அன்பானவர்களே, இன்று, "ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது" (மத்தேயு 5:3) என்ற ஆண்டவர் இயேசுவின் வார்த்தைகளைத் தியானிப்போம். பரலோக ராஜ்யம் உங்களுக்கு வேண்டுமென்றால், நீங்கள் அதற்குச் சொந்தமாகவேண்டுமென்றால், பரலோக ஆசீர்வாதங்கள் உங்கள்மேல் பொழிய வேண்டுமென்றால் ஆவியில் எளிமையாயிருக்கவேண்டும் என்று இயேசு கூறுகிறார். எனக்கும் இது பொருந்தும். நாம், ஆவியில் எளிமையாயிருக்கும்போது, எதைப் பெற்றுக்கொள்கிறோம்? தேவ சித்தத்தை நிறைவேற்றும்படி நம்மை தாழ்த்தி ஒப்புக்கொடுக்கும்போது நமக்கு என்ன கிடைக்கிறது?
முதலாவது, தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபை கிடைக்கிறது. "தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது" (யாக்கோபு 4:6) என்று வேதம் கூறுகிறது. தேவன், தாழ்மையுள்ளவர்களுக்கு, ஆவியில் எளிமையானவர்களுக்கு தம் கிருபையை அருளுகிறார். இந்தக் கிருபையினால், நாம் அழிக்கப்படாமல் காக்கப்படுகிறோம். பிசாசும், துன்மார்க்கரும், வஞ்சகர்களும் எழும்பலாம்; இழப்புகள், வியாதிகள், துரோகங்கள் எழும்பலாம். இவை எல்லாவற்றின் நடுவிலும், கர்த்தரின் கிருபையும் பெருகி எழும்பும். கிருபை நம்மை பெருகப்பண்ணி, ஆசீர்வதிக்கும். ஆண்டவர்தாமே இந்த ஆசீர்வாதத்தை இன்று உங்களுக்குத் தந்தருள்வாராக.
இரண்டாவதாக, தேசத்திற்கும் நம் குடும்பங்களுக்கும் செழிப்பு வரும். நம்முடைய பாவங்களை மன்னிக்கும்படி கர்த்தரிடம் ஜெபிக்கும்போது, அவர் தேசத்தின்மேல் செழிப்பைக் கட்டளையிடுகிறார். செல்வத்தால் தேசம் நிரம்பும்படி செய்கிறார்; தேசத்தை காப்பாற்றுகிறார். தேசத்தில் இயேசுவின் சித்தம் நிறைவேறுவதற்கு தடைகளைக் கொண்டு வரும் அதிகாரங்களை அவர் அகற்றுகிறார். ஆம், நாம் அவரது நாமத்தைச் சொல்லி கூப்பிடும்போது, நம்மையே தாழ்த்தி, கர்த்தரின் முகத்தை நோக்கும்போது, தேசத்திற்கு செழிப்பு வருகிறது (2 நாளாகமம் 7:14). அதற்கு நம்மை அர்ப்பணிப்போம். கர்த்தர், தேசத்திற்கு செழிப்பை கட்டளையிடும்போது, நம் குடும்பங்களுக்கும் அதை தருவார்; ஆசீர்வாதத்தை அருளுவார்.
மூன்றாவதாக, தங்களையே தாழ்த்துகிறவர்களை ஆண்டவர் உயர்த்துகிறார். நம்மையே தாழ்த்தி, ஆண்டவருடைய சித்தத்தை நிறைவேற்ற அர்ப்பணிக்கும்போது, உயர்ந்த ஸ்தானங்களுக்கு நம்மை உயர்த்துகிறார். அதை வேதத்தில், "தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான்," (லூக்கா 14:11) என்று வாசிக்கிறோம். ஆண்டவருக்கு முன்பாகவும் மக்களுக்கு முன்பாகவும் தன்னை தாழ்த்தி, சேவை செய்கிறவர்கள் எப்படியாவது ஓர் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வார்கள்; மன்னிக்கிற யாவரும், கொடுக்கிற யாவரும் உயர்த்தப்படுவார்கள்; பிள்ளைகள் உயர்த்தப்படுவார்கள். பூமியில் பலத்திருப்பார்கள்; ஆண்டவர்தாமே இந்த ஆசீர்வாதத்தை உங்களுக்கு அருள்வாராக.
