அன்பானவர்களே, இன்றும் ஆண்டவருக்குள் நமக்கு பெரிய நம்பிக்கை உண்டு. "அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்" (சங்கீதம் 91:4) என்ற வாக்குப்படி அவர்தாமே நம்மை பெலப்படுத்தவும், வழிநடத்தவும் வந்தார். பறவையின் பெரிய சிறகுகளின் கீழ் குஞ்சுகள், வெம்மையை, தேறுதலை, அடைக்கலத்தைக் காணும். இப்படித்தான் தாய்ப் பறவை தன் குஞ்சுகளைப் பாதுகாக்கிறது. பெரிய ஆபத்து வந்தாலும் தன் உயிரைக் கொடுத்தாவது அவற்றை பாதுகாக்க தாய் மனதாயிருக்கும். அவ்வண்ணமே, கர்த்தர் நம்மை தம் சிறகுகளால் மூடுகிறார்; அவரது உண்மை நமக்குக் கேடகமாகிறது. ஆம், அவர் உண்மையுள்ளவர் என்று நாம் அறிந்திருக்கிறோம்; அவரது உண்மை நம் இருதயங்களைப் பாதுகாக்கும் கேடகமாயிருக்கிறது.

இந்தச் சத்தியத்தை ஒரு மாமாவும் அத்தையும் எனக்கு எப்போது நினைவுப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். தங்கள் உடலில் பயங்கரமான வியாதியும், குடும்பத்தில் தீவிர பிரச்னைகளும், வாழ்க்கையில் பல்வேறு உபத்திரவங்களும் இருந்தாலும், அவர்கள் எப்போதும், "கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! அவரது கிருபை என்றுமுள்ளது," என்று கூறிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் எப்போதும், "சாம், எப்போதும் நீயும் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். உம் கிருபை என்றுமுள்ளது, என்று சொல்லிக்கொண்டிரு," என்று ஊக்கப்படுத்துவார்கள். அவர்கள் ஒருபோதும் உபத்திரவங்கள் தங்களிடமிருந்து துதியை எடுத்துப்போடுவதற்கு இடங்கொடுக்கவில்லை. சிலவேளைகளில், அவர்களுக்கு இருக்கும் சிரமங்கள் குறித்துப் பேசும்போது, "மனம் உடைந்துபோனது" என்று கூறுவார்கள். ஆனாலும் உடனடியாக, "கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆண்டவரே, உம் கிருபை என்றுமுள்ளதால் நான் இப்போதும் உம்மை துதிப்பேன்," என்று கூறுவார்கள்.

அன்பானவர்களே, நாமும் அப்படியே கூறவேண்டும். தேவனின் அன்பு எப்போதும் உள்ளது என்பதையும், நம் பட்சத்தில் அவர் எப்போதும் உண்மையுள்ளவராயிருக்கிறார் என்பதையும் மறந்துபோகக்கூடாது. நம்மை ஆசீர்வதிக்கவும், வேண்டிய எல்லாவற்றையும் இரக்கத்துடன் அருளிச்செய்யவும் அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். அவரது கிருபை என்றுமுள்ளது. ஆகவேதான் இஸ்ரவேல் சேனை, பெரிய யுத்தங்கள் மற்றும் போர்களின் நடுவிலும் கர்த்தரை புகழ்ந்தார்கள். கர்த்தரை துதிப்பது நமக்குக் கேடகமாகும். அது நம் இருதயங்களை பாதுகாத்து, நமக்குள் இயேசுவை வைக்கும்; அவர் மூலமாக பெரிய வெற்றியை அடைய நமக்கு உதவி செய்யும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீர் நல்லவராயிருப்பதாலும், உம் இரக்கங்களுக்கு முடிவில்லை என்பதாலும் உம்மை துதிக்கிறோம். வியாதி, குடும்ப பிரச்னைகள், எதிர்ப்பு, இக்கட்டான சூழ்நிலையின் நடுவிலும் உம் உண்மையை நம்புவதற்கு எங்களுக்கு உதவும். உம் பலத்த செட்டைகளின் கீழ் எங்களை மூடி, எங்கள் இருதயங்களைப் பாதுகாத்தருளும். உம்மை நோக்கிக் கூப்பிடும் ஒவ்வொருவரையும் உம் இரக்கம், சூழ்ந்துகொள்வதாக. அவர்கள் சூழ்நிலைகளுக்குள் உம் பலத்த வல்லமையை அனுப்புவீராக. மூடப்பட்ட வாசல்கள் திறப்பதாக; எல்லா விரோதமும் விழுந்துபோவதாக; வேண்டியவை அனைத்தும் வருவதாக. அவர்கள் வாழ்வை அற்புதமான சாட்சிகளாலும் பெரிய வெற்றிகளாலும் நிரப்புவீராக. ஆண்டவரே, உம் உண்மை பெரிது. உம் ஆசீர்வாதங்களை இயேசுவின் நாமத்தில் பெற்றுக்கொள்கிறோம், ஆமென்.