அன்பானவர்களே, இன்றைக்கு, "ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன்" (2 நாளாகமம் 1:12) என்ற வசனத்தைத் தியானிப்போம். தேவன் சாலொமோனுக்குத் தோன்றியபோது, அவனிடம், "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். ஐசுவரியம், அதிகாரம், நீண்ட ஆயுள் இவற்றிற்குப் பதிலாக, சாலொமோன், உம் ஜனங்களை வழிநடத்துவதற்கான ஞானத்தைத் தாரும் என்று கேட்டான். தனிப்பட்ட ஆதாயத்தைத் தேடாமல் தேவ ஞானத்தை சாலொமோன் தேடியதால் தேவன் அவனுக்கு ஞானத்தைக் கொடுத்ததுமல்லாமல், ஆஸ்தி, ஐசுவரியம், கனம் எல்லாவற்றையும் அருளிச்செய்து அவனுக்கு முன்னும் பின்னும் எந்த ராஜாவுமில்லாத அளவு அவனை பெரியவனாக்கினார். சாலொமோனின் தன்னலமற்ற வேண்டுதல் தேவனுக்கு மிகவும் பிரியமாயிருந்தது. அவர், "ஞானத்தையும் விவேகத்தையும் உனக்குத் தந்தேன். உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன்," என்று கூறினார்.
நாம் சேவிக்கும் தேவன் எவ்வளவு ஆச்சரியமானவர்! சாலொமோன், தனிப்பட்ட ஆதாயத்தை விட, தேவ ஞானத்தைத் தேடியமையால் அவர் மற்ற எல்லா ஆசீர்வாதங்களையும் கூடுதலாகக் கொடுத்தார். இது, "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்," என்ற இயேசுவின் வார்த்தைகளை நினைவுப்படுத்துகிறது. நம் தேவன், உதார குணமுள்ள தகப்பனாயிருக்கிறார். நாம் கேட்கிறவற்றை அருளுவதை அவர் ஒருபோதும் நிறுத்துவதில்லை. நாம் நினைக்கிறவற்றைக் காட்டிலும் அதிகமான ஆசீர்வாதங்களை அவர் கூடுதலாகக் கொடுக்கிறார். வேதம், "கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார்," என்று கூறுகிறது. தம் பிள்ளைகளின் வாழ்வில் வேதனையைக் கூட்டாமல் தேவன் அவர்களை ஆசீர்வதிக்கிறார். மற்ற யாவற்றைக் காட்டிலும் தேவ ஞானத்தை மதித்ததால் சாலொமோன் சரித்திரத்திலே சிறந்த ராஜாக்களுள் ஒருவனானான். வேதம், "சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள்," (1 இராஜாக்கள் 10:24) என்று கூறுகிறது. அவனது ஞானம், எல்லா தேசங்களிலிருந்தும் ராஜாக்களை, தலைவர்களை, மக்களைக் கவர்ந்தது.
அன்பானவர்களே, நம் தேவன் நாம் கேட்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மேலாக அளவில்லாமல் செய்ய வல்லவர். நம் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து, முதலாவது தேவனுடைய ஞானத்தைத் தேடுவோமானால், நம் வாழ்வின் மற்ற தேவைகளை அவர் கவனித்துக்கொள்வார். மெய்யான ஞானம் இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிறது. வேதம், அவருக்கும் ஞானம், அறிவு ஆகிய பொக்கிஷங்கள் எல்லாம் அடங்கியிருக்கிறது என்று கூறுகிறது. இயேசுவை நம் உள்ளத்துக்குள் ஏற்றுக்கொள்ளும்போது, நாம் தெய்வீக ஞானம், வழிகாட்டுதல், ஆவிக்குரிய ஆசீர்வாதம் அனைத்தையும் பெற்றுக்கொள்கிறோம். கிறிஸ்துவுடனே கூட, தேவன் நம் வாழ்க்கைக்கும், நித்தியத்துக்கும் தேவையான எல்லாவற்றையும் கிருபையாக அருளிச்செய்கிறார். இன்று கர்த்தர் உங்களைச் செழிக்கப்பண்ண விரும்புகிறார். உங்கள் உள்ளத்தை தம் ஞானத்தினால் நிறைத்து, வாழ்வில் நிலைபெறச் செய்யவும் விரும்புகிறார். நீங்கள் தலைமையேற்று நடத்தும் பொறுப்பில் இருந்தால், தெய்வீக ஞானத்தை அவரிடம் கேளுங்கள். நீங்கள் முடிவுகளை எடுக்கும்போது அவர் உங்களை வழிநடத்துவார்; உங்கள் வேலையை ஆசீர்வதிப்பார்; உங்கள் வாழ்க்கையை தம் உண்மைக்கு சாட்சியாக மாற்றுவார்.
ஜெபம்:
அருமையான தகப்பனே, உதாரகுணமுள்ள, அன்பான தேவனாக நீர் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். சாலொமோனை ஆசீர்வதித்துபோல, உம் பரம ஞானத்தினால் என்னை நிரப்பிடும். எல்லாவற்றுக்கும் மேலாக உம் ராஜ்யத்தையே தேடுவதற்கு எனக்கு உதவும். உம் ஞானத்துடன், தயவையும், கனத்தையும், செழிப்பையும் என்மேல் ஊற்றிடும். எல்லா குறைவையும் அகற்றும்; நீர் எனக்காக ஆயத்தப்படுத்தியிருக்கும் மறைவான பொக்கிஷங்களை திறந்திடும். எல்லா முடிவுகளையும் எடுப்பதற்கான ஞானத்தையும் புத்தியையும் எனக்கு அருளிச்செய்திடும். என் எல்லைகளை விரிவாக்கிடும். என்னுடைய எல்லா பிரயாசங்களையும் ஆசீர்வதியும்; உம் உடன்படிக்கையின் ஆசீர்வாதங்கள் என்மேல் தங்குவதாக. நான் ஆவிக்குரியவிதத்திலும், உலகப்பிரகாரமாகவும் செழித்து உம் நாமத்திற்கு மகிமையை கொண்டு வரவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