நான்காவதாக, தங்களைத் தாழ்த்துகிறவர்கள் ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறார்கள். "அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு" (நீதிமொழிகள் 11:2) என்று வேதம் கூறுகிறது. பெருமை, அகந்தையைக் கொண்டு வரலாம்; ஆனால், அதில் ஞானம் இருக்காது. அவர்கள் வேலை வெற்றிகரமாக முடிந்துவிட்டால், அந்தத் தருணத்திலேயே பெருமை தலைக்கு ஏறிவிடும். ஒருநாள், அவர்கள் எல்லாவற்றையும் இழந்துபோவார்கள். தாங்கள் செய்வதே சரியென்று கூறுவார்கள். ஆண்டவருக்குப் பயந்து, தாழ்மையுள்ள இருதயத்துடன், பரிசுத்தமாக வாழ்கிறவர்களை அவர்கள் கேலி செய்வார்கள். ஆனால், ஆண்டவரின் பாதத்தில் தாழ்மையாக இருந்து, அவரது சித்தத்தைச் செய்து, பாடுகளின் நடுவிலும் செயல்படுகிறவர்கள் ஞானத்தைப் பெற்றுக்கொள்வார்கள். அந்த ஞானத்தைக் கொண்டு, சாலொமோனைப்போல, அவர்கள் அனைவரின் மரியாதையையும் பெறுவார்கள்; தங்கள் வீடுகளைக் கட்டுவார்கள்; ஆண்டவருக்கென்று ராஜ்யத்தை ஸ்தாபிப்பார்கள்; பரலோக ராஜ்யத்தை சுதந்தரிப்பார்கள். ஆண்டவர்தாமே உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் தம்மிடமிருந்து வரும் தேவ ஞானத்தை அளிப்பாராக. இப்போதே அது உங்கள்மேல் இறங்குவதாக.
ஐந்தாவதாக, ஆண்டவர், தாழ்மையாயிருப்போருக்கு செல்வத்தையும் கனத்தையும் ஜீவனையும் அளிக்கிறார். வேதம், "தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம்" (நீதிமொழிகள் 22:4) என்று கூறுகிறது. ஆண்டவர்தாமே இந்தக் கிருபையை உங்களுக்கு தந்தருள்வராக. தாழ்மை, இயேசுவின் நாமத்தினால் ஐசுவரியத்தை, பெலனை அளிப்பதாக.
அடுத்து, தங்களைத் தாழ்த்துகிறவர்களுக்கு ஜெயம் கிடைக்கும். நிச்சயமாகவே நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இப்போது, தோல்வியும் இழப்புகளும் நேரலாம். வேதம், "சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்" (சங்கீதம் 149:4) என்று கூறுகிறது. அவர்களை ஜெயத்தினால் முடிசூட்டுகிறார். ஆண்டவர் உங்களைக் காப்பாற்றுவார்; பாதுகாப்பார்; உங்கள் குடும்பத்தையும் இரட்சிப்பார்.
மேலும், தாழ்மையாயிருப்போருக்கு கிருபையும் பெலனும் வருகின்றன. வேதம், "பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்" (2 கொரிந்தியர் 12:9) என்று கூறுகிறது. கலங்காதிருங்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மை தேடுகிற, உம் சித்தத்தை நிறைவேற்றுகிற தாழ்மையுள்ள இருதயத்தை எனக்கு அருளிச்செய்வீராக. உம் கிருபை என்னையும் என் குடும்பத்தையும் பாதுகாக்கட்டும்; செழிப்பையும், செல்வத்தையும் கனத்தையும் ஜீவனையும் அளிக்கட்டும். என் பிள்ளைகளை உயர்த்தி பூமியில் அவர்கள் பெலவான்களாக விளங்கப்பண்ணும். எங்களுக்கு ஜெயத்தையும், இரட்சிப்பையும் அருளிச்செய்து, பாவ பழக்கங்களிலிருந்தும் பாரங்களிலிருந்தும் விடுவித்தருளும். எங்கள் பெலவீனங்களில் உம் பெலன் பூரணமாக விளங்கட்டும். எல்லா வலியையும், வியாதியையும், தலைச் சுற்றலையும், கவலையையும், தூக்கமின்மையையும் குணப்படுத்தும். எல்லா இருளும் விலகட்டும்; எல்லா உறுப்புகளும் இயல்பாக செயல்படட்டும். உம் ஆனந்த தைலத்தினால் எங்களை நிரப்பும்; எங்கள் வாழ்வில் உம் ராஜ்யம் ஸ்தாபிக்கப்படட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


