அன்பானவர்களே, ஆண்டவர் உங்கள் பாதைகளை நேராக்கி, உங்கள் வாழ்க்கையில் தம் நோக்கத்தை நிலைப்படுத்த விரும்புகிறார். அவர் வழிநடத்தும் பாதையில் நம்பிக்கையோடு நடந்திடுங்கள். அவரது ஆசீர்வாதத்தை, சமாதானத்தை, பாதுகாப்பை, பரிபூரண சித்தம் நிறைவேறுவதை அனுபவிப்பீர்கள். பயப்படாதிருங்கள்; அதைரியப்படாதிருங்கள்; கலங்காதிருங்கள்; சந்தேகப்படாதிருங்கள். கர்த்தரின் பாதை எப்போதும் ஜீவனுக்கு, ஆசீர்வாதத்துக்கு, வெற்றிக்கு வழிநடத்தும். "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்" (சங்கீதம் 37:5) என்று வேதம் கூறுகிறது. உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரைப் பற்றிக்கொள்ளுங்கள். தொடர்ந்து இயேசுவின் நாமத்தை கூப்பிட்டு, உங்களை வழிநடத்தும்படி கேளுங்கள். அவரது ஆசீர்வாதங்களைக் காணும்போது, தொடர்ந்து அவரை துதியுங்கள்; அவர் தம் நோக்கத்தை உங்கள் வாழ்க்கையில் நிறைவேற்றுவார்.

என்னென்ன வழிகளை ஆண்டவர் நமக்குத் திறக்கிறார்?

நம் வழிகள் அழிவுக்கு நேரானவை என்று வேதம் எச்சரிக்கிறது. "மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்" (நீதிமொழிகள் 14:12). ஆதலால், நாம் தேவனுடைய வழிகாட்டுதலை தொடர்ந்து தேட வேண்டும். தாவீது, "கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்" (சங்கீதம் 86:11) என்று ஜெபிக்கிறான். "கர்த்தாவே உமது வழியை எனக்குப் போதியும். நான் உமது சத்தியத்திற்கு பயந்திருப்பேன். நான் உமது நாமத்திற்கு பயந்திருக்கும்படி என் இருதயத்தை வழிநடத்தும்" என்று நாமும் ஜெபிக்கவேண்டும்.

எனக்கு ஆறு வயதாயிருந்தபோது, என்னுடைய பிறந்தநாள் அன்று ஆண்டவர், என் தந்தை வாயிலாக பேசினார். அவர், "மகனே, உனக்கு முன்பதாக இரண்டு பாதைகளை வைக்கிறேன். ஒன்று மீனின் பாதை. அந்தப் பாதை நேராக இருக்கும். மீன் நேராகத்தான் போகும். ஆனால், மற்றொரு பாதை, மற்றொன்று நண்டின் பாதை. நண்டு எப்போதும் கோணலாகப் போகும். என்ன செய்தாலும் கோணலாகத்தான் போகும். இரண்டையும் வைக்கிறேன். நீ எந்தப் பாதையை தெரிந்தெடுக்கப்போகிறாய்? மீன்போல நேர்ப்பாதையில் போனால் ஆசீர்வாதம். நண்டுபோல குறுக்குப் பாதையில் கோணலான பாதையில் போனால் சாபம்தான் வரும்," என்று சொன்னார். அருமையானவர்களே, மனுஷனுடைய வழிகள் மரண வழிகள்.  ஆனால் ஆண்டவரை நோக்கி நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஜெபம்பண்ணும்போது, அவர் நம்மை தமக்குப் பயந்திருக்கும்படி செய்து, சத்தியத்திலே நடக்கவைத்து, ஜீவனைக் கொடுக்கும் பாதையிலே நடத்துகிறார். "நானே ஜீவன். நானே வழி. நானோ உயிர்த்தெழுதல். நானே சத்தியம்," என்று அவர் கூறுகிறார். அந்தக் கிருபையை ஆண்டவர் உங்களுக்குத் தருவாராக.

முதலாவதாக, ஆண்டவருடைய வழி, பரிசுத்த வழி. "துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" (சங்கீதம் 1:1,2) என்று வேதம் கூறுகிறது.

அருமையானவர்களே, நாம் கர்த்தருடைய வழியில் ஆண்டவர் இயேசுவின் வழியில் வேதத்தை வாசித்து அதன்படி நடக்கும்போது, துன்மார்க்கருடைய வழியில் நடவாமல் பாவிகளுடைய பாதையில் நில்லாமல், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் இருக்கிறோம். அது நம்மை பாதுகாக்கிறது. அப்போது மரண வழிகள் நம் வாழ்வில் வருவதில்லை.

இரண்டாவதாக, ஞானத்தின் வழி. ஆண்டவர் நமக்கு ஞானத்தின் வழியைக் கொடுக்கிறார். வேதம், "ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்" (நீதிமொழிகள் 4:11) என்று கூறுகிறது. ஞான மார்க்கத்தை, ஞான பாதையை, ஞான வழியை உனக்குப் போதித்தேன் என்று இந்த வசனத்தில் வாசிக்கிறோம். அது செவ்வையான பாதையாக இருக்கிறது. தேவன், இதை எப்படி செய்கிறார்? வேதம், "நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்"  (சங்கீதம் 32:8) என்று கூறுகிறது. ஆண்டவரே உங்கள்மேல் கண்ணை வைத்து, போதித்து உங்களை நடத்துவார். அவருடைய சத்தம், "வழி இதுவே, இதில் நட நட" என்று  நம் இருதயத்தில் கேட்கிறது. அதில் நடந்தால், நிறைவான இறைவனுடன் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்கிறோம். இயேசு நமக்காக சம்பாதித்து வைத்திருக்கும் ஆசீர்வாதம் நமக்குக் கொடுக்கப்படுகிறது. இந்த ஞானத்தின் பாதையில் நடப்பதற்கு கர்த்தர் உங்களுக்குக் கிருபை செய்வாராக.

