அன்பானவர்களே, இன்றைக்கு தேவன், "உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்" (சங்கீதம் 84:5) என்ற வசனத்தை நாம் தியானிக்கவேண்டும் என்று விரும்புகிறார். "கர்த்தரில் பெலனை காண்கிறவர்கள் எவ்வளவு நிறைவாயிருக்கிறார்கள்" என்று ஒரு மொழிபெயர்ப்பில் எழுதப்பட்டுள்ளது. கர்த்தரிடமிருந்து நமக்கு பெலன் வரும்போது, உண்மையிலேயே ஆவியில் நாம் செழிப்பாகிறோம். நம் பெலன் மனுஷீக அதிகாரத்தை அல்லாமல் தெய்வீக கிருபையை சார்ந்திருப்பதால் சூழ்நிலையால் நாம் அசைக்கப்படமாட்டோம். பின்வரும் வசனம், "அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்" என்று கூறுகிறது. இருளான தருணங்களிலும் கர்த்தரை நம்புகிறவர்கள் ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள். அவருக்குள் நாம் எந்த அளவு பெலனை காண்கிறோமோ அந்த அளவு அதிகமாக அவர் நம்மேல் தயையை ஊற்றுவார். முன்னே வைக்கும் ஒவ்வோர் அடியும் வளர்ச்சிக்கும் பெலனுக்கும் உரியதாக விளங்கும். வேதம், "அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்" என்று கூறுகிறது.
சிறிய விதையின்மேல் சூரிய ஒளி பிரகாசிக்கும்போது, அது வெளிச்சத்துக்கு நேராக வளர ஆரம்பிக்கிறது. அவ்வண்ணமே, தேவ கிருபையால் தொடப்படும் உள்ளம், பரலோகத்தை நோக்கி எழும்புகிறது. "அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்," என்று வேதம் கூறுகிறது (யோவான் 1:16). தேவனுடைய பெலத்தில் வேரூன்றியவர்கள் ஒருபோதும் பட்டுப்போவதில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தின் ஊற்றாக விளங்குவார்கள். இயேசு, "உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்" என்று கூறியிருக்கிறார் (மத்தேயு 13:12). இதற்கு ஆண்டவரில் விசுவாசம் வைத்து பெலனை அடைகிறவர்கள் தொடர்ந்து கிருபையையும் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வார்கள் என்பது பொருள். ஆனால், தங்கள் சுயபெலனில் சார்ந்திருக்கிறவர்கள் விரைவிலேயே மங்கிப்போவார்கள். ஆகவே, அன்பான தேவ பிள்ளையே, கர்த்தர் தெய்வீக பூரணத்தில் வாழ்வதற்கான வாய்ப்பையும், நம் சொந்த பெலவீனங்களோடு போராடும் வாழ்க்கையையும் நம் தெரிவுக்காக வைத்திருக்கிறார். தேவனில் பெலன்கொள்வதையே தெரிந்துகொள்ளுங்கள். மக்களையோ, சூழ்நிலையையோ சார்ந்திருக்காதீர்கள். தேவனால் மட்டுமே உங்களை பெலப்படுத்த முடியும்.
ஆகவேதான், அப்போஸ்தலனாகிய பவுல், "கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்" (பிலிப்பியர் 3:14) என்று கூறுகிறான். தொடர்ந்து முன்னேறுங்கள். உங்கள் பிரச்னைகளை பாராமல், மேலான பரம அழைப்பை பாருங்கள். நாம் தேவனில் பெலன்கொள்ளும்போது, உபத்திரவம், வேதனை, இழப்பு இவை எதுவும் நம்மை கீழே தள்ள முடியாது. புயல் எல்லாம் நாம் அடியெடுத்து வைக்கும் கல்லாக மாறும். கண்ணீரின் ஒவ்வொரு சொட்டும் ஆசீர்வாதத்தின் விதையாக மாறும். தேவ பெலத்தை நீங்கள் சார்ந்திருக்கும்போது, மேலேறுவீர்களே தவிர கீழாக இறங்கமாட்டீர்கள். அனுதினமும் பெலத்தின்மேல் பெலனடைவீர்கள். ஆகவே, அன்பானவர்களே, உங்கள் இருதயம் திடப்படுவதாக. ஆண்டவர்தாமே உங்களுக்குப் பெலனாகவும் கேடகமாகவும் இருப்பாராக. அவர் உங்களை உயர்த்துவார்; வெற்றியால் முடிசூட்டுவார்.
ஜெபம்:
ஆண்டவரே, நீரே எனக்குப் பெலனானவர். பெலவீனமான என் இருதயத்தை இன்று உம் பலத்த வல்லமையால் நிரப்பும். என் கண்ணீரை ஆனந்தத்தின், ஆசீர்வாதத்தின் ஊற்றாக மாற்றுவீராக. என் வாழ்வின் வறண்ட பகுதியின்மேல் உம்முடைய பரிபூரண மழை பொழியட்டும். பரிசுத்த ஆவியானவரே, உம் சமுகத்தாலும் சமாதானத்தாலும் என் இருதயத்தை நிரப்பிடும். என்னுடைய உயர்வை தடுக்கிற எல்லா சங்கிலிகளையும் உடைத்திடும். என் பெலவீனத்திற்குப் பதிலாக தெய்வீக பெலனையும் திட நம்பிக்கையையும் தந்திடுவீராக. இன்றிலிருந்து தோல்வியல்லாமல் வெற்றியே என் பங்காகட்டும். பரலோகத்தை திறந்து கிருபையின்மேல் கிருபையை பொழிந்தருள்வீராக. ஆண்டவரே, என்னைப் பெலப்படுத்தும். தினந்தோறும் மேலாக ஏற உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.