அன்பானவர்களே, ஆண்டவர் இன்றைக்கு உங்களை தம் ஜெயமுள்ள அன்பினால் நிரப்ப விரும்புகிறார். அவரது அன்பு உங்கள்மேல் பலத்த வெள்ளமாக ஊற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. உங்களை அவர் அதிகமாய் நேசிக்கிறார். இன்று அவர் அன்பு, உடைந்த எல்லா உள்ளங்களையும், தளர்ந்துபோன ஒவ்வொரு ஆத்துமாவையும், அவரது சமுகத்தை விரும்புகிற ஒவ்வொருவரையும் சந்திக்கிறது. என் தகப்பனார் ஆண்டவரை முகமுகமாய் பார்த்தபோது, அந்த அன்பு இயேசுவின் கண்களிலிருந்து பாய்ந்து இவரது உள்ளத்தை முழுவதுமாய் நிரப்பியது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம், அந்த தெய்வீக அன்பில் அவர் மூழ்கியிருந்தார். அவரது துக்கம், கண்ணீர் யாவும் மறைந்து, சொல்லிமுடியாத சந்தோஷத்தால் நிரப்பப்பட்டு தேவ சமுகத்தில் சிரித்து களித்தார். வேறொரு தருணத்தில், இயேசு எனக்கும் என் மனைவிக்கும் நடுவே நின்று கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் ஒரு வார்த்தையும் பேசாமல் எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார். அவரது அன்பின் கண்கள் எங்கள்மேல் இருந்தபோது, அவரது சமுகத்தை அதிகமாய் உணர்ந்தோம்; ஆனந்தக் கண்ணீர் வடித்தோம். இன்றைக்கு அதே அன்பு உங்களை நோக்கிப் பாய்ந்து வருகிறது. இயேசு உங்களை மறந்துவிடவில்லை. அவர் மனதுருக்கத்தோடு உங்களை நோக்கி, "என் பிள்ளையே," என்று அழைக்கிறார். அவரது அன்பு உங்கள் உள்ளத்தை நிறைத்து, உங்களுக்கு வெற்றியைத் தரும்.

வேதம், "ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும்," என்று கூறுகிறது (சங்கீதம் 63:3). கிறிஸ்துவின் அன்பு ஜீவனைக் காட்டிலும் மேலானது. சோதனையை ஜெயிக்க அவரது அன்பு நம்மை பெலப்படுத்தும். உபத்திரவம், வியாகுலம், துன்பம், பசி மற்றும் வேறு எந்தச் சூழ்நிலையும் கிறிஸ்துவின் அன்பினின்று நம்மை பிரிக்க முடியாது என்று வேதம் கூறுகிறது (ரோமர் 8:35-39). இன்று நீங்கள் எந்தப் போராட்டத்தை எதிர்கொண்டாலும், இயேசுவின் அன்பு அதைக் கடக்கப்பண்ணும். அவர் உங்களை நேசிப்பதால், எல்லா சவால்களையும் மேற்கொண்டு நீங்கள் ஜெயம் பெறுவீர்கள்.

என் தங்கை ஏஞ்சல் மரித்த வேதனையான தருணத்தையும் நான் நினைக்கிறேன். எங்கள் குடும்பம் துக்கத்தாலும் கண்ணீராலும் நிறைந்திருந்தது. ஒருநாள் காலையில், நாங்கள் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, இயேசு தோன்றினார்; அன்போடு, "என் பிள்ளைகளே, மற்றவர்கள் கூறுவதை நீங்கள் ஏன் நம்புகிறீர்கள்? ஏஞ்சல் மரணத்திற்கு பிறகும் நீங்கள் நான் நல்லவர் என்று தொடர்ந்து நம்புகிறீர்கள். குடும்பமாக தினமும் என்னிடம் வருகிறீர்கள். நான் உங்களை எப்படி கைவிடுவேன்? நீங்கள் எனக்கு விசேஷித்தவர்கள்," என்று கூறினார். ஆறுதலான அந்த வார்த்தைகள் எங்களைப் பெலப்படுத்தின. எங்களை இன்னும் அதிக பரிபூரணமாக ஆசீர்வதிப்பதாக ஆண்டவர் உறுதியளித்தார். கடந்த நாற்பது ஆண்டுகளாக, நாங்கள் அவரது உண்மையை கண்டுவருகிறோம். அவர் எங்களுக்கு ஜெயத்தின்மேல் ஜெயத்தை அருளி, லட்சக்கணக்கான மக்களை ஆசீர்வதிக்க இந்த ஊழியத்தை பயன்படுத்தி வருகிறார். உண்மையுள்ள அதே தேவன் உங்களுக்கும் ஜெயத்தை தருவார்.

