அன்பானவர்களே, இன்று உங்களோடு தேவனுடைய வார்த்தையை தியானிப்பதில் மகிழ்ச்சி. இன்றைய வாக்குத்தத்த வசனம், "கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்" (சங்கீதம் 34:7) என்று கூறுகிறது. என் சின்ன வயதில் நடந்த ஒரு நிகழ்வை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். எங்கள் குடும்ப ஜெபத்தின்போது, எங்கள் பெற்றோர் அருகில் நானும் என் தங்கை ஷேரனும் பயபக்தியாய் முழங்காற்படியிட்டு, கரங்களைக் கூப்பி, ஜெபித்துக்கொண்டிருப்போம். என் தாத்தா ஜெபத்தை நடத்தும்போது, பாதியிலேயே கவனம் சிதறி, நானும் அவளும் ஒருவருடன் ஒருவர் விளையாட ஆரம்பிப்போம். சத்தம் கேட்டதும், ஜெபம் நடந்துகொண்டிருக்கும்போதே எங்கள் அப்பா எங்களை கண்டித்து ஒழுங்குப்படுத்துவார்.
ஜெபம் முடிந்ததும், ஒரு காரியம் நடக்கும். அந்த நிகழ்வை பார்த்திராத என் தாத்தா, என் அப்பாவிடம், "அவர்கள் இரண்டுபேரையும் அடித்தாயா?" என்று கேட்பார். என் அப்பா ஆச்சரியப்பட்டு, எப்படி அவருக்குத் தெரிந்தது என்று கேட்பார். என் தாத்தா, இரண்டு தேவ தூதர்கள் எங்கள் அருகே நின்றிருப்பதை ஆண்டவர் காண்பித்ததாகவும், எங்களைக் கண்டித்தபோது, அந்த தேவ தூதர்கள் எங்கள் அருகில் விரைந்து வந்ததாகவும் கூறுவார்.
தேவன் எதற்கு அந்த தூதர்களை அனுப்பினார்? பிள்ளைகளாகிய நாங்கள் ஆண்டவருக்குப் பயந்து, எங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து, அவருக்காகப் பாடல்களைப் பாடி, தொலைக்காட்சியில் வேதாகம கதைகளைக் கூறி அவருக்கு பிரியமானவற்றை செய்து வந்ததால், ஆண்டவர், எங்களைப் பாதுகாக்கும்படி தம் தூதர்களை அனுப்பினார். தேவனுடைய அக்கறையை நினைவுப்படுத்தும் மறக்க முடியாத அனுபவம் அதுவாகும்.
அன்பானவர்களே, அதே வாக்குத்தத்தம் இன்று உங்களுக்குச் சொந்தமாயிருக்கிறது. ஆண்டவர், தனிப்பட்டவிதத்தில் உங்களைக் காக்கும்படி தூதர்களை நியமித்திருக்கிறார். எல்லா தீய தாக்குதலிலிருந்தும் அவர்கள் உங்களைப் பாதுகாப்பார்கள். சத்துருவின் சதியாலோசனைகளுக்கு பாதுகாப்பார். நீங்கள் ஒருபோதும் தனியே இருக்கமாட்டீர்கள். ஆண்டவருக்குப் பயந்து, நீங்கள் கீழ்ப்படிதலுடன் நடந்து, உண்மையாய் அவரைச் சேவிக்கும்போது, அவரது கண்காணிக்கும் கண்கள் உங்கள்மேல் இருக்கும். தம்மை நம்புகிறவர்களை அவர் விடுவிப்பதால், உங்களுக்கு விரோதமான தீமை எதுவும் உங்களை மேற்கொள்ளாது. திடநம்பிக்கையோடு இந்த வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொள்ளுங்கள். தேவன், உங்களைப் பாதுகாக்கும்படி, விடுவிக்கும்படி, எல்லா சவால்கள் வழியாகவும் பத்திரமாக உங்களை நடத்தும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்குப் பயப்படுகிறவர்களை உம் தூதர் சூழ்ந்துகொண்டு விடுவிப்பதாக கொடுத்திருக்கும் அருமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். பயபக்தியாய், கீழ்ப்படிதலுடன், அனுதினமும் உமக்கு முன்பாக உண்மையாய் வாழ்வதற்கு எனக்கு உதவி செய்யும். என்னையும் என் குடும்பத்தையும் உம் பரிசுத்த தூதர்கள் சூழ்ந்துகொண்டு, எல்லா தீய தாக்குதல், ஆபத்து, வியாதி, பயம், சத்துருவின் சகல யோசனைகளிலிருந்தும் பாதுகாப்பார்களாக. முன்னேற முடியாமல் எங்களைத் தடுக்கும் எல்லா சங்கிலிகளையும் உடைத்து, உம் பலத்த வல்லமையால் எங்களை பூரணமாக விடுவித்தருளும். எங்கள் இருதயங்களை உம் சமாதானத்தினால், தைரியத்தினால், சந்தோஷத்தினால் நிரப்பும். உம் சமுகத்தில் திடநம்பிக்கையோடு நடந்து, உம்மை உண்மையாய் சேவித்து, நாங்கள் செய்கிற எல்லாவற்றிலும் உம்மை மகிமைப்படுத்த உதவும். உம் தெய்வீக பாதுகாப்பு எப்போதும் எங்கள்மேல் இருப்பதாக என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


