அன்பானவர்களே, உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு, "கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்" (எபேசியர் 2:7) என்ற வாக்குத்தத்தத்தை தியானிப்போம். அன்பானவர்களே, தேவன் உங்களை எழுப்புவார்; தம்முடன் உன்னதங்களில் உட்காரப்பண்ணுவார். இந்த வசனத்தை நான் வாசிக்கும்போது, சாமுவேலின் இரண்டாம் புத்தகத்தில் வாசித்த ஒரு சம்பவம் எனக்கு நினைவு வந்தது. தாவீது, ராஜாவாக இருந்தபோது, யோனத்தானின் மகனான மேவிபோசேத், அவனிடம் வந்தான். வழக்கமாக, பழங்காலங்களில் ஒரு புதிய ராஜா, தேசத்தை ஆட்சிப்பண்ண வரும்போது, முந்தைய ராஜாக்களின் சந்ததியினரை அழித்துப்போடுவார்கள்; அப்போதுதான் சிங்காசனத்திற்கு ஆபத்து நேராது. ஆனால், மேவிபோசேத், தாவீதிடம் வந்தபோது, அவனை கனம்பண்ணும்படியாக பணிந்துகொண்டான். அவனை அழிப்பதற்கு யோசனை பண்ணுவதற்குப் பதிலாக, யோனத்தானிடம் தாவீதுக்கு இருந்த விசுவாசத்தினால், அவன் இரக்கம் காண்பித்தான். அவன், "உன் தாத்தாவாகிய சவுலுக்குச் சொந்தமாயிருந்த நிலங்கள் எல்லாவற்றையும் உனக்குத் திரும்ப கிடைக்கும்படி செய்வேன். நீ எப்போதும் என்னோடு பந்தியிருப்பாய்," என்றான்.

மேவிபோசேத், "ஐயோ, நான் எப்படி புதிய ராஜாவை பார்ப்பேன்? என் உயிருக்கு ஆபத்து வந்துவிடக்கூடாதே. அவன் எனக்கு என்ன செய்வான்?" என்று பயந்திருப்பான். ஆனால், தாவீது, அவனுக்கு இரக்கம் காண்பித்ததோடு, அவன் தந்தையிடம் கொண்ட சிநேகிதத்தாலும் விசுவாசத்தாலும், அவன் தாத்தாவுக்குச் சொந்தமானவை அனைத்தும் அவனுக்குத் திரும்பக் கிடைக்கும்படி செய்தான். ஆம், அன்பானவர்களே, அவ்வாறே தேவன் உங்களிடம் இரக்கமாயிருக்கிறார். இன்று நீங்கள், "நான் அநேக தவறுகளைச் செய்திருக்கிறேன். முழுவதும் பாவமாயிருக்கிறது. நான் எப்படி தேவனிடம் செல்ல முடியும்?" என்று கேட்கலாம். எனக்கு என்ன நேருமோ என்று பயந்திருக்கலாம். ஆனால், தேவன், தம் இரத்தத்தினால் உங்களுக்கான கிரயத்தைச் செலுத்தி உங்களை வாங்கியிருப்பதால், உங்கள்மேல் இரக்கமாயிருப்பார். தம்முடைய கருணையினிமித்தம் அவர், பாவ வாழ்க்கையிலிருந்து உங்களை உயர்த்துவார்.

நீங்கள் மனந்திரும்பி உங்கள் பாவங்களை ஆண்டவரிடம் அறிக்கையிட்டால், அவர் உங்கள்மேல் இரக்கமாயிருப்பார். அவர் உங்களிடம் கருணை காட்டுவார். உங்கள் பழைய வாழ்க்கையிலிருந்து அவர் உங்களை உயர்த்துவார்; உன்னதங்களில் தம்முடன் அமரப்பண்ணுவார். இன்றைக்கு நீங்கள், என் பாவத்தினால்தான் இன்று ஒன்றுமில்லாத நிலையில் இருக்கிறேன்; எல்லோரும் என்னை விரட்டுகிறார்கள். நான் திரும்ப தகப்பனிடம் சென்றால், அவர் என்னை சேர்த்துக்கொள்வாரா? இன்று தகப்பனாகிய தேவன் உங்களுக்கு இரக்கம் காண்பிப்பார்; உங்கள்மேல் கருணையாயிருப்பார்; குழியிலிருந்து உங்களைத் தூக்கியெடுத்து, தம்முடன் அமரப்பண்ணுவார். எப்போதும் அவர் பந்தியில் உங்களுக்கு ஓர் இடம் உண்டு. ஆகவே, அன்பானவர்களே, சந்தோஷமாயிருங்கள். புதிய ஆரம்பம் உங்களுக்குக் காத்திருக்கிறது. இப்போது அதைப் பெற்றுக்கொள்வோமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நான் உடைந்துபோன நேரத்தில் என்னை உம் கிருபை தொட்டதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். தகுதியில்லை என்று நான் எண்ணும்போதும், பயப்படும்போதும், நீர் என்னை அருகில் அழைத்துள்ளதை நினைவுப்படுத்தும். பழைய வாழ்க்கையிலிருந்து என்னை தூக்கியெடுத்து, எல்லா பாவமும் நீங்கும்படி சுத்திகரியும். மனந்திரும்பவும் உம்முடைய வழிகளில் நடக்கவும் எனக்குக் கிருபை தந்தருளும். இழந்துபோன எல்லாவற்றையும் திரும்ப தந்து, என்னை புதிதாக்குவீராக. என் வாழ்க்கை உம் கருணையையும் அன்பையும் காட்டட்டும். எப்போதும் நான் உம் சமுகத்தில் அமர்ந்திருக்கும்படி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.