அன்பானவர்களே, இன்றைக்கு, "கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்" (ஏசாயா 27:3) என்ற வாக்குத்தத்த வசனம் கொடுக்கப்பட்டுள்ளது. நம் அன்பான தகப்பனிடமிருந்து எவ்வளவு ஆச்சரியமான நிச்சயம் கிடைத்துள்ளது! நம் தேவன் தம் பிள்ளைகளை கண்ணோக்குகிறார்; பாதுகாக்கிறார்; அவர்கள் செழிக்கும்படி, வேண்டியவற்றை அருளிச்செய்கிறார். இந்த உலகில் நாம் சோதனைகளை, ஆபத்துகளை எதிர்கொள்கிறோம். ஆனால், ஆண்டவர் தாமே நம்மை காப்பதாக கூறுகிறார். வேதத்தில் நாம் லிவியாதான் என்ற பிசாசை, சாத்தானை குறிக்கும் சர்ப்பத்தை பற்றி வாசிக்கிறோம் (ஏசாயா 27:1). சாத்தான், தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போகும்படி ஆதாமையும் ஏவாளையும் சோதித்தான். அவன் இப்போதும் நம்மை பாவத்தின் மூலம், பயத்தின் மூலம், அதைரியத்தின் மூலம் தேவனை விட்டு புறம்பே இழுக்க வகை தேடுகிறான். ஆனாலும் கர்த்தர், "என் பட்டயத்தால் வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவேன்" என்று வாக்குக்கொடுக்கிறார். நமக்கு விரோதமாக எழும்பும் சத்துருவின் வல்லமையை, அவருடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்க முயற்சிக்கும் சக்திகளை அழிப்பார்.
நம் கர்த்தர் சத்துருவை அழிப்பதோடு, தம் பிள்ளைகளை பத்திரமாக வழிநடத்தவும் செய்கிறார். "வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்" (யாத்திராகமம் 23:20)என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். எவ்வளவு அன்பான பாதுகாவலர் நமக்கு இருக்கிறார்! "இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்" (சங்கீதம் 121:4, 7)என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. இன்று கர்த்தர் உங்கள் குடும்பத்தை, உங்கள் வேலையை, உங்கள் ஆரோக்கியத்தை, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை, உங்கள் பொருளாதாரத்தை காப்பதாக வாக்குப்பண்ணுகிறார். அவர் உங்கள்மேல் அன்பாயிருப்பதால், உங்கள் வாழ்க்கையைக் குறித்த எல்லாவற்றையும் பார்க்கிறார். வேதம், "நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்" (சங்கீதம் 32:8)என்று கூறுகிறது. மெய்யாகவே, அவரது கண்கள் உங்களை வழிநடத்தி, ஆசீர்வதித்து, காப்பதற்காக இரவும் பகலும் உங்கள்மேல் வைக்கப்பட்டிருக்கிறது.
இயேசுதாமே, "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும்" (யோவான் 7:38)என்று கூறுகிறார். இயேசு தரும் பரிசுத்த ஆவியானவர், நம்மை அனுதினமும் போஷித்து பெலப்படுத்தும் ஜீவத்தண்ணீர் ஊற்றாக இருக்கிறார். அவர் உங்கள் ஆத்துமாவை பாதுகாப்பார்; ஆவியை புதுப்பிப்பார்; உங்கள் வாழ்க்கையை ஆசீர்வாதத்தால் நிரப்புவார். வேதம் கூறுகிறபடி, அமர்ந்த தண்ணீர்களண்டையில் உங்களை நடத்தி, உங்கள் ஆத்துமாவை தேற்றுவார் (சங்கீதம் 23:2). அன்பானவர்களே, பயப்படாதிருங்கள். உங்கள் சரீரத்தை, மனதை, ஆத்துமாவை காக்கிறவரின் கரங்களில் ஒப்படையுங்கள். இன்றைக்கு அவரது தெய்வீக பாதுகாப்பு, அவரது வழிநடத்துதல், அவரது செழிப்பு உங்களுக்கு வருகிறது. தேவன் உங்களுக்கென்று திட்டம்பண்ணியுள்ள ஆசீர்வாதங்கள் எவையோ, அவை நிச்சயமாக ஜீவத்தண்ணீராக உங்கள் வாழ்வில் பாயும். அவரை நம்புங்கள்; ஒவ்வொரு அடியிலும் அவரது கரம் உங்களை பாதுகாப்பதை காண்பீர்கள்.
ஜெபம்:
அன்பின் தகப்பனே, என்னை பாதுகாக்கிறவராகவும் வேண்டியவற்றை அருளிச்செய்கிறவராகவும் இருக்கிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எந்தத் தீங்கும் என்னை அணுகாமல் இரவும் பகலும் என்னை பாதுகாத்தருளும். உமது பரிசுத்த ஆவியானவரின் அமர்ந்த தண்ணீர்களண்டையில் என்னை நடத்தி, சமாதானத்தினால் நிரப்பும். என் குடும்பத்தை, என் வேலையை ஆசீர்வதியும்; என் எதிர்காலத்திற்கு உம் தெய்வீக பாதுகாப்பை அளித்தருளும். உம்முடைய ஆசீர்வாதங்களுக்குள் என்னை வழிநடத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.