அன்பானவர்களே, கிறிஸ்துமஸுக்கு அடுத்த நாள் இன்று. இந்த ஆண்டு எப்படி கிறிஸ்துமஸை கொண்டாடினீர்கள்? கேக் சாப்பிட்டீர்களா? வெகுமதிகளைப் பெற்றீர்களா? ஆம், கேக்குகள், வெகுமதிகளை தாண்டி, ஆண்டவர், "தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது," (கொலோசெயர் 3:15) என்ற சிறப்பான வாக்குத்தத்தத்தைக் கொடுக்கிறார். ஆண்டவர் அனைவரையும் தம் சமாதானத்தினால் நிரப்புவார். இந்த உலகில் நம்மைச் சுற்றி பல காரியங்கள் நடந்துகொண்டிருக்கிறபடியால் இந்த சமாதானம் மிகவும் முக்கியம். ஒவ்வொரு முறை நாம் போனில் சமூக ஊடகங்களைத் திறக்கும்போது, செய்திகளைப் பார்க்கும்போது, மக்கள் தாக்கப்பட்டனர்; தற்கொலை செய்துகொண்டனர் என்பவற்றை அறிகிறோம். இவை அதிகமாய் நம்மை கலங்கப்பண்ணுகின்றன. ஆனால், இன்று ஆண்டவர் தம் சமாதானத்தினால் உங்களை நிரப்பப்போவதாகக் கூறுகிறார்.
ஆம், இவை எல்லாம் கவலைக்குரியவை. ஆனால் கிறிஸ்துவின் சமாதானத்தால் நாம் நிரப்பப்படும்போது, ஆண்டவர் நம்மையும் நம் குடும்பங்களையும் பாதுகாப்பார். கிறிஸ்துமஸ் கேக் எப்படி செய்யப்படுகிறது என்பதைக் குறித்து ஒரு கதை உண்டு. இப்போதும் அப்படியே செய்துவருகிறார்கள். உலகின் பிற பகுதிகளில் நன்றி ஏறெடுப்பு சாப்பாடு கொண்டாடப்படுவதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மற்ற நேரங்களில் குடும்பங்கள் சண்டையிட்டுக்கொண்டாலும், நன்றி ஏறெடுப்பு தினத்தன்று அனைவரும் ஒன்றாய் கூடி வருவார்கள்; ஒன்றாய் சாப்பிடுவார்கள்; குடும்பமாய் நேரத்தைச் செலவிடுவார்கள். ஆனால், மறுநாளிலே அவர்கள் மீண்டும் சண்டையிடுவார்கள். தங்கள் உடன் பிறந்தவர்களுடனும் பேச மாட்டார்கள். நீங்கள் கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டின்போது மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதும் கிறிஸ்துவின் சமாதானத்தினால் நிறைந்து ஒன்றாயிருக்கும்படி ஆண்டவர் தம் சமாதானத்தினால் உங்களை நிரப்பப்போவதாக கூறுகிறார்.
சிலவேளைகளில் இவற்றை செய்திகளில் பார்க்கும்போது, மிகவும் கவலைப்படுவேன். அது எப்போதும் என் மனதின் பின்னணியில் கிரியை செய்துகொண்டே இருக்கும். வெளியில் செல்லும்போது, கேட்டி பாதுகாப்பாக இருப்பாளா? யாராவது ஜேடனை தூக்கிக்கொண்டு சென்றுவிடுவார்களோ? தூரத்தில் வசிக்கும் என் பெற்றோர் பாதுகாப்பாக இருப்பார்களா? நாம் பயப்படுவதும், கலங்குவதும் இயற்கை. ஆனால், நான் உட்கார்ந்து, "ஆண்டவரே, நான் மிகவும் கலங்கியிருக்கிறேன். உம் சமாதானத்தால் என்னை நிரப்பும்," என்று கூறுவேன். இதைச் செய்யும்போது, அவர் யாவற்றையும் பொறுப்பெடுத்துக் கொள்வார். நாம் எல்லா பாரங்களையும் அவர் மீது வைத்துவிடும்போது, அவர் நம் வாழ்வில் எல்லாவற்றையும் செய்து முடிப்பார். ஆகவே, இன்று நம் பாரங்கள் எல்லாவற்றையும் இயேசுவின்மேல் வைப்போம். அவர் தம் சமாதானத்தால் நம்மை நிரப்புவார்.
ஜெபம்:
ஆண்டவர் இயேசுவே, என் கவலைகள், பயங்கள் எல்லாவற்றுடனும் உம்மிடம் இன்று வருகிறேன். என்னைச் சுற்றியிருக்கும் பல காரியங்கள் கலங்கப் பண்ணுகின்றன; இளைப்பாறுதல் இல்லாமல் செய்கின்றன. ஆண்டவரே, உம் சமாதானம் என் இருதயத்தில் ஆளுகை செய்யும் என்று வாக்குப்பண்ணியிருக்கிறீர். ஆண்டவரே, எல்லாப் புத்திக்கும் மேலான உம் பரிபூரண சமாதானத்தினால் என்னை நிரப்புவீராக. தயவாய் என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளும். என் மனம் உபத்திரவப்படும்போது, உம் அன்பின் சமுகத்தினால் என்னை அமைதிப்படுத்துவீராக. என்னுடைய எல்லா பாரத்தையும் பயங்களையும் உம் பாதத்தில் வைக்கிறேன். எனக்கான யாவற்றையும் பொறுப்பெடுத்துக்கொள்ளும். இன்று உம் சமாதானத்தில் இளைப்பாறுகிறேன், ஆமென்.
உலகம் தரக்கூடாத சமாதானம்


தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now

