அன்பானவர்களே, இன்று ஆண்டவரின் விசேஷித்த வாக்குத்தத்தம், "வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்" (யாத்திராகமம் 23:20) என்று கூறுகிறது. எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம்! நீங்கள் புதிய பயணத்தை, புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கலாம் அல்லது ஓர் அற்புதத்திற்காகக் காத்திருக்கலாம். எல்லா சூழ்நிலைகளிலும், தேவன் உங்களை பாதுகாக்கவும், வழியுண்டாக்கவும், தாம் ஆயத்தம்பண்ணியுள்ள இடத்துக்குக் கொண்டு சேர்ப்பதற்கும் உங்களுக்கு முன்பாக தம் தூதனை அனுப்புகிறார். சரியான இடத்தை அடைவதற்கு, உங்களுக்கு உரைத்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதற்கு, அற்புதத்தை செய்து முடிப்பதற்கு அவர் உங்களுக்கு உதவுவார்.

மரியாள், யோசேப்பு ஆகியோரின் வாழ்வில் இதை நாம் நேர்த்தியாகக் காண்கிறோம். தூதன் ஒருவன் மரியாளுக்குத் தோன்றி, அவள் கருவுற்று, தேவ குமாரனை பெற்றெடுப்பாள் என்று உரைத்தான். கர்த்தர் அவர்களுடனே பேசி, ஒவ்வோர் அடியிலும் அவர்களை வழிநடத்தினார். பெத்லகேமிலுள்ள முன்னணைக்கு அவர்களுக்கு வழிகாட்டினார். எல்லா இடங்களும் இருக்க, தேவன் அவர்களை அங்கே வழிநடத்தினார். அற்புதவிதமாக குழந்தை பிறந்தது. புதிதாக பிறந்த ராஜாவுக்கு ஐசுவரியமான வெகுமதிகளை படைத்து கனப்படுத்தும்படி, கர்த்தர், சாஸ்திரிகளை மரியாளிடமும் யோசேப்பிடமும் வழிநடத்தினார். அவர்கள் குழந்தையை பணிந்துகொண்ட பிறகு ராஜாவாகிய ஏரோதுவுக்கு தப்பும்படி ஆச்சரியவிதமாக, ஆண்டவர் அவர்களை சொப்பனத்தின் வாயிலாக வேறு பாதைக்கு வழிநடத்தினார். மட்டுமல்ல, தூதன் மரியாளுக்கும் யோசேப்புக்கும் மறுபடியும் தோன்றி, ராஜாவாகிய ஏரோது குழந்தையை அழிக்கத் தேடுகிறபடியால் பெத்லகேமை விட்டு எகிப்துக்குப் போகும்படி கூறினான். எவ்வளவு நேர்த்தியாய் கர்த்தர் அவர்களைப் பாதுகாத்து, தப்பும்படியான ஒரு வழியையும் உண்டாக்கினார்! ஒவ்வோர் இடத்தின் வழியாகவும், சூழ்நிலை வழியாகவும் அவர்களை நடத்துவதற்கு அவர் உண்மையுள்ளவராயிருந்தார்.

அன்பானவர்களே, அதே தெய்வீக வழிநடத்துதல் உங்களுக்கும் கிடைக்கிறது. நீங்கள் தேவனுடைய கரங்களில் இருக்கிறீர்கள். உங்கள் கண்கள் இயேசுவை நோக்கிக் கொண்டிருக்கும்போது, உங்கள் ஜீவன் பாதுகாக்கப்படும். அவர் வழியிலே உங்களை பாதுகாப்பார்; உங்களுக்கு பாதை காட்டுவார்; தாம் ஆயத்தம்பண்ணியுள்ள இடத்துக்கு உங்களைப் பத்திரமாய்க் கொண்டு சேர்ப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, வாழ்வின் எல்லா காலகட்டத்திலும் நீரே என்னோடு இருந்து வழிகாட்டுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நாம் உம் வாக்குத்தத்தங்களுக்கும் அற்புதங்களுக்கும் காத்திருக்கும்போது என்னை காக்கும்படிக்கும், நீர் ஆயத்தம்பண்ணியிருக்கிற இடத்துக்கு என்னைக் கொண்டு சேர்க்கும்படிக்கும் உம் தூதனை அனுப்புவீராக. உம் வழிகாட்டுதலின்படி நடக்கவும் உம்மை முழுவதுமாக நம்புவதற்கும் எனக்கு உதவும். எனக்கு ஞானமும் வழிகாட்டுதலும் தேவைப்படும்போது, உம் சித்தத்தின்படியே உம் வசனத்தால், தரிசனங்களால், சொப்பனங்களால் என்னை வழிநடத்தும். எல்லா தீங்கிலிருந்தும் என்னை பாதுகாத்து, எல்லா சூழ்நிலையிலும் பத்திரமாக என்னை வழிநடத்தும். எனக்கென்று நீர் ஆயத்தம்பண்ணியுள்ள அற்புதத்தை, ஆசீர்வாதத்தை நான் அடையும்படி நடத்தும். உம் கிருபைக்காகவும் பாதுகாப்புக்காகவும் உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.