மூன்றாவதாக, ஒழுக்கத்தின் வழி. "புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை  வெறுக்கிறவனோ மோசம்போகிறான்" (நீதிமொழிகள் 10:17). புத்திமதியை, ஆலோசனையை காத்துக்கொள்கிறவன், காத்துக் கொள்கிறவள் ஜீவ வழியில் இருக்கிறாள்(ன்). கண்டிப்பை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். கண்டித்தாலே எல்லோருக்கும் கோபம் வருகிறது. "என் வழியில் நான் போவேன். எனக்கு ஓர் அடையாளம் இருக்கிறது. நான் திட்டமிட்டவைகளை செய்வேன். நான் இஷ்டப்படி தூங்குவேன். காலையில் எப்போது வேண்டுமானாலும் எழும்புவேன். ராத்திரியெல்லாம் விழித்திருப்பேன். எதை வேண்டுமானாலும் பார்ப்பேன்," என்று கூறுகிறார்கள்.  ஒழுக்கத்தின் வழியை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது அதை வெறுக்கிறார்கள். கண்டிப்பை வெறுக்கிறவர்கள், மோசம்போகிறார்கள். நீங்கள் ஏன் மோசமடையவேண்டும்? புத்திமதிகளைக் காத்துக்கொண்டு, ஜீவவழியிலே நடவுங்கள். எப்போதும் எல்லோரிடமும் ஆலோசனை கேளுங்கள். ஆண்டவர் வழிநடத்துவார். எங்கள் குடும்பத்திலும் எல்லோரையும் வைத்து, இப்படி தீர்மானம் பண்ணுகிறோம். 'இப்படி பண்ணினால் நல்லது' என்று யோசிக்கிறோம். "எப்படி செய்வது?" என்று இளம் பிள்ளைகள் வரை நான் கேட்பதுண்டு. என்ன ஆச்சரியம்? பாலகர் வாயினாலே ஆண்டவர் துதியை ஏற்படுத்துகிறார். ஞானத்தோடு அவர்கள் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். சரியான ஒரு வழிநடத்துதல் கிடைக்கும். எல்லோருக்குள்ளும் ஆச்சரியமான ஒரு மனமகிழ்ச்சி உண்டாகும். "உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்" (நீதிமொழிகள் 3:6) என்று வேதம் கூறுகிறது. எல்லா காரியங்களிலும் அவரை நினைத்துக்கொள்ளுங்கள்.

நிறைவாக, இயேசு, 'நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்' (யோவான் 14:6)என்று சொல்லுகிறார். "நானே உன்னை நடத்துவேன். ஒழுக்கத்தின் பாதையில் நடத்துவேன். ஆண்டவருடைய சித்தத்தை நிறைவேற்றும்படியாக நான் சிலுவையை எடுத்துக்கொண்டு நடந்தேன். நீயும் அப்படியே நடக்கும்படி செய்வேன். அப்பொழுது ஜீவ வழியில் நடப்பாய்," என்று கூறுகிறார். அதனால்தான், இயேசு, மூன்றாம் நாள் உயிரோடு எழும்பினார். பிதாவின் சித்தத்தை அப்படியே நிறைவேற்றினார். நாமும் கூட ஒவ்வொரு காரியத்திலும், வேலை காரியத்திலும், குடும்ப காரியத்திலும், ஊழிய காரியத்திலும் சொந்த வாழ்க்கை காரியத்திலும் புத்திமதிகளை ஆண்டவருடைய வழிநடத்துதல்களை பெற்றுக்கொண்டு நம்மை பரிசுத்த வாழ ஒப்புக்கொடுப்போம். ஆண்டவருடைய வழிநடத்துதலை கேட்டு செய்வோம். அப்பொழுது சகல காரியங்களிலும் நாம் ஜீவனை அனுபவிக்கும்படி ஆண்டவர் செய்வார். உங்கள் வழிகளையெல்லாம் கர்த்தருக்கு ஒப்புவித்து அவர்மேல் நம்பிக்கையாயிருங்கள். அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என் வழிகள் யாவற்றையும் உம்மிடம் ஒப்படைக்கவும், முழு இருதயத்தோடு உம்மை நம்பவும் உதவி செய்யும். உம் பரிசுத்தத்தை, ஞானத்தை, நீதியான வழிகளை எனக்குக் கற்பித்து, தினமும் உம் சத்தியத்தில் நடக்கும்படி வழிகாட்டும். என் பாதையை நான் தெரிந்தெடுக்காமல், ஜீவ பாதையில் என்னை வழிநடத்துவீராக. உம் கட்டளைகளைப் பெற்றுக்கொள்ளும்படியான தாழ்மையை எனக்கு அருளி, உம் சத்தத்திற்குக் கீழ்ப்படிய ஞானத்தை தந்திடும். என் பாதையை நேராக்கி, என் கையின் பிரயாசங்களை நிலைப்படுத்தி, என் வாழ்வில் உம் பூரணம் விளங்கிடும்படி செய்வீராக. உம் ஆசீர்வாதத்தை, பாதுகாப்பை நான் அனுபவிக்கும்படி செய்து, உம் கிருபை என்னை தொடரப்பண்ணவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.