அன்பானவர்களே, இன்று உங்களோடு தியானிப்பதில் மகிழ்ச்சி. நாம், "நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன்" (நெகேமியா 1:9) என்ற வசனத்தைத் தியானிப்போம். இதை முழுவதுமாக வாசித்தால், "நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்" என்று இருக்கிறது.

இந்த வசனம் எவ்வளவு நிச்சயமான ஆறுதலை அளிக்கிறது. நாம் எவ்வளவு தொலைவில் அலைந்து திரிந்தாலும், தேவனிடம் திரும்பும்போது, அவர் நமக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கும், தெரிந்தெடுத்திருக்கும் இடத்துக்கு அன்போடு திரும்பக் கொண்டு வருகிறார். பலவேளைகளில் நாம், "என் வாழ்க்கைக்கு எது சிறந்ததென்று எனக்குத் தெரியும்," என்று நம்பி, தேவனை விட்டு தூரமாக ஓடிப்போகிறோம். உண்மையான சந்தோஷம் எங்கே இருக்கும் என்று நமக்குத் தெரியும் என்று எண்ணி நம் சொந்த பாதையை தெரிந்தெடுப்போம். அது குறிப்பிட்ட ஒரு வேலையாகவோ, நாம் வாழவேண்டும் என்று ஏங்கிய பட்டணமாகவோ, நாம் விரும்பிய வாழ்க்கை முறையாகவோ இருக்கலாம். இந்தக் காரியங்களை நாம் தொடர்ந்து செய்யும்போது மெதுவாக ஆண்டவரிடமிருந்தும், நம் வாழ்க்கையைக் குறித்த அவர் பூரண திட்டத்திலிருந்தும் விலகிப் போய்விடுகிறோம். அவரது சமுகத்தையும், அவர் நமக்கென்று தெரிந்தெடுத்திருக்கும் இடத்தையும் விட்டு விடுகிறோம்.

இது ஊதாரியான மகனின் கதையை நினைவுப்படுத்துகிறது. அவன், உலகத்தில் அதிக சந்தோஷத்தை அடைந்திடலாம் என்ற நம்பிக்கையில் தகப்பனின் வீட்டைவிட்டுச் சென்றான். தன் விருப்பப்படியே வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினான். ஆகவே, தனக்கான பங்கை எடுத்துக்கொண்டு, தனக்கு உரிய இடம் என்ற எண்ணத்தில் தூர தேசத்திற்குச் சென்றான். ஆனாலும், எல்லாவற்றையும் செலவிட்ட பிறகு, தன் செல்வம், ஆறுதல், சமாதானம் அனைத்தையும் இழந்தான். தாழ்வான தருணத்தில் தன் தந்தையை நினைத்தான். முன்பிருந்த வாழ்க்கையை, தேறுதலை, சந்தோஷத்தை, தகப்பன் வீட்டில் இருந்த பாதுகாப்பை, எதைக் குறித்து கவலையில்லாதிருந்ததை எண்ணிப்பார்த்தான். தன் தவற்றை உணர்ந்தான். வேலைக்காரனாயிருந்தாலும் போதும் என்று வீடு திரும்ப தீர்மானித்தான். திரும்பும்போது, தகப்பன் தன்னை நிராகரித்துவிடுவாரோ என்று பயந்தான். வேலைக்காரர்களில் ஒருவனாக வைத்துக்கொள்ளும்படி இரக்கத்திற்காக கெஞ்சலாம் என்றும் அவன் எதிர்பார்த்துதான் வந்தான். அவன் தகப்பன், தொலைவிலேயே அவனை பார்த்த தருணத்தில், ஓடிவந்து, தழுவிக்கொண்டு, அதிக அன்புடன் அவனை வரவேற்றார். அவர் அவனை ஏற்றுக்கொண்டு, மரியாதைக்குரிய ஆடையை அணிவித்து, தன் மகன் உண்மையாகவே மனந்திரும்பிவிட்டான் என்பதை அறிந்து அன்பு மகனாக மறுபடியும் ஏற்றுக்கொண்டார்.

இப்படியே நம் பரம தகப்பன் நமக்கு பதில் செய்கிறார். உலக ஆசைகளை, பாவ வழிகளை, சுயவிருப்பங்களை விட்டுவிட்டு மனந்திரும்பி அவரிடம் வரும்போது, அவர் நம்மை குற்றப்படுத்துவதில்லை. மாறாக, நம்மை மன்னிக்கிறார்; சீர்ப்படுத்துகிறார்; அவர் நமக்காக ஆயத்தம்பண்ணியுள்ள இடத்தில் நம்மை மறுபடியும் அமர்த்துகிறார். அவரது வார்த்தை கூறுகிறபடியே, நாம் இருக்குமிடத்திலிருந்து நம்மை சேர்த்துக்கொண்டு, தம் நாமம் விளங்கும்படி அவர் தெரிந்துகொண்ட இடத்துக்கு நம்மை கொண்டு வருகிறார். அவரிடம் திரும்பும்படியும், அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்படியும், அவரது சித்தத்திற்கேற்ப வாழும்படியும் மாத்திரமே ஆண்டவர் நம்மிடம் கேட்கிறார். நாம் அப்படிச் செய்யும்போது, அவர் நமக்கென்று நினைத்திருக்கிற, ஏற்ற இடத்தில் நம்மை நிலைப்படுத்துவார்.

இன்று நாம் எல்லா உலக ஆசையையும், விருப்பத்தையும் விட்டுவிடுவோம். நீங்கள் திரும்புவதற்காக தேவன் காத்திருக்கிறார். தகப்பன், ஊதாரியான தன் மகனை வரவேற்றதுபோல, கரங்களை விரித்து உங்களை ஏற்றுக்கொள்ள அவர் வாஞ்சிக்கிறார். இன்று அவரிடம் திரும்புவதற்கு தீர்மானித்திடுங்கள். தேவன் உங்கள் எதிர்காலத்திற்கென ஆச்சரியமான திட்டத்தை வைத்திருப்பதால் மீண்டும் உங்கள் வாழ்க்கையை அவர் கரங்களில் ஒப்படையுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்மை விட்டு அலைந்து திரிந்தாலும் என்னை நேசிக்கிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம் பரிபூரண சித்தத்திற்கு மாறாக என் சுயவழியை தெரிவு செய்யும் ஒவ்வொரு நேரமும் என்னை மன்னித்தருளும். என் முழு இருதயத்தோடும் உம்மிடம் திரும்புகிறேன். என் வாழ்க்கையைச் சீர்ப்படுத்தும்; உடைந்த எல்லா துண்டுகளையும் சேகரியும்; நீர் எனக்கென்று ஆயத்தப்படுத்தியிருக்கும் இடத்துக்கு என்னை வழிநடத்தும். உம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும், அனுதினமும் உம் வழிகளில் பிரியப்படவும் எனக்கு உதவும். உம்மை விட்டு என்னை விலக்கும் எல்லா உலக ஆசையையும் அகற்றும்; உம் சமாதானத்தாலும் நோக்கத்தாலும் என் உள்ளத்தை நிரப்பிடும். உம் சித்தத்தின் மையத்தில் என்னை நிலைப்படுத்தி, உம் சீர்ப்படுத்தும் கிருபைக்கு என் வாழ்க்கையை சாட்சியாக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.