அன்பானவர்களே, தேவன் இன்றைக்கு, "நான் உன்னைக் குணமாக்குவேன்," என்று கூறுகிறார். அவர், "அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன்" (ஏசாயா 57:18) என்று சொல்லுகிறார். நீங்கள் என் வாழ்வில் எல்லாமே முடிந்துபோனது என்கிறீர்களா? தேவன், "நான் உன்னை குணமாக்குவேன்," என்று கூறுகிறார். ஆம், அன்பானவர்களே, தேவன் நமக்குப் பரிகாரியாக இருக்கிறார். வேதத்தில், அவர், "நானே உன் பரிகாரியாகிய கர்த்தர்" (யாத்திராகமம் 15:26) என்று கூறுகிறார். ஒருவேளை, வாழ்க்கையில் எல்லாவற்றிலும் தோற்றுப்போயிருக்கலாம்; உங்கள் உறுப்புகள் செயலிழந்து போயிருக்கலாம். இயேசு, உங்களைச் சீர்ப்படுத்துவார்; இப்போதே தம் தழும்புகளால் உங்களைக் குணமாக்குவார்.
வேதத்தில், கர்த்தர், "அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்" (எரேமியா 30:17) என்று கூறுகிறார். நான் உன் குடும்பத்தின், உன் ஆத்துமாவின் ஆரோக்கியத்தை திரும்ப தருவேன் என்று சொல்லுகிறார்.
உன் கல்வியின் ஆரோக்கியத்தை திரும்ப தந்து, உன்னை மகா உயரங்களுக்குக் கொண்டு செல்வேன். உன் காயங்கள் எல்லாவற்றையும் ஆற்றுவேன். துன்மார்க்கரால், வாழ்வின் உபத்திரவங்களால், பொல்லாத பிசாசினால், பாவத்தினால் உண்டாக்கப்பட்ட காயங்கள் எல்லாவற்றையும் இயேசு இன்றைக்குக் குணமாக்குகிறார்.
ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, நீரே என்னை குணமாக்கும் கர்த்தர் என்று விசுவாசித்து உம் முன்னே வருகிறேன். என் காயங்களை ஆற்றி, என்னை ஆரோக்கியப்படுத்துவதாக வாக்குக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, மக்களால், உபத்திரவங்களால், பாவத்தால், சத்துருவின் தாக்குதலால் ஏற்படும் எல்லா வேதனையையும் இன்றே குணமாக்குவீராக. என் உடலை, மனதை, ஆத்துமாவை, வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் குணமாக்கவேண்டும் என்று ஜெபிக்கிறேன். நான் இழந்த சமாதானத்தை திரும்ப தந்து, என் குடும்பத்தை, எதிர்காலத்தை ஆசீர்வதித்தருளும்; நான் செய்கிற எல்லாவற்றிலும் உம் தொடுதல் இருப்பதாக. உம் வார்த்தையில் நீர் வாக்குக்கொடுத்துள்ளபடி உம் சுகம் என் வாயிலாக பாய்ந்து செல்வதாக. என் வாழ்வில் எல்லாவற்றையும் சுகப்படுத்துவதற்காக ஆண்டவர் இயேசுவே உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


