையாயிருப்பார் என்ற நம்பிக்கையுண்டு. இன்று அவரை நம்புகிறீர்களா? அவரோடு உங்களுக்கு நெருங்கிய ஐக்கியம் உள்ளதா? அவருடைய சமுகம் இல்லாதிருந்தால், வாழ்க்கை தனிமையாகவும் நிச்சயமற்றதாகவும் காணப்படும். ஆனால், அவர் இருக்கும்போது நீங்கள் ஒருபோதும் தனித்து விடப்படுவதில்லை.
தேவனே நமக்கு பாதுகாப்பும், சுகமும் அளிக்கக்கூடியவர் என்ற அர்த்தத்திலேயே சங்கீதக்காரன் அவரை நம் அடைக்கலம் என்று அழைக்கிறான். அவர் வாழ்வின் புயல்கள் மத்தியில் தம் பிள்ளைகளை பாதுகாக்கிறார். நம்மை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்று ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். "நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்... நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது" (ஏசாயா 43:2) என்ற வசனத்தில் இந்தச் சத்தியம் அருமையாக கூறப்பட்டுள்ளது. உபத்திரவங்கள் வரலாம்; ஆனால் அவரது சமுகம் ஒருபோதும் உங்களை விட்டு விலகாது. சிலவேளைகளில், தேவன் உண்மையாகவே நமக்கு எவ்வளவு சமீபமாக இருக்கிறார் என்றும், அவரது உண்மையையும் கண்டுகொள்ளும்படி சிரமங்களை நம் வாழ்வில் அனுமதிக்கிறார்.

இந்த வசனமும் தேவன் நம் பெலனாயிருக்கிறார் என்று கூறுகிறது. வாழ்வின் பாரங்களால் நாம் பெலவீனமாக, விடாய்த்துப்போனதாக, சலிப்புற்றதாக உணரக்கூடிய தருணங்கள் வரும். ஆம், நம் பெலவீனத்தில் தேவனுடைய பெலன் பூரணமாக விளங்கும். அவர் நம்மை தம் பரிசுத்த ஆவியினால் பெலப்படுத்தி, எல்லா உபத்திரவங்களையும் சகித்துக்கொள்ளச் செய்து முற்றும் ஜெயம்பெற்றவர்களாக விளங்கப்பண்ணுவார். வேதம், "நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான்" (எபிரெயர் 13:6) என்று கூறுகிறது. தேவன்தாமே உங்களுக்கு சகாயராகும்போது, பயம் தன் வல்லமையை இழந்துபோகும். அவர் உங்களுக்குக் கேடகமாய், தற்காக்கிறவராய், ஜெயம் தருகிறவராய் மாறுவார்.

இன்று, வியாதி, பணக்கஷ்டம், குடும்பப் பிரச்னைகள், எதிர்காலத்தைக் குறித்த பயம் அல்லது உணர்வுரீதியான வேதனை என்று எந்த சவாலை சந்திக்க நேர்ந்தாலும் தேவ சமுகத்திற்கு ஓடுங்கள். கர்த்தரின் நாமமே பலத்த துருகமாகும். நீதிமான் அதற்குள் ஓடி சுகமாயிருப்பான். அவரை முற்றிலுமாய் நம்புங்கள்; அவரை உங்கள் அடைக்கலமாய், உங்கள் பெலனாய், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையாகக் கண்டுகொள்வீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு அடைக்கலமாகவும் பெலனாகவும் ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையாக இருப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எல்லா சவாலையும் பயமின்றி எதிர்கொள்வதற்கான தைரியத்தை எனக்குத் தந்தருளும்; உம் பரிசுத்த ஆவியின் வல்லமையால் என்னை பெலப்படுத்தியருளும். எனக்குக் கேடகமாகி, என்னையும் என் குடும்பத்தையும் எல்லா ஆபத்திலிருந்தும் பாதுகாத்தருளும். எல்லா உபத்திரவத்தின் வழியாகவும் நீரே என்னை வழிநடத்தும்; உம் சமாதானம் என் இருதயத்தை ஆளுகை செய்வதாக. அனுதினமும் நான் உம்மை கிட்டிச்சேரும்படி செய்து, உம் மாறாத அன்பை, கிருபையை, மகத்தான வல்லமையை அனுபவித்திட உதவும். என் வாழ்க்கை உம் உண்மைக்கும் நன்மைக்கும் சாட்சியாக விளங்கவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.