அன்பானவர்களே, இன்று (ஜூலை 15) என் அன்பு கணவர் சாம் பிறந்தநாள். என் கணவரிடம் நான் வியக்கும் பல குணங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் தேவன்பேரில் கொண்டிருக்கும் மிகுந்த பயபக்தி ஆச்சரியத்துக்குரியது. ஒவ்வொரு முறை அவர் ஊழியத்திற்குச் செல்வதற்கு முன்பும், நான் அதிகாலையில் எழுந்தால், அவர் அதற்கு முன்பே எழுந்து வேறொரு அறையில் ஜெபித்துக்கொண்டிருப்பதை பார்ப்பேன். அதிகாலை 3 முதல் 4 மணி வரை ஆண்டவரை தேடி, மக்களுக்கு முன்பு நிற்பதற்கு ஏற்ற வார்த்தைக்காக காத்திருப்பார். "ஷில்பா, ஒவ்வொரு முறை நான் மேடைக்குப் போகும்போதும், தேவனுடைய வார்த்தையை கொண்டு செல்வதால் பயமாக உள்ளது," என்று அடிக்கடி கூறுவார். அப்படியான பயபக்தி எப்போதும் அவர் உள்ளத்தில் இருக்கும். அது மக்கள்மீதான பயம் அல்ல; தேவனுடைய வார்த்தையை பகிர்வதில் இருக்கும் மிகுந்த பொறுப்புணர்ச்சி ஆகும். இந்த பயபக்தியினால் தேவன் அவரை கணக்கற்ற வழிகளில் ஆசீர்வதித்து கிருபை பாராட்டுகிறார் என்று நான் உண்மையாக நம்புகிறேன்.
ஒருநாள், "வாழ்க்கையில் நீங்கள் எதைச் சாதிக்க விரும்புகிறீர்கள்?" என்று நான் கேட்டது நினைவுக்கு வருகிறது. அவர் கூறிய பதில் என் உள்ளத்தை ஆழமாகத் தொட்டது. அவர், "ஷில்பா, நான் பெரிய தொழிலதிபராகவோ, புகழ் பெற்றவனாகவோ, எல்லோரும் தெரிந்தவனாகவோ மாற விரும்பவில்லை. தேவ பிரசன்னம் எப்போதும் என்னோடிருக்கவேண்டும் என்றே விரும்புகிறேன். அவரது பிரசன்னத்தை ஒருபோதும் இழக்க விரும்பவில்லை," என்று கூறினார். எவ்வளவு அழகான ஆசை! தேவ சமுகத்தில் நிலைத்திருப்பதே நம் முக்கிய நோக்கமாக இருக்கும்போது, இயல்பாகவே அவரது தயவு நம்மேல் விளங்கும். இதனால்தான் ஆண்டவர் தம் கருணையை, தயவை அவர்பேரில் காட்டுகிறார் என்று விசுவாசிக்கிறேன்.
இன்றைய வாக்குத்தத்தம், "இதோ, நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்" (எசேக்கியேல் 36:9) என்று கூறுகிறது. கர்த்தர், "நான் கிருபையுடன் உன்னை கண்ணோக்குகிறேன்," என்று கூறுகிறார். தம் பிள்ளைகள் அனைவரையும் அவர் நேசிக்கிறார்; தமக்குச் சொந்தமானவர்களை ஆசீர்வதிப்பதில் அவர் பிரியமாயிருக்கிறார். தேவ கிருபை என்பதற்கு, நமக்கு ஒருபோதும் இக்கட்டுகளே நேராது என்று அர்த்தமா? நிச்சயமாக அப்படியல்ல. வாக்குத்தத்தம், பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள் என்று கூறுகிறது. அறுவடைக்கு முன்பு நிலம் ஆயத்தப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறே, உபத்திரவம், இக்கட்டு, சோதனை ஆகிய காலங்களும் உண்டு. இந்த அனுபவங்கள் ஒருபோதும் அர்த்தமற்றவையாகாது. தேவன், நமக்கு அதிகமான ஆசீர்வாதங்களை கொண்டு வருவதற்கு அவற்றைப் பயன்படுத்துவார்.
இதை சாமின் வாழ்க்கையில் பார்த்திருக்கிறோம். ஐந்து அல்லது ஆறு வயதிலேயே மாமாவும் அத்தையும் ஊழியத்திற்காக பயணித்துக் கொண்டே இருந்ததால், பெரும்பாலும் பெற்றோருடன் இருக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. அந்த ஆரம்ப ஆண்டுகளில் தேவனுடைய பணிக்கென பல தியாகங்களைச் செய்யவேண்டியதிருந்தது. ஆனால், ஒவ்வொரு தியாகத்தையும் ஆண்டவர் கனப்படுத்தினார். இன்று ஆண்டவரின் பரிபூரண ஆசீர்வாதங்கள் சாமின் வாழ்க்கையில் விளங்குவதை நாம் பார்க்கிறோம்.
உங்களுக்கும் உண்மையாக இப்படி நடக்கும். நீங்கள் தேவனின் தெரிந்துகொள்ளப்பட்ட பிள்ளையானால், அவர் நீங்கள் ஆயத்த காலத்தை கடந்துபோகும்படி செய்வார். அவரது வழிகளை நீங்கள் புரிந்துகொள்ளாதபோது, உபத்திரவங்கள், ஏமாற்றங்கள் நேரிடலாம். ஆனால், மனந்தளராதிருங்கள். தேவன், பண்படுத்தி, விதைக்கிறார்; அவரே அறுவடையையும் அளிப்பார். அவரது கிருபை உங்கள்மேல் இருப்பதால், ஏற்ற வேளையில், எதிர்பாராதவண்ணம் உங்களை ஆசீர்வதிப்பார்.
இன்று நாம் சாமின் பிறந்தநாளைக் கொண்டாடுவதால், எங்கள் குடும்பத்துக்காக ஜெபிக்கும்படி கேட்கிறேன். உங்கள் அன்புக்கும், ஊக்கத்திற்கும், ஜெபத்திற்கும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். உலக சாதனைகளுக்கும் மேலாய் தேவ சமுகத்தை நாம் ஒவ்வொருவரும் தொடர்ந்து தேடுவோம்; நம் வாழ்வில் அவரது கிருபை தங்கியிருக்கட்டும்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை தெரிந்துகொண்டு, கிருபையுடன் நோக்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உலகப்பிரகாரமான எல்லா சாதனைகளைக் காட்டிலும் உம் சமுகத்தை விரும்பவும், ஒவ்வொரு நாளும் உமக்கு முன்பாக பக்தியுடன் நடக்கவும் எனக்கு உதவும். சோதனையின் காலத்தில், நீர் வாக்குப்பண்ணிய ஆசீர்வாதங்களை எனக்காக ஆயத்தம் செய்கிறீர் என்ற நம்பிக்கையோடு கடப்பதற்கு என்னை பெலப்படுத்தும். ஒவ்வொரு உபத்திரவமும் விசுவாசத்தை பலப்படுத்தட்டும்; நம்பிக்கையை ஆழமாக்கட்டும்; உம் பூரண சித்தத்திற்குள் எங்களை வழிநடத்தட்டும்; ஒவ்வொரு தலைமுறையின்மேலும் உம் தயவு விளங்கட்டும். எங்களை உம் சமுகத்தால் நிரப்பி, எங்கள் வாழ்க்கையை உம் மகிமைக்கென்று பயன்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


