அன்பானவர்களே, இன்று என் மகன் ஜேடனுடன் இருக்கிறேன். ஒருபோதும் நீங்கள் தனியே இல்லை என்று உங்களை உற்சாகப்படுத்துவதற்கு விரும்புகிறேன். நீங்கள் தனிமையை உணர்ந்தாலும் ஆண்டவர் எப்போதும் உங்கள் பக்கம் இருக்கிறார் என்பதை மறந்துபோகாதிருங்கள். ஒரு குழந்தை தன் தாயின்மேல் கொண்டிருக்கும் அன்பை அநேகர் கண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஆம், ஒரு பக்கம், தாயானவள் குழந்தையை அதிகமாய் நேசிக்கிறாள்; ஆனால், மறுபக்கம் குழந்தையும் தன் தாயிடம் அதிக பற்றுதல் கொண்டிருக்கிறது.

ஜேடன், இப்போது நன்கு தவழ ஆரம்பித்துவிட்டான். நான் அவனை ஒரு அறைக்குள் விட்டு விட்டுச் சென்றாலும், குளிப்பதற்கு சென்றாலும் தரையில் அவன் கையால் தட்டும் சத்தத்தையும் அவன் என்னை நோக்கி தவழும் சத்தத்தையும் கேட்க முடியும். ஆம், ஆண்டவர் நம்மோடு நெருங்கி இருப்பதற்கு வாஞ்சிக்கிறார். இன்றைக்கு நீங்கள் தனிமையாய் உணரலாம்; ஆனால், அன்பானவர்களே, ஆண்டவர் உங்களுக்குச் சமீபமாய் இருக்கிறார்.

சிலவேளைகளில் அநேகர், நம் குடும்பத்தினர், நம் நட்புவட்டத்தில் இருப்பவர்கள் நம்மை சூழ்ந்திருக்கலாம். இருந்தபோதும், நாம் தனிமையாய் உணர்வோம். வேதம், "உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்" (யாத்திராகமம் 6:7) என்று கூறுகிறது. ஆம், கர்த்தரே உங்கள் தேவனாயிருக்கிறார். இன்றைக்கு உங்களுடன் யாரும் இல்லாவிட்டாலும்கூட கர்த்தர் இருக்கிறார்.

ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, நான் ஒருபோதும் தனியே இல்லை என்பதை எனக்கு நினைவுப்படுத்தியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் இருதயம் தனிமையாய் உணர்ந்தாலும், நீர் எப்போதும் என்னோடு இருக்கிறீர் என்பதை மறவாதிருக்க எனக்கு உதவும். ஆண்டவரே, என்னை உம்மிடம் கிட்டிச்சேர்த்திடும்.  ஒரு பிள்ளை தாயுடன் நெருங்கியிருப்பதுபோல் நான் உம்மில் பற்றுதலாயிருப்பேனாக. தயவாய் உம் சமுகத்தின் ஆறுதலால் என் இருதயத்தை நிரப்புவீராக. வெறுமையின் உணர்வு எல்லாவற்றையும் அகற்றி உம் சமாதானத்தால் நிரப்புவீராக. எல்லா தருணத்திலும் நீர் என்னோடு உலாவுகிறீர் என்பதை நம்புவதற்கு எனக்கு உதவும். என்னை உமக்குச் சொந்தமானவள்(ன்) என்று அழைத்து என் தேவனாயிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் அன்பு இன்றும் என்றும் என்னை சூழ்ந்திருப்பதாக என்று இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.