அன்பானவர்களே, இன்றைக்கு உங்களை மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்" (எபிரெயர் 7:25) என்ற வசனத்தை தியானிப்போம். ஆம், அன்பானவர்களே, நம்மை இரட்சிப்பதற்காக இயேசு இருப்பது எவ்வளவு சிலாக்கியம்! இயேசுவின் வாயிலாக நாம் பிதாவிடம் செல்ல முடியும்; இரட்சிக்கப்பட முடியும். பழைய ஏற்பாட்டில் மக்கள் இரட்சிக்கப்படுவதற்கு, ஓர் ஆசாரியனிடம் சென்று தங்கள் பாவங்களை அறிக்கை செய்யவேண்டும்; தகனபலி செலுத்தி, தேவனிடம் மன்னிப்பை கோரவேண்டும் என்று வாசிக்கிறோம். அவர்கள் தேவனுக்கு விரோதமாக ஒவ்வொரு முறை தவறு செய்யும்போதும், இதே நடைமுறையை திரும்பவும் செய்து தேவனிடமிருந்து மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
ஆனால் புதிய ஏற்பாட்டில், இயேசு தம் ஜீவனை நமக்குப் பலியாக கொடுத்ததினால், அவரே நாம் இரட்சிக்கப்படும்படி நித்திய ஆசாரியரானார். நாம் அவரில் விசுவாசம் வைக்கும்போது, நம் பாவங்களுக்காக மரித்து, மறுபடியும் எழுந்தார் என்பதை விசுவாசித்து, இயேசு நம் ஆண்டவர் என்று வாயினால் அறிக்கை பண்ணும்போது, பூரண இரட்சிப்பை பெற்றுக்கொள்கிறோம் (ரோமர் 10:9). நாம் அவரில் விசுவாசம் வைக்கும்போது, அவர் நம் பாவங்களுக்காக மரித்து, மறுபடியும் எழுந்தார் என்றும், இயேசுவே ஆண்டவர் என்றும் நம் வாயினால் அறிக்கையிட்டால் பூரண இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வோம் (ரோமர் 10:9). ஆம், இயேசு என்ற வார்த்தைக்கே இரட்சிப்பு என்பதே பொருளாகும். அவர் தம் இடத்தைவிட்டு நாம் பாவத்திலிருந்து விடுதலையாகும்படி பலியாவதற்காகவே வந்தார். பாவத்தின் சம்பளம் மரணம். ஆனால், அவரை விசுவாசிப்பதின் வாயிலாக, இந்தப் பாவத்திலிருந்து நாம் விடுதலையாகும்படி நமக்காக அவர் பலியானார்.
நாம் இயேசுவை விசுவாசிக்கும்போது, பின்விளைவுகளை சந்திக்கவேண்டிய அவசியம் இருக்காது; நமக்கு நித்திய ஜீவன் கிடைக்கும். இன்று நாம் இயேசுவை விசுவாசித்து, நம் வாயால் அவரே ஆண்டவர் என்று அறிக்கை செய்வோம். அவர் தம் இரட்சிப்பை உங்களுக்குத் தருவார். ஒவ்வொரு நாளும் அவர் உங்களை தம்மால் நிரப்புவார்; நீங்கள் பரிசுத்தமாய் வாழ்வீர்கள்; பாவத்திற்கு நீங்கலாகியிருப்பீர்கள்; பூரண சமாதானமாய் இருப்பீர்கள். இவ்வளவு பெரிதான கிருபைக்காகவும், அதை நம் வாழ்வில் பெற்றுக்கொள்வதற்காகவும் ஆண்டவரை ஸ்தோத்திரிப்போமா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இயேசுவின் வாயிலாக அளித்திருக்கும் பூரண இரட்சிப்பு என்ற ஈவுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் பாவத்தை அகற்றி, எனக்கு நித்திய ஜீவனை அளிக்கும்படி அவரை அனுப்பியதற்காக உமக்கு ஸ்தோத்திரம். ஆண்டவர் இயேசு எனக்காக மரித்து பின் உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்கிறேன். இயேசு என் ஆண்டவரும் இரட்சகருமாயிருக்கிறார் என்று என் வாயினால் அறிக்கையிடுகிறேன். என் இருதயத்தை சுத்திகரித்து, அனுதினமும் உம் பிரசன்னத்தால் என்னை நிரப்பும். பரிசுத்தத்தில் நடந்து பாவமற்ற வாழ்க்கை நடத்த எனக்கு உதவும். உம் சமாதானம் என் வாழ்வில் ஆளுகை செய்யட்டும்; உம் கிருபை என்னை தாங்கட்டும். என்னை நேசிப்பதற்காகவும், பூரணமாக இரட்சிப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இந்த இரட்சிப்பை பெற்றுக்கொண்டு, நன்றியுள்ள இருதயத்துடன் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


