"என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்" (சங்கீதம் 142:3) என்று வேதம் கூறுவதே இன்றைய வாக்குத்தத்தமாகும். பல வேளைகளில் நம் ஆவி தியங்குகிறது; ஆனால், தேவன், நம்மை பெலப்படுத்தி, திரும்பவும் ஊழியத்தைச் செய்யப்பண்ணும்படி நம் பாதையை பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆண்டவர் இயேசு, சிலுவைக்குச் செல்கிற வேளையில் கெத்செமனேயில் ஜெபித்துக்கொண்டிருந்தார். பயத்திலும் கலக்கத்திலும் அவரது ஆத்துமா மூழ்கியிருந்தது. மனுக்குலத்தின் இரட்சிப்புக்காக சிலுவையில் பாடுபட வேண்டியதை எண்ணி அவர் வேதனையுற்றார். அவரது ஆவியை பயம் பிடித்திருந்தது. மிகவும் வியாகுலமாகவும், அதிக பெலவீனமாகவும் அவர் உணர்ந்ததால் வியர்வை இரத்தமாக வெளிவந்தது. அவர், "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; தயவாய் இந்த மரணத்தின் பாத்திரத்தை என்னை விட்டு எடுத்துப்போடும்," என்று ஜெபம்பண்ணினார். சாத்தான், "அவர் ஒருபோதும் சிலுவைக்குச் செல்லமாட்டார். மிகவும் பயந்துவிட்டார்," என்று மகிழ்ச்சியுடன் ஆடிக்கொண்டிருந்தான். மறைந்த என் தந்தை தினகரன் ஒரு தரிசனத்தைக் கண்டார்.
அப்போது, எல்லா உபத்திரவங்களிலும் நம்மை தேற்றுகிற பரிசுத்த ஆவியானவர் வந்தார். நம் பலவீனங்களில் நமக்கு உதவி செய்கிற அவர், ஆண்டவர் இயேசுவின்மேல் இறங்கினார் (ரோமர் 8:26). அவர், இயேசுவுக்கு எதிர்காலத்தைக் காண்பித்து, "ஆண்டவராகிய இயேசுவே, நீர் திடநம்பிக்கையோடு தேவ சித்தத்தை, கல்வாரி சிலுவையை ஏற்றுக்கொள்வீரானால், பிதா உமக்கு மகத்தான நாமத்தை, எல்லா நாமங்களுக்கும் மேலான நாமத்தை அளிப்பார். நீரே ஜீவன். நீரே உயிர்த்தெழுதல். நீர் எழுந்திருப்பீர்," என்று அவருக்குள் கூறினார். பரிசுத்த ஆவியானவர் அவருக்கு வழியைக் காட்டியதுடன், அவரை தேற்றவும் செய்தார். ஆண்டவர் இயேசு தியங்கிய, பலவீனப்பட்ட அந்தத் தருணத்தில் பலப்படுத்தப்பட்டார். பிறகு அவர், "பிதாவே, என் சித்தமல்ல. உம் சித்தமே நிறைவேறட்டும்," என்றார். எழுந்திருந்து, காட்டிக் கொடுக்கிறவனை, அவருக்கு விரோதமாக பொய்க்குற்றச்சாட்டுகளை வைத்த பிரதான ஆசாரியர்களை, மரணத்திற்கு ஒப்புக்கொடுத்த பிலாத்துவை எதிர்கொண்டார். அவர் பயப்படவில்லை. சிலுவையைச் சுமந்துசென்றார். ரோம சேவகர்களின் சவுக்கடிகளை, ஆணிகள் கடாவிய வேதனையை சகித்தார்.
இறுதியாக, "தேவனாகிய கர்த்தாவே, உம் கைகளில் என் ஆவியை ஒப்படைக்கிறேன். என் ஜனங்களுக்காக என் இரத்தத்தை சிந்தியிருக்கிறேன். அதை யார் பெற்றுக்கொண்டு, என் தியாகத்தை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்கள் என் இரத்தத்தால் கழுவப்பட்டு, பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவார்கள்," என்று கூறினார். அவர், "முடிந்தது," என்று கூறினார். மூன்றாம் நாளில் எழுந்திருந்தார். அவர் ஜீவனோடிருக்கிறார்! ஆண்டவரே, என் ஆவி எனக்குள் தியங்கும்போது, நீரே என் பாதையை அறிந்திருக்கிறீர். "சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்" என்று வேதம் கூறுகிறது (ஏசாயா 40:29-31). இன்றும் உங்களை தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, "உம் சித்தமே ஆகட்டும்," என்று கூறுங்கள். எல்லா ஒடுக்குதலையும், உபத்திரவத்தையும், சோதனையையும் எதிர்கொள்வதற்கு பரிசுத்த ஆவியானவர் உங்களைப் பலப்படுத்துவார். நீங்கள் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருப்பீர்கள். தேவன் உங்களை உயரே பறக்கும்படி செய்து, கோடிக்கணக்கானோருக்கு இரட்சிப்பை அளிப்பார். இயேசுவின் நாமத்தில் அந்த கிருபை இப்போதே உங்கள்மேல் வருவதாக.
ஜெபம்:
பரம தகப்பனே, உம் வாக்குத்தத்தத்தின் வாயிலாக என்னை உற்சாகப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என் ஆவி சோர்ந்துபோகும்போது, என் வழியை கண்ணோக்குவீராக. நான் பயப்படும் தருணங்களிலும் பெலவீனப்படும் தருணங்களிலும் என்னை பெலப்படுத்தும். உம் சித்தத்திற்கு என்னை முற்றிலும் அர்ப்பணிக்க உதவும். உம் பரிசுத்த ஆவியானவர் என்னை தேற்றி, பெலப்படுத்துவாராக. சூழ்நிலைகளுக்கு மேலாக கழுகைப்போல எழும்பும்படி எனக்கு புதுப்பெலனை தாரும். எல்லா உபத்திரவங்களையும் தைரியத்தோடும் விசுவாசத்தோடும் எதிர்கொள்ள எனக்கு உதவும். என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேறட்டும் என்று இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