இரண்டாவதாக, இயேசுவின் அன்பு பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்," என்று வேதம் தேவ அன்பின் ஆழத்தை வெளிப்படுத்துகிறது (யோவான் 3:16). ஒவ்வொரு பாவிக்கும் தேவ அன்பு அவ்வளவு மகத்தானதாகும்.

என்னுடைய பதினாறாவது வயதில் தேவனை விட்டு விலகி அலைந்துகொண்டிருந்தேன். என் அம்மா செவ்வாய்க்கிழமைதோறும் எனக்காக உபவாசித்து ஜெபிக்கத் தொடங்கினார்கள். நாற்பத்தாறு ஆண்டுக்குப் பிறகும் அவர்கள் எனக்காக தொடர்ந்து ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள். சில வார காலம் ஜெபித்ததுமே, தேவன் அந்த ஜெபங்களுக்குப் பதில் அளித்தார். என் வாழ்வை முற்றிலுமாய் மறுரூபப்படுத்தினார். என்னை தம் பிள்ளையாக்கினார்; அவரது சேவைக்கு அழைத்தார்; என் குடும்பத்தை ஆசீர்வதித்தார்; ஊழியத்தில் என்னை உயர்த்தினார். அதே இயேசு இன்று உங்களையும் அழைக்கிறார். உங்கள் பாவங்களுக்காக அவர் ஒருபோதும் உங்களை புறக்கணிக்கமாட்டார். தம் விலையேறப்பெற்ற இரத்தத்தால் எல்லா அநியாயமும் நீங்கும்படி உங்களைச் சுத்திகரிப்பார். அவரிடம் வாருங்கள். அவர் நித்திய அன்போடு உங்களை அணைத்துக்கொள்வார்; உங்கள் பாவங்களை மன்னிப்பார்; உங்கள் வாழ்க்கையை மறுரூபமாக்குவார்.

இறுதியாக, தேவனுடைய அன்பு ஒருபோதும் மாறாது. அது நித்தியமாய் உங்களைத் தழுவிக்கொள்ளும். மலைகள் அதிர்ந்தாலும், பர்வதங்கள் விலகினாலும் அவரது கிருபை நம்மைவிட்டு ஒருபோதும் விலகாது என்று வேதம் நினைவுப்படுத்துகிறது (ஏசாயா 54). பெற்றோரை, வேலையை, பொருளாதாரத்தை, உறவுகளை நீங்கள் இழந்திருக்கலாம். நீங்கள் நேசித்தவர்கள், உதவி செய்தவர்கள், தியாகம் செய்தவர்களே உங்களுக்கு விரோதமாய் எழும்பியிருக்கலாம். ஆனாலும், இயேசு ஒருபோதும் உங்களை விட்டு விலகமாட்டார். மாறாத அவரது அன்பு உங்களைத் தேற்றும்; பெலப்படுத்தும்; கனப்படுத்தும்; நீங்கள் இழந்த எல்லாவற்றையும் திரும்ப தரும். அவர் உங்கள் உள்ளத்தை தம் அன்பினால் நிரப்புவார்; மற்றவர்களிடம் அன்புகூரும்படியும் மன்னிக்கும்படியும் செய்வார். கிறிஸ்துவின் கிருபையை இன்று பெற்றுக்கொள்ளுங்கள். இழந்தவை எல்லாம் திரும்ப கிடைக்கட்டும். துக்கத்தில் தேறுதல் கிடைக்கட்டும்; எல்லா பாரமும் அகற்றப்படட்டும்; உங்கள் வாழ்க்கை முழுவதும் அவரது சமாதானம், பரிசுத்தம், செழிப்பு, ஜெயம் நிரம்பட்டும். அவரது நேசம், ஜீவனைக் காட்டிலும் மேலானது.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நித்தியமான, மாறாத அன்பை என்மீது கொண்டிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் உள்ளத்தில் வெறுமையாக இருக்கும் எல்லா இடத்தையும் உம் அன்பு நிரப்பி, பயத்தை, துக்கத்தை, அதைரியத்தை அகற்றுவதாக. உம் அன்பினின்று எதுவும் என்னை பிரிக்க முடியாது என்ற திடநம்பிக்கையில் நிலைத்திருக்க உதவும். என் பாவங்களை மன்னித்தருளும். இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் என்னை சுத்திகரியும். உம் சித்தத்திற்கேற்ப என் வாழ்வை மறுரூபப்படுத்தும். இழந்தவை எல்லாவற்றையும் திரும்ப தந்தருளும். துக்கப்படும் இருதயத்தை தேற்றுவீராக. உம் சமாதானத்தாலும் கிருபையாலும் என் குடும்பத்தை ஸ்திரப்படுத்துவீராக. எல்லா உபத்திரவங்களிலும் உம் அன்பே எனக்கு வெற்றியை தருவதாக. உம் நன்மைக்கு, மற்றவர்களுக்கு நான் சாட்சியாக விளங்க உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.