"அவர் தமக்கு பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு அவர்களை இரட்சிக்கிறார்" (சங்கீதம் 145:19). இதுவே இன்றைய ஆசீர்வாதமான வாக்குத்தத்த வார்த்தை. ஆண்டவர் நம்முடைய மனவிருப்பத்தின்படியே செய்கிறவர். அவர் எப்படி நம்முடைய விருப்பத்தின்படி செய்கிறார்? சங்கீதம் 20:4-ஐ வாசித்துப்பாருங்கள், அவர் நமது விருப்பத்தின்படியே செய்து, நமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவார். ஆம், உங்கள் மனவிருப்பத்தின்படியே ஒவ்வொன்றையும் ஆண்டவர் உங்களுக்கு தந்தருளுவார். அவர் எப்பொழுது நம் விருப்பத்தின்படி, நம் வாழ்வில் கிரியைகளை நடப்பிப்பார்? நாம் ஆண்டவருக்கு பயப்படும்பொழுது. நாம் பிசாசையும், இச்சையையும், பாவத்தையும் நம்முடைய இருதயத்திலிருந்து தள்ளி, நம்மை பரிசுத்தமாய் காத்துக்கொண்டு, இயேசுவை நம்முடைய இருதயத்திலே வைத்திருக்கும்பொழுது, அவர் நம் மனவிருப்பத்தின்படி ஒவ்வொரு காரியத்தையும் நமக்காக செய்து முடிப்பார்,

நம்முடைய யோசனைகளை அவருடைய தீர்மானத்தின்படி செயல்படுத்தும்பொழுது, அவர் தமது திட்டத்தை நமக்கு விருப்பமாக தருகிறார். நம் வாழ்வில் நமக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை உலகத் தோற்றத்திற்கு முன்னதாகவே அவர் தீர்மானம் பண்ணி வைத்திருக்கிறார். அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் அவரில் அன்புகூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது என்று அறிந்திருக்கிறோம் (ரோமர் 8:28). இதுதான் ஆண்டவருடைய தீர்மானம். நாம் அவருக்கு பயந்து, பயபக்தியோடு நடந்து, "ஆண்டவரே உம்முடைய தீர்மானம் என்ன? அதை என் உள்ளத்தில் வெளிப்படுத்தும்" என்று ஒவ்வொரு நாளும் ஜெபிக்கும்பொழுது, அதை அவர் நம் வாழ்வில் நிறைவேற்றுகிறார். "கர்த்தரோடு இசைந்திருக்கிறவன் அவரோடு ஒரே ஆவியாயிருக்கிறான்" என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. ஆகவே, உமது தீர்மானத்திற்கான திட்டத்தை எனக்கு தெரியப்படுத்தும் என்று ஜெபியுங்கள். அப்படியே நீங்கள் ஆண்டவருக்கு பயந்து பயபக்தியோடு வாழும்பொழுது, அவர் உங்கள் மனவிருப்பத்தின்படியே உங்களுக்கு அருளிச் செய்து உங்களை ஆசீர்வதிப்பார்.

அப்படி பாக்கியம் பெற்ற ஒரு தம்பதியினர் ஆல்ஃபா, அருணேஷ். இப்பொழுது அவர்கள் இங்கிலாந்தில் இருக்கிறார்கள். இருவரும் காருண்யாவில் படித்தவர்கள். மிகுந்த பயபக்தியோடு இருந்த அருணேஷ் மீது கர்த்தருடைய ஆவியானவர் அளவில்லாமல் இறங்கினார். காருண்யாவிலும், பெதஸ்தாவிலும் நடைபெறும் ஆவிக்குரிய காரியங்களில் முதன்மையாக நிற்கும்படி கர்த்தர் அவரை அபிஷேகித்தார். எல்லா மாணவ மாணவிகளின் முன்பதாக, கர்த்தருக்கென்று வைராக்கியமான சாட்சியாக நிற்கும்படி கிருபை செய்தார். அவர் படித்துக்கொண்டிருக்கும்போதே, Cognizant என்ற பெரிய நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதன்பின்பு இங்கிலாந்து சென்று அங்கே வேலை செய்தார். இப்பொழுது, அங்கு சொந்தமாக கம்பெனி ஆரம்பித்து நடத்த கர்த்தர் அருள்புரிந்திருக்கிறார். அதேபோல, அவருடைய மனைவி ஆல்ஃபாவும், காருண்யாவில் படிக்கும்பொழுதே ஆவியானவரால் நிரப்பப்பட்டாள்; டெக் மஹிந்திராவில் நல்ல வேலையைக் கொடுத்து ஆசீர்வதித்தார். பின்பு, C.T.S. நிறுவனத்திலும், அதைத் தொடர்ந்து National Health Service என்ற நிறுவனத்திலும் வேலை செய்தார்கள். அதன்பின்பு, இங்கிலாந்திலுள்ள பிரிட்டிஷ் டெலிக்காம் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. ஆல்ஃபா, அருணேஷ் இருவருக்கும் திருமணம் நடந்தது. ஆண்டவர் அவர்களுக்கு அழகிய இரண்டு குழந்தைகளைக் கொடுத்து ஆசீர்வதித்தார். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும்" என்ற சத்தியத்தின்படி, கர்த்தர் அவர்கள் விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றி, இன்று அவர்கள் மற்றவர்களுக்கும் வேலை கொடுக்கும்படியாக அவர்களை உயர்ந்த ஸ்தானத்திற்கு உயர்த்தி ஆசீர்வதித்து வைத்திருக்கிறார். அப்படியே உங்களையும், உங்கள் பிள்ளைகளையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.

ஜெபம்: 
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய ஆவியை உம்மோடு இணைத்தருளும். நான் பயபக்தியோடு, உலக இச்சைகளையும், உலக பயங்களையும், திகில்களையும் தள்ளிவிட்டு, உம்மையே பற்றிக்கொண்டிருக்கும்படி கிருபை செய்தருளும். நான் உம்மை உண்மையாய் தேடி, உம்மையே பின்பற்ற எனக்கு கிருபை தாரும். உம்முடைய ஆவியினாலும், வல்லமையினாலும் என்னை நிரப்புவீராக. நீர் என் மனவிருப்பத்தின்படியே, என் வாழ்க்கையில் சகல ஆசீர்வாதங்களையும் தந்து, உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கப்போவதற்காக நன்றி செலுத்துகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன். ஆமென்.