அன்பானவர்களே, இன்றைக்கும் உங்களை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். புதுப்பெலன் ஆண்டவரிடமிருந்து வருகிறது. அவரது வார்த்தை நம்மை பெலப்படுத்துகிறது. வேதம், "ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்" (கலாத்தியர் 6:8) என்று கூறுகிறது. நித்திய ஜீவனை, பரலோகத்தில் நித்திய ஜீவனைக் குறித்து நாம் பார்த்தோமானால், சிறு குழந்தை தன் முதிய வயதுக்காக பணத்தை சேமிப்பதன் முக்கியத்துவத்தை அறியாது. ஆம், சின்னவர்களாக இருக்கும்போது நம்மால் அதைச் சிந்திக்கக்கூட முடியாது. அதைப்போல, நித்திய ஜீவனின் மகிமையை நம்மால் காண முடியாது. இந்த உலகில் நாம் வாழும்போது, பரலோகத்தில் நம் வாழ்க்கையை கற்பனை செய்யவோ, பார்க்கவோ நம்மால் இயலாது. அதனால், இந்த உலகத்திலுள்ள உலக நன்மைகளைப் பெறும்படிக்கே நாம் வாழ்கிறோம்.
நித்திய ஜீவனின் மகிமை அழகானது. தேவன், நமக்கு பரலோகத்தில் வாசஸ்தலங்களை ஆயத்தம்பண்ணுவதாகக் கூறுகிறார். பரலோகத்தில் துக்கமே இல்லை. அங்கே மனமுடைந்து போகாது. அங்கு வியாதியோ, அழுகையோ இல்லை. இந்த பூமியில் நாம் வாழ்ந்த காலத்தைக் காட்டிலும் நித்திய ஜீவன் நீண்டதாகும். ஆனாலும் நம் மனம் எழுபது, எண்பது, தொண்ணூறு வயது வாழக்கூடிய பூமியையே நோக்குகிறது. ஆனால் இந்த வசனம், "ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்" என்று கூறுகிறது. தேவனை விட்டுவிடாமல் இந்த உலகத்தின் பாடுகளை சகித்து பரிசுத்த ஆவியானவரை பிரியப்படுத்தினால், தேவனுடைய பதிலுக்காக, அவர் அருளும் நித்திய ஜீவனுக்காக காத்திருந்தால், இந்த உலகத்தின் கவனச் சிதறல்களை விட்டுவிட்டு, பரலோகத்தை ஆதாயப்படுத்துவதற்காக காரியங்களை தியாகம் பண்ணினால், அவரது போதனைகளைக் கேட்டு, தவறான பழக்கங்களை, வழிகளை விட்டுவிட்டால் அவரைப் பிரியப்படுத்துவதோடு, இன்னும் மேலானவற்றை, பரலோகத்தில் நித்தியத்தை சம்பாதிக்கலாம்.
பரலோகத்தின் தேவனை கிட்டிச்சேர்ந்ததன் மூலமாக ஸ்தேவான் மகா நித்தியத்தை கண்டடைந்தான். பூமியில் எந்த அளவு அதிகமாக பரலோகத்தை அனுபவிக்கிறோமோ, அந்த அளவுக்கு பரலோகத்தை நெருங்குவோம். வேதாகமத்தில் ஸ்தேவான், இயேசுவை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது அவன் மேல் கல்லெறிந்தார்கள். ஸ்தேவான் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தான். அவன் கண்கள் பரலோகத்திற்கு திறந்திருந்தன; பரலோகத்தில் இருந்த இயேசுவைப் பார்த்தன. அவன், "ஆண்டவரே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும். என்மீது கல்லெறிந்தவர்களை மன்னித்தருளும்," என்று கூறினான். இந்தப் பூமியிலேயே, பரலோகத்திற்கு நெருக்கமாக, தேவனுடன் நீதியில் அவனால் நிற்க முடிந்தது. இப்போது அதே கிருபையை நாமும் பெற்றுக்கொள்வோமா?
ஜெபம்:
அன்பின் ஆண்டவரே, என் செய்கைகள், வார்த்தைகள் யாவற்றிலும் பரிசுத்த ஆவியானவரை பிரியப்படுத்த எனக்கு உதவும். அவருக்குக் கீழ்ப்படியும்படி செய்யும். முற்றிலும் உமக்கு அர்ப்பணித்து பொறுமையோடு காத்திருக்க உதவும். என் ஆவியை உமக்கு அர்ப்பணிக்கிறேன். ஆண்டவரே, என்னை உம் மார்பில் அரவணைத்து, பரலோகத்தை எனக்குத் திறந்து, நித்திய ஜீவனை பெற உதவும். நான் கடந்து சென்ற பாடுகளை நீர் அறிவீர்; உமக்காக நான் செய்த தியாகங்களையும் அறிந்திருக்கிறீர். ஆண்டவரே, பூமியிலேயே பரலோக சந்தோஷத்தை அனுபவிக்க உதவும். உம் சந்தோஷத்தாலும் பரலோக சமாதானத்தாலும் என்னை நிரப்பிடும். பூமியில் உம்மோடு நடப்பேனாக; ஒருநாள், நித்திய ஜீவனையும் பெறுவேனாக. ஆண்டவரே, இந்த விலையேறப்பெற்ற ஈவுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நீர் என் அருகில் இருக்கிறீர் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


