அன்பானவர்களே, மார்ச் 14 - என் தந்தை Dr. பால் தினகரன், தெய்வீக அனுபவத்தைப் பெற்ற நாளாகும். புதிய தீர்க்கதரிசன யுகத்திற்குள் அவரையும், ஊழியத்தையும் கர்த்தர் வழிநடத்துவதைக் காண்பித்தார். இயேசு அழைக்கிறார், காருண்யா, சீஷா அனைத்து ஸ்தாபனங்களையும் 'ஆச்சரியமான, தேவனுடைய வல்லமையான கிரியைகளுக்குள்' நுழையும்படி செய்ததோடு, உலக நாடுகளுக்குள் தீர்க்கதரிசன செயல்பாடாக அது விளங்கி வருகிறது. ஆகவே, தேவன் தாம் வரும் வரைக்கும் தம் தீர்க்கதரிசன அசைவாடுதலை நிறைவேற்றுமாறு இந்தப் பணிக்காக தொடர்ந்து ஜெபித்திடுங்கள். இன்று, கர்த்தர், "உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்" (2 சாமுவேல் 7:9) என்ற வசனத்தின் வாயிலாக நம்மோடு பேசுகிறார். அன்பானவர்களே, தேவன், உங்கள் எதிரிகளின் ஒடுக்குதலையெல்லாம் நிர்மூலமாக்கி உங்களுக்குப் பூரண இளைப்பாறுதலை தருவார். இந்த வசனத்தை பிடித்துக்கொள்ளுங்கள். அவர் அதை ஏற்கனவே செய்துவிட்டார்; அவர் உங்களைப் பின்சென்று காக்கும் தேவனாகவும் இருப்பார். ஆம், அவரே உங்களைப் பாதுகாப்பார்.
நாம் தேவ சித்தத்தைச் செய்யும்போது, தேவனின் நியாயமான வழிகளில் நடக்கும்போது, பரிசுத்த வழிகளைக் கைக்கொள்ளும்போது, தேவன் நம்மை பயன்படுத்தும்விதத்தைப் பார்க்கும் ஜனங்கள் நம்மேல் பொறாமை கொள்வார்கள். அவர்கள், "ஓ! எப்படியிருக்கிறீர்கள்? பரிசுத்தமாக இருப்பதற்கு ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறீர்கள்? நீங்கள் ஏன் வித்தியாசமாக வாழ்கிறீர்கள்? ஏன் எங்களைப்போல இல்லை? உங்களையே பெரியவர் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா?" என்றெல்லாம் கேட்பார்கள். ஆண்டவர் நம்மை ஆசீர்வதித்து வளரச் செய்வதைப் பார்க்கும்போது அவர்களுக்குப் பொறாமை வருகிறது. அப்போது நமக்கு விரோதமாக பொல்லாத காரியங்களைச் செய்ய முயற்சிப்பார்கள். அன்பானவர்களே, நீங்கள் இப்படிப்பட்ட நிலையில் இருக்கிறீர்களா? ஆண்டவர் உங்களோடு இருந்து, உங்களை ஆசீர்வதிப்பதாலும், உங்களைப் பயன்படுத்துவதாலும், எல்லோரும் எதிரிகளாக எழும்புவார்கள் என்று அறிந்துகொள்ளுங்கள். ஆனால், கவலைப்படாதிருங்கள். தேவன் உங்களோடிருக்கிறார். எந்த சத்துருவும் உங்களைத் தொட முடியாது. கர்த்தர், அவர்கள் எல்லோரைக் காட்டிலும், குத்துகிற அவர்கள் வார்த்தைகளுக்கு மேலாகவும், அழிவுக்கேதுவான அவர்கள் செயல்களுக்கு மேலாகவும் உங்களை உயர்த்துவார்.
அவர்கள் கிரியை ஒன்றும் உங்களைத் தொடாது. நீங்கள் எழும்புவீர்கள். எலியா தீர்க்கதரிசிக்கும் அப்படியே செய்தார். அவன் பரலோகத்திலிருந்து தேவ அக்கினியைக் கொண்டு வந்தது அதிசயமல்ல! யேசபேல் ராஜாத்தி மிகவும் கோபமும் பொறாமையும் கொண்டு, எலியாவை அழித்துப்போடுவதாக சபதமிட்டாள். அவன், "கர்த்தாவே, எனக்கு பாதுகாப்பு எங்கே? நான் பயப்படுகிறேன்," என்று முறையிட்டான். கர்த்தர் வந்து அவனைப் பெலப்படுத்தினார். அவர், "எலியாவே, நான் உனக்கு பெரிய வேலையை வைத்திருக்கிறேன். இங்கேயே சாப்பிடு; பெலப்படு. நாம் செல்லலாம்," என்று கூறினார். அவர் அதே வழியில் உங்களைக் கொண்டு செல்வார். அன்பானவர்களே, பெரிய அபிஷேகத்திற்கு, பெரிய வேலைக்கு நம்மை அவர் பயன்படுத்துவார். இப்போதே தேவன் நம் வாழ்க்கையைத் தொடுகிறார்; நம்மைப் பாதுகாக்கிறார். அன்பானவர்களே, அவரை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்ளுங்கள். கர்த்தர், தாம் எங்கெல்லாம் உங்களைக் கொண்டு செல்லவேண்டுமென்று விரும்புகிறாரோ அங்கெல்லாம் கொண்டு செல்வார். அவரது திட்டத்திற்குள் தரிசனத்திற்குள்ளும் உங்கள் வாழ்க்கையை விட்டுவிடுங்கள். அவரை ஏற்றுக்கொள்ளுங்கள். தேவ வல்லமையைப் பெற்றுக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியினால் நிறைந்திருங்கள். கர்த்தர், பெரிய வேலைகளுக்கு, பெரிய வெற்றிக்கு உங்களை அழைத்துச் செல்லட்டும்.
ஜெபம்:
அன்பு தகப்பனே, என் விரோதிகளை நீர் நிர்மூலமாக்கிவிட்டதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். கர்த்தாவே, நீரே என் பாதுகாவலும், பின்னாக என்னைக் காக்கிறவருமாயிருக்கிறீர். எதிர்ப்புகள் எழும்போதும், ஜனங்கள் எனக்கு விரோதமாக பேசும்போதும், உம் வாக்குத்தத்தங்களே எனக்காக நிற்கின்றன என்பதை அறிந்திருக்கிறேன். தீங்கான எல்லா வார்த்தைக்கும் பொல்லாத கிரியைக்கும் மேலாக என்னை உயர்த்தியருளும். எலியா பயந்த வேளையில் அவனை பெலப்படுத்தியதுபோல என்னையும் பெலப்படுத்துவீராக. என்னை தைரியத்தினால் நிரப்பும்; உம் சமுகத்தினால் என் ஆவியை புதுப்பித்தருளும். என் வாழ்க்கைக்கென நீர் ஆயத்தம்பண்ணியிருக்கிற பெரிதான பணிக்குள் என்னை வழிநடத்தவேண்டுமென இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


