நீங்கள் தமக்குச் சொந்த ஜனமாக இருக்கவேண்டுமென்று தேவன் விரும்புகிறார். அவர் உங்களை மிகவும் நேசிக்கிறார்; ஒருபோதும் இன்னொருவருக்குச் சொந்தமாக இருக்கும்படி விடமாட்டார். அவர், "நான் உன்னைத் தெரிந்துகொண்டேன். உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன். என் இரத்தத்தால் உன்னை வாங்கியிருக்கிறேன்," என்று கூறுகிறார். நீங்கள் இயேசுவுக்குச் சொந்தமானவர். ஆகவே, பயப்படாதிருங்கள். இந்த உலகில் நீங்கள் அநாதை அல்ல. கர்த்தர், "நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்" (எரேமியா 30:22) என்று சொல்லுகிறார். அவர் உங்கள் எஜமானரோ அல்லது சிநேகிதரோ மட்டுமல்ல, உங்கள் தேவனும், உங்கள்பேரில் வைராக்கிய அக்கறை கொண்டிருக்கும் அன்பான தகப்பனுமாயிருக்கிறார்.
எப்படி நீங்கள் அவருடன் இப்படியான ஐக்கியத்தை அனுபவித்து மகிழ முடியும்? முதலாவது, உலகத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் உங்களை வேறுபிரித்துக் கொள்ளுங்கள். "அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள்," (2 கொரிந்தியர் 6:17) என்று வேதம் கூறுகிறது. உங்கள் சரீரமும் மனமும் ஜீவிக்கிற தேவனின் ஆலயமாயிருக்கிறது. நீங்கள் அவருக்கு முன்பாக உங்களைப் பரிசுத்தமாகக் காத்துக்கொள்ளும்போது, அவர், "நான் உன்னை ஏற்றுக்கொள்வேன். உனக்குத் தகப்பனாயிருப்பேன். நீங்கள் என் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள்," என்று வாக்குக்கொடுக்கிறார். தேவன் உங்கள் நடுவில் வாசம்பண்ணி, உங்களோடு உலாவுவது எவ்வளவு சிலாக்கியம்.
இரண்டாவதாக, உங்களையே தாழ்த்தி ஜெபியுங்கள். மற்றவர்கள் உங்களுக்கு விரோதமாக பாவம் செய்திருந்தாலும், பொய்யாய் உங்களைக் குற்றஞ்சுமத்தினாலும் தேவனுக்கு முன்பாக தாழ்மையாயிருங்கள் (2 நாளாகமம் 7:14). மன்னிக்கும் இருதயத்துடன் அவரது முகத்தைத் தேடுங்கள். அப்போது அவர் பரலோகத்திலிருந்து உங்களுக்குச் செவிகொடுப்பார்; உங்களை மன்னிப்பார்; சுகத்தை அளிப்பார். உங்கள் குடும்பத்திற்கு, வியாபாரத்துக்கு, உங்கள் ஊழியத்துக்கு எல்லா பகுதியிலும் க்ஷேமத்தை அளிப்பார். எங்கே வெட்கம் உண்டாயிற்றோ, அதே இடத்தில் புகழ்ச்சியும் கனமும் உண்டாகும்படி செய்வார்.
மூன்றாவது, பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுங்கள். கர்த்தரின் ஆவியினால் நாம் மறுரூபமடைந்து இயேசு கிறிஸ்துவின் சாயலில் மகிமையின்மேல் மகிமையடைவோம் என்று வேதம் கூறுகிறது (2 கொரிந்தியர் 3:18). பரிசுத்த ஆவியானவர் உங்கள் குணாதிசயத்தை மாற்றுவார்; உங்கள் உள்ளத்தை புதுப்பிப்பார்; நாளுக்கு நாள் அவரைப்போலாகும்படி செய்வார். இன்று இயேசுவின் கரங்களில் உங்களை முழுவதுமாக ஒப்புக்கொடுங்கள். மனுஷரைக் குறித்த எல்லா பயமும், எல்லா குற்றவுணர்ச்சியும், தீய வல்லமையைக் குறித்த எல்லா பயமும் அகலட்டும். தேவனுக்குரிய ஆசீர்வாதங்கள் அனைத்தையும் அனுபவித்து மகிழுங்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை நிரப்பட்டும்; எல்லா கட்டினையும் உடைக்கட்டும்; இருளின் எல்லா கிரியையையும் விரட்டட்டும்; உங்களை கிறிஸ்துவின் சாயலுக்கு மறுரூபமாக்கட்டும். நீங்கள் இயேசுவுக்குச் சொந்தமானவர்; அவர் ஒருபோதும் உங்களைவிட்டு விலகமாட்டார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை தெரிந்துகொண்டு, உமக்குச் சொந்தமானவனா(ளா)க்கிக் கொள்வதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னை உம் பரிசுத்த ஆவியினால் நிரப்பி, எல்லா தீமையிலிருந்தும் வேறு பிரிக்கப்பட உதவும். என்னையே தாழ்த்துவதற்கும், ஜெபிப்பதற்கும், மற்றவர்களை மன்னிப்பதற்குமான கிருபையை தந்தருளும். ஆண்டவரே, என்னை உம் சாயலுக்கு மறுரூபப்படுத்தும். எல்லா கட்டுகளும் உடைக்கப்படட்டும்; உம் வல்லமை என்னை நிரப்புவதாக. நான் உம்மில் வளருவேனாக; உம் நாமத்திற்கு மகிமையைக் கொண்டு வர கிருபை செய்யும். அனுதினமும் உம் சமாதானம் என் இருதயத்தையும் மனதையும் காத்துக்கொள்ளட்டும். உமக்கு நெருக்கமாக சஞ்சரிக்கவும், உம் அழைப்புக்கு உண்மையாக இருக்கவும் உதவி செய்யும். இந்த ஆசீர்வாதத்திற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


