எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்று, "நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்" (சங்கீதம் 23:6) என்ற வசனத்தை தியானிப்போம். இதைக் கூறிய தாவீது, தன் இளவயதிலிருந்தே கர்த்தரை உண்மையாய் தேடினான். அவன், "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்" (சங்கீதம் 23:1) என்று கூறியதை நாம் அறிவோம். ஆம், அன்பானவர்களே, நீங்களும் எப்போதும் அப்படியே சொல்லவேண்டும். கர்த்தரை மேய்ப்பராகக் கொண்டிருக்கும் அனுபவத்தைப் பெற்றிருக்கிறீர்களா? அதனால் கர்த்தர் தாவீதை பூரணமாய் ஆசீர்வதித்தார்.
வேதம், "சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்," (ஏசாயா 60:22) என்று கூறுகிறது. இந்த வசனத்தின்படி, தாவீது, மேய்க்கும் தொழில் செய்த இளைஞனாக இருந்தான். ஆனால், அவன் தன் பரம தகப்பனில் விசுவாசம் கொண்டிருந்தான். அவன், "நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்" என்று கூறினான். தாவீது, மேய்க்கும் இளைஞனாக இருந்தபோதிலும், அவன் வாழ்வை, "அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின்..." என்று வேதம் விவரிக்கிறது (1 நாளாகமம் 29:28). தேவன் அவன் வாழ்க்கையை ஆசீர்வதித்தார். உலகில் அவன் அதிகமான நாட்கள் வாழ்ந்தான். காரணம் என்ன? "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்" என்று நம்பியதே ஆகும்.
இளம் பிள்ளைகளே, நீங்கள் இயேசுவே உங்கள் ஒரே இரட்சகர் என்று விசுவாசிக்கிறீர்களா? இயேசுவை விசுவாசித்து அவரை உங்கள் தேவனாகவும் இரட்சகராகவும் இளவயதிலேயே ஏற்றுக்கொண்டீர்களானால், தாவீதைப்போல உங்கள் வாழ்வு முழுவதும் பூரணமாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். இப்போதே நம் வாழ்வை இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து, நம் வாழ்வில் இந்த ஆசீர்வாதங்கள் அனைத்தையும் பெற்றுக்கொள்வோம்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, தாவீதின் வாழ்க்கைக்காகவும் எங்கள் நல்ல மேய்ப்பராக நீர் இருப்பதாலும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இளமையிலிருந்தே உம்மை உண்மையாய் தேடுவதற்கும், எங்கள் பரம தகப்பனாக உம்மை நம்பவும் உதவிடும். ஆண்டவர் இயேசுவை எங்கள் ஒரே இரட்சகராக ஏற்றுக்கொள்ளவும், வாழ்நாளெல்லாம் உம் சமுகத்தில் இருக்கவும் உதவும். எல்லா மீறுதல்களிலிருந்தும், தேவையற்ற காரியங்களிலிருந்தும் எங்களை காத்து உம் வழிகளில் நடத்திடும். எங்கள் வாழ்க்கையை சமாதானத்தாலும் சந்தோஷத்தாலும் ஐசுவரியத்தாலும் கனத்தாலும் பரிபூரண ஆசீர்வாதத்தாலும் நிறைத்திடும். எங்கள் வாழ்க்கை வர்த்தித்து அநேகருக்கு ஆசீர்வாதமாக விளங்குவதாக. அனுதினமும் எங்களை உம்மிடம் கிட்டிச்சேர்த்து வாழ்வில் உம் ஆசீர்வாதத்தை பெருகப்பண்ணவேண்டுமென்று இயேசுவின் வல்ல நாமத்தில் வேண்டுகிறேன், ஆமென்.

தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்
Donate Now


